தேடுதல்

குடும்பத்தில் செபிக்க கற்றுத்தரும் பெற்றோர் குடும்பத்தில் செபிக்க கற்றுத்தரும் பெற்றோர் 

மகிழ்வின் மந்திரம் : குடும்பம் - மத நம்பிக்கையின் பள்ளி

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைப் பொருத்தவரை, கிறிஸ்தவ குடும்பங்கள், மத நம்பிக்கையின் அரிச்சுவடிகளைச் சொல்லித்தரும் ஆரம்பப்பள்ளி.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

‘குடும்ப விளக்கு’ என்ற நூலின் முன்னுரையில் ‘நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்’ என்று பாரதிதாசன் குறிப்பிட்டுள்ளார். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைப் பொருத்தவரை, கிறிஸ்தவ குடும்பம், மதநம்பிக்கையின் அரிச்சுவடிகளைச் சொல்லித்தரும் ஆரம்பப்பள்ளி. இக்கருத்தை, 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலின் 16ம் எண்ணில் திருத்தந்தை இவ்வாறு விளக்குகிறார்:

குழந்தைகளை மதநம்பிக்கையில் வளர்க்குமிடம் குடும்பம் என்பதை, விவிலியம் நமக்கு உணர்த்துகிறது. பாஸ்கா விழாவைக் குறித்த விளக்கங்கள் (விடுதலைப் பயணம் 12:26-27; இணைச்சட்டம் 6:20-25), மற்றும், பாஸ்கா உணவின்போது நிகழும் உரையாடல் சடங்கு ஆகியவற்றின் வழியே, இந்த உண்மை தெளிவாகிறது. குடும்பங்களில் பறைசாற்றப்படும் நம்பிக்கை, ஒரு திருப்பாடலில் இவ்வாறு கொண்டாடப்பட்டுள்ளது:

நாங்கள் கேட்டவை, நாங்கள் அறிந்தவை, எம் மூதாதையர் எமக்கு விரித்துரைத்தவை — இவற்றை உரைப்போம். அவர்களின் பிள்ளைகளுக்கு நாங்கள் அவற்றை மறைக்கமாட்டோம்; வரவிருக்கும் தலைமுறைக்கு ஆண்டவரின் புகழ்மிகு, வலிமைமிகு செயல்களையும் அவர் ஆற்றிய வியத்தகு செயல்களையும் எடுத்துரைப்போம். யாக்கோபுக்கென அவர் நியமங்களை வகுத்தார்; இஸ்ரயேலுக்கெனத் திருச்சட்டத்தை ஏற்படுத்தினார்; இதனையே தம் பிள்ளைகளுக்கும் கற்பிக்குமாறு நம் மூதாதையர்க்கு அவர் கட்டளையிட்டார். வரவிருக்கும் தலைமுறையினர் இவற்றை அறிந்திடவும், இனிப் பிறக்கவிருக்கும் பிள்ளைகள் — இவர்கள் தம் புதல்வர்களுக்கு ஆர்வத்துடன் கற்றுக்கொடுக்கவும், அவர் கட்டளையிட்டார். (திருப்பாடல் 78:3-6)

மதநம்பிக்கையை குழந்தைகளுக்குப் புகட்டும் முதல் ஆசிரியர்களாக பெற்றோர் விளங்குகின்றனர். இது, தலைமுறை, தலைமுறையாக கையளிக்கப்படும் மரபாகிறது. இவ்வாறு, "இளைஞர், கன்னியர், முதியோர் மற்றும் சிறியோர், எல்லாரும்" (திருப்பாடல் 148:12) ஆண்டவரைப் போற்றமுடியும். (அன்பின் மகிழ்வு 16)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 January 2021, 14:09