தேடுதல்

Vatican News
மாரனைட் வழிபாட்டுமுறையின் முதுபெரும்தந்தை, கர்தினால் ராய் மாரனைட் வழிபாட்டுமுறையின் முதுபெரும்தந்தை, கர்தினால் ராய்  (DRB)

இலெபனான் மக்களுள் 55 விழுக்காட்டினர் வறுமைக்கோட்டிற்கு கீழ்

இலெபனான் நாட்டில், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், மத்தியகிழக்கு நாடுகள், மற்றும், சக்திமிகுந்த நாடுகளின் பகடைக்காய்களாக பயன்படுத்தப்படுவது குறித்து, கர்தினால் கவலை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

இலெபனான் நாட்டில் புதிய அரசு நிர்வாகத்தை வடிவமைத்து செயல்படுவதில், அந்நாட்டின் அரசுத்தலைவரும், பிரதமரும் ஒன்றிணைந்து உழைக்கவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார், கர்தினால் Beshara Raï.

பல மாதங்களாக, மோதல்கள், பதட்டநிலைகள், மற்றும் பேச்சுவார்த்தைகளை சந்தித்து வரும் இலெபனான் நாடு, புதிய அரசை அமைப்பது குறித்த எவ்வித உடன்பாடுமின்றி, புதிய ஆண்டில் நுழைந்துள்ளது, வெட்கத்திற்குரிய செயல் என்ற கவலையையும் வெளியிட்டுள்ளார், அந்நாட்டு கர்தினால் ராய்.

இலெபனான் நாட்டில், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், மத்தியகிழக்கு நாடுகள், மற்றும், சக்திமிகுந்த நாடுகளின் பகடைக்காய்களாக பயன்படுத்தப்படுவது குறித்து, தன் கவலையை வெளியிட்ட, மாரனைட் வழிபாட்டுமுறையின் முதுபெரும்தந்தை, கர்தினால் ராய் அவர்கள், புதிய அரசு அமைக்கப்படுவதை தடைசெய்ய எவருக்கும் அதிகாரமில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

புதிய அரசவையை அமைக்கும்படி பணிக்கப்பட்ட Saad Hariri அவர்கள், பிரதமராக நியமிக்கப்பட்டு, இரண்டு மாதங்களுக்கு மேல் கடந்துள்ளபோதிலும், நாடு எவ்வித தீர்வுமின்றி, நிர்வாக, மற்றும், பொருளாதார அழிவைநோக்கி சென்றுகொண்டிருக்கிறது என்ற கவலை, கர்தினால் ராய் அவர்களால் வெளியிடப்பட்டது.

மும்முறை இலெபனானின் பிரதமராக பதவி வகித்துள்ள Saad Hariri அவர்களை, பிரதமராக நியமித்து, புதிய அரசை உருவாக்க, அரசுத்தலைவர் Michel Aoun அவர்கள், கடந்த அக்டோபர் மாதத்திலேயே பணித்துள்ளபோதிலும், எவ்வித நிர்வாக முன்னேற்றமும் இன்றி, நாடு சென்று கொண்டிருப்பதாக, கர்தினால் ராய் அவர்கள், மீண்டும் தன் கவலையை வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே பல்வேறு துன்பகரமான சூழல்களை சந்தித்து வந்த இலெபனான் நாட்டில், கடந்த ஆகஸ்ட் மாதம், தலைநகர் பெய்ரூட்டில் இடம்பெற்ற இரு வெடிகுண்டு விபத்துக்களும், கோவிட்-19 கொள்ளைநோயும், நாட்டின் மக்களுள் 55 விழுக்காட்டினரை, வறுமைக்கோட்டிற்கு கீழ் தள்ளியுள்ளது என்று, கர்தினால் ராய் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார். (AsiaNews)

04 January 2021, 13:56