தேடுதல்

Vatican News
கொரோனா பெருந்தொற்று காலத்தில் மெக்சிகோவில் செபிக்கும் குடும்பம் கொரோனா பெருந்தொற்று காலத்தில் மெக்சிகோவில் செபிக்கும் குடும்பம்   (AFP or licensors)

மகிழ்வின் மந்திரம்: கணவனும், மனைவியும் ஒரே உடலாய் இருப்பர்

திருமண ஒன்றிப்பு என்பது, பாலியல் மற்றும், உடல்சார்ந்த கூறுகளை மட்டுமல்லாமல், அன்பில், தன்னையே மனமுவந்து வழங்குவதையும் உள்ளடக்கியுள்ளது (அன்பின் மகிழ்வு 13)

மேரி தெரேசா: வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அன்பின் மகிழ்வு (Amoris Latitia) திருத்தூது அறிவுரை மடல் எண் 12ல், மனைவி என்பவர், கணவனுக்குத் துணையாகவும், தூணாகவும் இருக்கிறார் என்று, மனைவியின் மேன்மை பற்றிச் சொல்லுகின்றது. சாலமோனின் பாடல் எனப்படும், இனிமைமிகு பாடலில் பெண்ணும், “என் காதலர் எனக்குரியர்; நானும் அவருக்குரியள்…. நான் என் காதலர்க்குரியவள், என் காதலர் எனக்குரியர்” (இ.பா.2:16;6:3).  என்று, கணவர் மீதுள்ள உரிமை பற்றி பாடுகிறார் (அன்பின் மகிழ்வு 12). ஆணின் தனிமையை அகற்றும் மனைவியின் இந்த உறவு, புதிய பிறப்பும், குடும்பமும் உருவாகச் செய்கின்றது. எல்லாக் காலத்திற்கும், இடத்திற்கும் உரிய மனிதராகிய ஆதாம், தன் மனைவியோடு, குறிப்பிடத்தக்க வகையில், ஒரு புதிய குடும்பத்தைத் துவக்குகிறார். இயேசு, தொடக்க நூல் பகுதியிலிருந்து ஓர் எடுத்துக்காட்டைக் குறிப்பிட்டு, இது பற்றிப் பேசுகிறார். “கணவன், தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான்; இருவரும் ஒரே உடலாய் இருப்பர்” (மத்.19:5; காண்.தொ.நூ.2:24). எபிரேய மொழியில், “ஒன்றித்திருத்தல்” அல்லது “ஒரே உடலாய் இருத்தல்” என்ற சொல், ஓர் ஆழமான நல்லிணக்கத்தை, உடல் மற்றும், உள்ளார்ந்த ஒரு நெருக்கத்தைப்பற்றிப் பேசுகிறது. இது எந்த அளவிற்கு என்றால், “என் ஆன்மா உம்மை உறுதியாகப் பற்றிக் கொண்டது” (தி.பா.63:8) என்று, கடவுளோடு நமக்குள்ள உறவை விளக்க, இந்தச் சொல் பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு, திருமண ஒன்றிப்பு என்பது, பாலியல் மற்றும், உடல்சார்ந்த கூறுகளை மட்டுமல்லாமல், அன்பில், தன்னையே மனமுவந்து வழங்குவதையும் உள்ளடக்கியுள்ளது. இந்த ஒன்றிப்பின் பயன் என்னவென்றால், தம்பதியர் இருவரும், ஓருடலாய் மாறுகின்றனர். அதாவது, உடல் அளவிலும், தங்களின் இதயங்கள் மற்றும், வாழ்க்கையின் ஒன்றிப்பிலும், இறுதியில் குழந்தையிலும் ஒரே உடலாய் மாறுகின்றனர். குழந்தையானது, பெற்றோரின் மரபணுவில் மட்டுமல்ல, அவர்களின் சதையில், ஆன்மீகமுறையிலும் பங்கெடுக்கின்றது. (அன்பின் மகிழ்வு 13)

14 January 2021, 13:01