தேடுதல்

அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களின் விடுதலையைக் கோரி, இலண்டனில் இந்திய தூதரகத்திற்குமுன் போராட்டம் அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களின் விடுதலையைக் கோரி, இலண்டனில் இந்திய தூதரகத்திற்குமுன் போராட்டம் 

ஸ்டான் சுவாமி - இங்கிலாந்து ஆயர்களின் திறந்த மடல்

உலகின் பல நாடுகளில், மனித உரிமைகளை இழந்தோர் நடுவே உழைத்து, உயிர்துறந்துள்ள இயேசு சபையினரைப் போல, ஸ்டான் சுவாமி அவர்களும், மனித உரிமைகள் மறுக்கப்பட்டு வாழும் பழங்குடியினரிடையே உழைத்து வந்தார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

மனித உரிமைகளைப் பாதுகாக்க உழைத்துவந்த இயேசு சபை அருள்பணியாளர் ஸ்டான் சுவாமி அவர்களை, எவ்வித ஆதாரமும் இன்றி, தன்னிச்சையாக கைது செய்துள்ள இந்திய அரசின் போக்கைக் குறித்து கவலை எழுப்பியுள்ள ஐ.நா. அவையின் பிரதிநிதிகளுடன் நாங்களும் எங்கள் கவலையை வெளியிடுகிறோம் என்று, இங்கிலாந்து கத்தோலிக்கத் தலைவர்கள், இந்திய நடுவண் அரசுக்கு திறந்த மடல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இங்கிலாந்தின் வெஸ்ட்மின்ஸ்டர் பேராயர் கர்தினால் வின்சென்ட் நிக்கோல்ஸ், மற்றும் பிரித்தானிய இயேசு சபை மறைமாநிலத்தின் தலைவர், அருள்பணி Damin Howard ஆகிய இருவரும் கையொப்பமிட்டு வெளியிட்டுள்ள இம்மடலில், வயது முதிர்ச்சி, உடல்நலக் குறைவு ஆகியவற்றால் தளர்ந்துள்ள அருள்பணி சுவாமி அவர்களை, மனிதாபிமான அடிப்படையில், உடனடியாக பிணையலில் விடுவிக்க இந்திய அரசைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

உலகின் பல நாடுகளில், மனித உரிமைகளை இழந்தோர் நடுவே உழைத்து, உயிர்துறந்துள்ள இயேசு சபையினரைப் போல, ஸ்டான் சுவாமி அவர்களும், மனித உரிமைகள் மறுக்கப்பட்டு வாழும் பழங்குடியினரிடையே உழைத்து வந்தார் என்பதை, இம்மடல் வலியுறுத்திக் கூறியுள்ளது.

அக்டோபர் 8ம் தேதி கைது செய்யப்பட்டு, கடந்த 100 நாள்களுக்கும் மேலாக, எவ்வித நியாயமான விசாரணையும் இன்றி, சிறையில் அடைக்கப்பட்டுள்ள 83வயது நிறைந்த அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், ‘பார்கின்சன்ஸ்’ எனப்படும் நரம்புத் தளர்ச்சி நோயாலும், இன்னும் சில உடல் நலக்குறைவுகளாலும் துன்புறுகிறார் என்பதை, கர்தினால் நிக்கோல்ஸ் அவர்களும், அருள்பணி Howard அவர்களும் இம்மடலில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களின் விடுதலையைக் கோரி, இந்திய ஆயர் பேரவை, தமிழக ஆயர் பேரவை, ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பு, இங்கிலாந்து, மற்றும் வேல்ஸ் ஆயர்கள், மற்றும், ஐ.நா.நிறுவனத்தின் மனித உரிமை அமைப்பு ஆகிய குழுமங்கள் தங்கள் விண்ணப்பங்களையும், கண்டனங்களையும் வெளியிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 January 2021, 14:35