தேடுதல்

Vatican News
நயீன் நகரக் கைம்பெண்ணின் அழுகுரலைக் கேட்ட இயேசு - லூக்கா 7:12 நயீன் நகரக் கைம்பெண்ணின் அழுகுரலைக் கேட்ட இயேசு - லூக்கா 7:12 

மகிழ்வின் மந்திரம் : குடும்பத்தில் ஒருவராக இயேசு

குடும்பங்களில் உருவாகும் பிரச்சனைகளையும், இறுக்கமானச் சூழல்களையும் அறிந்த இயேசு, அவற்றை தன் உவமைகளில் குறிப்பிடுகிறார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

குடும்பங்கள் அடையும் துயரங்களை, பிறந்ததுமுதல் சந்தித்த இயேசு, தன் பணிவாழ்வின்போது, குடும்பங்களில் நிகழ்ந்த துயரங்களைத் துடைத்தார் என்பதையும், குடும்ப வாழ்வைப்பற்றிய உண்மைகளை தன் படிப்பினைகளில் வழங்கினார் என்பதையும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலின் 21ம் எண்ணில், இவ்வாறு, தொகுத்து வழங்கியுள்ளார்: “நடுத்தர நிலையில் இருந்த ஒரு குடும்பத்தில் இயேசு பிறந்தார். அவர் பிறந்ததும், அவரது குடும்பம், அந்நிய நாட்டுக்கு ஓடவேண்டியிருந்தது. பேதுருவின் வீட்டிற்குச் செல்லும் இயேசு, அங்கு, பேதுருவின் மாமியாரைக் குணமாக்குகிறார் (காண். மாற்கு 1:30-31). யாயீர், இலாசர் இல்லங்களில் மரணம் நிகழ்ந்ததைக் கேள்விப்பட்டதும், தன் பரிவன்பைக் காட்டுகிறார் (காண். மாற்கு  5:22-24, 35-43; யோவான் 11:1-44). இறந்த தன் மகனுக்காக கதறி அழுத நயீன் நகரக் கைம்பெண்ணின் குரலைக் கேட்கிறார் (காண். லூக்கா 7:11-15). வலிப்பு நோயினால் துன்புறும் மகனின் தந்தை எழுப்பும் விண்ணப்பத்தைக் கேட்கிறார் (காண். மாற்கு 9:17-27). வரிதண்டும் மத்தேயு, சக்கேயு ஆகியோரின் இல்லங்களுக்குச் செல்கிறார் (காண். மத். 9:9-13; லூக். 19:1-10). பரிசேயரான சீமோன் வீட்டில், பாவியான ஒரு பெண்ணிடம் பேசுகிறார் (காண். லூக். 7:36-50).

“குடும்பங்களில் உருவாகும் பிரச்சனைகளையும், இறுக்கமானச் சூழல்களையும் அறிந்த இயேசு, அவற்றை தன் உவமைகளில் குறிப்பிடுகிறார்: துணிகர வாழ்வைத் தேடி, வீட்டைவிட்டு வெளியேறும் பிள்ளைகள் (காண். லூக். 15:11-32), பிரச்சனைகளை உருவாக்கும் பிள்ளைகள் (மத். 21:28-31), வன்முறைகளில் சிக்கிக்கொள்ளும் பிள்ளைகள் (மாற். 12:1-9) ஆகியோரைப் பற்றி உவமைகள் கூறியுள்ளார். திருமண விருந்தில் திராட்சை இரசம் தீர்ந்துபோனபோதும், (யோவான் 2:1-10), அழைக்கப்பட்ட விருந்தினர் வர மறுத்தபோதும் (மத். 22:1-10), வறுமைப்பட்ட ஒரு குடும்பத்தில் பணம் காணாமல் போனபோதும் (லூக். 15:8-10) உருவான சங்கடங்களை இயேசு உணர்கிறார்” (அன்பின் மகிழ்வு 21)

26 January 2021, 15:01