தேடுதல்

“தன்னைப் படைத்தவனைக் கண்டதும், தண்ணீர் நாணம் கொண்டு சிவந்தது.” - Lord Byron “தன்னைப் படைத்தவனைக் கண்டதும், தண்ணீர் நாணம் கொண்டு சிவந்தது.” - Lord Byron 

விவிலியத்தேடல்: திருப்பாடல்கள் நூல் - அறிமுகம் 3

பிறமொழிக் கவிதைகளைப்போல், எபிரேயக் கவிதைகள், வார்த்தை வடிவங்களில் அதிகம் கவனம் செலுத்தவில்லை. எபிரேயக் கவிதைகளில் எண்ணங்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

ஜெரோம் லூயிஸ் – வத்திக்கான்

விவிலியத்தேடல்: திருப்பாடல்கள் நூல் - அறிமுகம் 3

18ம் நூற்றாண்டில், கேம்பிரிட்ஜ் (Cambridge) பல்கலைக்கழகத்தில், மறைக்கல்வியை மையப்படுத்தி தேர்வு ஒன்று நடந்தது. கானா திருமண விருந்தில் இயேசு ஆற்றிய புதுமையைக் குறித்து கட்டுரை ஒன்றை எழுதுமாறு கேள்வி அமைந்திருந்தது. அந்த கட்டுரையை உருவாக்க, இரண்டு மணி நேரமும் வழங்கப்பட்டது. மாணவர்கள் அனைவரும் மிகத் தீவிரமாக எழுதிக் கொண்டிருந்தனர். ஒரு மாணவர் மட்டும், ஒன்றும் எழுதாமல், ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருந்தார். இறுதி மணித்துளிகள் நெருங்கியபோது, ஏனைய மாணவர்கள் பக்கம் பக்கமாக கட்டுரைகளை உருவாக்கியிருந்த வேளையில், இவர் மட்டும், விடைத்தாளில், ஒரு சில சொற்களை எழுதி சமர்ப்பித்தார். அந்தச் சொற்கள், வரலாற்று புகழ்பெற்ற சொற்களாக மாறின. “The conscious waters saw their Creator and blushed” அதாவது, “தன்னைப் படைத்தவனைக் கண்டதும், தண்ணீர், நாணம் கொண்டு சிவந்தது” என்ற புகழ்மிக்க அந்தச் சொற்களை உருவாக்கியது, புகழ்பெற்ற ஆங்கிலக் கவிஞர், Lord Byron என்று சொல்லப்படுகிறது.

இச்சொற்களை, John Dryden, Lord Byron, Alexander Pope, Richard Crashaw என்று பல்வேறு கவிஞர்கள், உருவாக்கியதாகவும் சொல்லப்படுகிறது. யார் உருவாக்கினார் என்பதைவிட, இச்சொற்களில் பொதிந்துள்ள கவிதைநயம், நாம் மேற்கொண்டுள்ள விவிலியத்தேடலுக்கு உதவியாக உள்ளது.

எத்தனையோ உலகப் புகழ்பெற்ற கவிதைகளை யார் எழுதினார்கள் என்பதில் ஒன்றுக்கொன்று முரணான பல விவரங்கள் உள்ளன. நாம் அதிகம் போற்றும் திருக்குறளை எழுதியது திருவள்ளுவர் என்று எளிதில் சொல்லிவிடுகிறோம். ஆனால், அந்தத் திருவள்ளுவர் யார் என்பதில்தான் எத்தனை வேறுபட்ட கருத்துக்கள்!

விவிலியத்திலும், பல நூல்களுக்கு, தனிப்பட்ட ஒருவரை ஆசிரியராகக் கூறிவிட முடியாது. இப்போது, நாம் விவிலியத்தேடலை மேற்கொண்டுள்ள திருப்பாடல்கள், மன்னன் தாவீதால் எழுதப்பட்டவை என்று பொதுவாகக் கூறுகிறோம். ஆனால், தாவீது மட்டும் இந்நூலின் ஆசிரியர் அல்ல. இந்நூலில் உள்ள அதிகமான திருப்பாடல்களை தாவீது எழுதினார் என்றாலும், மோசே, சாலமோன் என்று, மற்றவர்கள் எழுதியுள்ள பாடல்களும், இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

கவிதைகளை எழுதியது யார் என்பதை விட, அவற்றில் சொல்லப்பட்டுள்ள எண்ணங்கள், அவை சொல்லப்பட்டுள்ள அழகு... இவைகளே இன்றைய நம் தேடலுக்கு பயனுள்ளவை. கானாவில் இயேசு ஆற்றிய முதல் புதுமையைப்பற்றி பக்கம் பக்கமாக கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. மூன்று ஆண்டுகளுக்கு முன், 2018ம் ஆண்டின் துவக்கத்தில், வத்திக்கான் வானொலியில், இப்புதுமையைப்பற்றி 10 விவிலியத்தேடல்களை மேற்கொண்டோம். அந்த 10 விவிலியத்தேடல்களையும் ஒரு சேர இணைத்தால், ஏறத்தாழ 30 பக்கங்கள் கொண்ட கட்டுரையை உருவாக்கலாம். அந்த 30 பக்கங்களில் சொல்லப்பட்டுள்ள கானா திருமணப் புதுமை, ஒருசில வார்த்தைகளில் கவிதை நயத்துடன் அழகாகச் சொல்லப்பட்டுள்ளது : “தன்னைப் படைத்தவனைக் கண்டதும், தண்ணீர் நாணம் கொண்டு சிவந்தது.”

கட்டுரைகளில் சொல்லப்படும் கருத்துக்கள் மனதில் பதியலாம். ஆனால், கட்டுரைகளின் ஒவ்வொரு வரியும் மனதில் பதிய அதிகம் வாய்ப்பில்லை. கவிதைகளுக்கு அந்த சக்தி உண்டு. கவிதைகளின் சொல் நயம், எதுகை மோனை வடிவில் வெளிவரும் சந்தநயம், கவிதை வரிகளில் பொதிந்திருக்கும் கற்பனை வளம், அவ்வரிகளை வாசிக்கும்போது நமக்குள் தோன்றும் கனவுகள்... இவற்றின் விளைவாக, கவிதைகளின் வரிகள் மனதில் பதியும் சக்தியைப் பெறுகின்றன.

கவிஞர்கள், கவிதைகள் என்று பேச ஆரம்பித்தால், நாம் தேடலை மேற்கொண்டுள்ள திருப்பாடல்கள், நம் சிந்தனைகளில் பின்தங்கிப்போகும். இன்று, திருப்பாடல்களில் உள்ள கவிநயம் பற்றி சிந்திப்பதே நம் முக்கியப் பணி. அதற்குமுன், விவிலியத்தில் காணப்படும் கவிதைகளைப்பற்றி சிந்திப்போம்.

விவிலியத்தில், வரலாறு, கவிதைகள், பழமொழி, கற்பனைக் கதைகள் என்று பல இலக்கிய வடிவங்கள் உள்ளன. இவை, தனித்தனி வடிவங்களாய் இல்லாமல், ஒன்றோடொன்று கலந்து காணப்படுகின்றன. திருப்பாடல்கள் என்ற இந்த நூல் முழுவதிலும் கவிதைகள் மட்டுமே உள்ளன.

விவிலியத்தில் கவிதைகள் உள்ளன என்ற எண்ணம், 18 ஆம் நூற்றாண்டு வரை அதிகம் பேசப்படவில்லை. அதற்கு இரு காரணங்கள் உண்டு.

முதல் காரணம் – விவிலியம், கடவுளின் வெளிப்பாடு, கடவுளின் வார்த்தைகள் அடங்கிய நூல் என்ற எண்ணம், மிக அதிகம் வலுப்பெற்றிருந்ததால், விவிலியத்தில் என்ன கருத்துக்கள் சொல்லப்பட்டுள்ளன என்பதைப்பற்றியே அதிகம் பேசினோம், சிந்தித்தோம். அக்கருத்துக்கள் எவ்வாறு சொல்லப்பட்டுள்ளன என்பதைப்பற்றிய சிந்தனைகள் மிகக்குறைவாகவே இருந்தன. சொல்லப்பட்டுள்ள விடயம் (Matter) தான் முக்கியம், சொல்லப்பட்ட வடிவம் (Form) முக்கியமல்ல என்ற எண்ணம் அதிகம் வலுவடைந்திருந்ததால், செய்யுள், கவிதை என்ற வடிவத்தைப்பற்றி அதிக சிந்தனைகள் எழவில்லை.

2வது காரணம்: பிறமொழிக் கவிதைகளைப்போல், எபிரேயக் கவிதைகள், வார்த்தை வடிவங்களில் அதிகம் கவனம் செலுத்தவில்லை. எபிரேயக் கவிதைகளில் எண்ணங்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. எனவே, அந்தக் கவிதைகளை, ‘கவிதைகள்’ என்ற இலக்கணத்திற்குள் புகுத்துவது கடினமாய் இருந்தது. எனினும், விவிலிய ஆய்வாளர்களின் முயற்சியால், எபிரேயக் கவிதைகளின் சிறப்பு அம்சங்கள் வெளிச்சத்திற்கு வந்தன. எபிரேயக் கவிதைகளுக்கென தனித்துவம் பல உண்டு. நாம் இரு அம்சங்களை மட்டும் சிந்திப்போம்.

முதல் அம்சம்: வார்த்தைகளுக்குத் தரப்படும் முக்கியவத்துவத்தைக் காட்டிலும் எண்ணங்களுக்குத் தரப்படும் முக்கியத்துவம். இரண்டாவது அம்சம்: எபிரேயக் கவிதைகளில், பயன்படுத்தப்பட்டுள்ள உருவகங்களின் அழகு.

  • வழக்கமாக, பல மரபு கவிதை வரிகளில், வார்த்தைகளில், அழகு நயம், ஒப்புமைகள் இருக்கும். எடுத்துக்காட்டாக,
  • கற்க கசடற கற்பவை கற்றபின்
  • நிற்க அதற்குத் தக
  • என்ற திருக்குறளில், ‘கற்க’, ‘நிற்க’ ஆகிய ஆரம்ப சொற்கள், ஒலிவடிவில் ஒத்திணங்கிச் செல்கின்றன. மகாக்கவி பாரதியின்,
  • செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்
  • தேன் வந்துப் பாயுது காதினிலே
  • என்ற வரிகளில், ‘போதினிலே’, ‘காதினிலே’ என்ற இறுதிச் சொற்கள், ஒன்றையொன்று ஒத்தச் சொற்கள். கவிதை வரிகளின் முதல் சொற்கள், அல்லது, இறுதிச் சொற்கள் இத்தகைய ஒலிவடிவ ஒற்றுமையோடு உருவாக்கப்படுவது கவிதைகளுக்குரிய அழகு.

இது போன்று, வார்த்தைகளில், வரிகளில் உள்ள ஒப்புமைகளுக்குப் பதில், எபிரேயக் கவிதைகளில் எண்ணங்களில் ஒப்புமைகள் இருக்கும். ஒரே எண்ணத்தை வலியுறுத்தியோ, அல்லது மறுத்தோ இருவேறு வழிகளில் சொல்லும் அழகைக் காணலாம்.

எடுத்துக்காட்டாக, திருப்பாடல் 24ல் உள்ள முதல் வரிகளைப் பார்க்கலாம். இறைவனுக்கு இந்த உலகம் சொந்தம் என்பதை, முதல் இரு வரிகள், வெவ்வேறு வழிகளில் சொல்கின்றன. அடுத்த வரிகளில், இறைவன் இந்த உலகை, தண்ணீர் மீது நிலை நிறுத்தினார் என்பதை இருவேறு வழிகளில் பாடலாசிரியர் கூறியுள்ளார். அந்தத் திருப்பாடலின் வரிகள் இதோ:

  • திருப்பாடல் 24: 1-2
  • மண்ணுலகும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் ஆண்டவருடையவை:
  • நிலவுலகும் அதில் வாழ்வனவும் அவருக்கே சொந்தம்.
  • ஏனெனில், அவரே கடல்கள் மீது அதற்கு அடித்தளமிட்டார்:
  • ஆறுகள்மீது அதை நிலை நாட்டினவரும் அவரே.

இதேபோல் திருப்பாடல் 49ன் முதல் இருவரிகள் ஒரே எண்ணத்தை இருவேறு வழிகளில் சொல்லும் அழகைக் காணலாம்.

  • திருப்பாடல் 49: 1
  • மக்களினங்களே! அனைவரும் இதைக் கேளுங்கள்:
  • மண்ணுலகில் வாழ்வோரே, யாவரும் செவிகொடுங்கள்.

ஒரே எண்ணத்தை இரு வழிகளில் வலியுறுத்திச் சொல்வதற்கு இவை எடுத்துக் காட்டுகள். ஒரே எண்ணத்தின் எதிர்மறைகளை தொடர்ந்து இருவரிகளில் சொல்லும் அழகையும் திருப்பாடல்களில் காணலாம்.

  • திருப்பாடல் 1: 6
  • நேர்மையாளரின் நெறியை ஆணடவர் கருத்தில் கொள்வார்:
  • பொல்லாரின் வழியோ அழிவைத் தரும்.

திருப்பாடல்கள் நூலின் முதல் திருப்பாடல், எண்ணங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்டுள்ள எபிரேயக் கவிதைகளுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இந்தத் திருப்பாடலில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள், கல் மேல் கல் வைத்துக் கட்டப்படும் கட்டடம் போன்று ஒன்றை ஒன்று தொடர்ந்துவரும். ஒவ்வொரு எண்ணமும் முந்தைய எண்ணத்தை உறுதிப்படுத்தும். அல்லது எதிர்மறையாய்ச் சொல்லி, சொல்லவந்த கருத்தை ஆழப்படுத்தும். இவ்வாறு, எபிரேயக் கவிதைகளில் சொற்களுக்குத் தரப்படும் முக்கியத்துவத்திற்கு மேலாக, எண்ணங்களுக்குத் தரப்படும் முக்கியத்துவம் அதிகம்.

எபிரேயக் கவிதைகளுக்கு உரிய மற்றொரு தனித்துவம், உருவகங்களைப் பயன்படுத்துதல். திருப்பாடல்களில் பயன்படுத்தப்பட்டுள்ள உருவகங்களைக் குறித்தும், அவை நம் உள்ளங்களில் விதைக்கக்கூடிய கனவுகளைக் குறித்தும், நாம், அடுத்த தேடலில் சிந்திப்போம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 January 2021, 14:15