தேடுதல்

Vatican News
தம்பதியரையும், குழந்தைகளையும் ஆசீர்வதிக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் தம்பதியரையும், குழந்தைகளையும் ஆசீர்வதிக்கும் திருத்தந்தை பிரான்சிஸ்  (Vatican Media)

மகிழ்வின் மந்திரம் : குடும்பமாக வாழும் மூவொரு இறைவன்

வழிமரபினரை உருவாக்கும் வண்ணம் தம்பதியர் கொள்ளும் அன்பு, தந்தை, மகன், தூய ஆவியார் என மூவொரு கடவுளில் நிலவும் அன்பின் பிம்பமாக உள்ளது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

கணவன், மனைவி இருவரிடையே நிலவும் அன்பு, உயிரை உருவாக்குவதில் வெளிப்படுகிறது. எனவே, இந்த அன்பு, படைக்கும் இறைவனின் அங்கமாகிறது என்பதை, 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலின் 11ம் எண்ணில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாறு விளக்கிக் கூறியுள்ளார்:

உயிரை உருவாக்குவதற்கென, தம்பதியரிடையே ஏற்படும் அன்பு, படைப்பவராக, காப்பவராக விளங்கும் கடவுளின் வெளிப்படாக விளங்குகிறது. இக்காரணத்தால், பலன்கள் நிறைந்த அன்பு, கடவுளின் உள்ளார்ந்த அன்புக்கு அடையாளமாக உள்ளது. மனித அன்பு, பலன்கள் நிறைந்தது என்பதை உணர்த்த, தொடக்க நூலின் பல்வேறு இடங்களில், வெவ்வேறு வழிமரபினரின் வரிசைகள் கூறப்பட்டுள்ளன. (காண். 4:17-22, 25-26; 5:10; 11:10-32; 25:1-4, 12-17, 19-26; 36)

மனிதத் தம்பதியர், உயிர்களை உருவாக்குவதன் வழியே, மீட்பின் வரலாறு முன்னேறிச் செல்கிறது. வழிமரபினரை உருவாக்கும் வண்ணம் தம்பதியர் கொள்ளும் அன்பு, தந்தை, மகன், தூய ஆவியார் என மூவொரு கடவுளில் நிலவும் அன்பின் பிம்பமாக உள்ளது. மூவொரு இறைவன், அன்பின் ஒருங்கிணைப்பு; அதனைப் பிரதிபலிப்பது, குடும்பம்.

"கடவுளின் மிக ஆழமான மறையுண்மை, தனிமை அல்ல, மாறாக, ஒரு குடும்பம். ஏனெனில், அவரிடம் தந்தைத் தன்மை, மகன் தன்மை மற்றும் குடும்பத்தின் சாரமாக இருக்கும் அன்பு ஆகியவை உள்ளன" என்று, திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள் கூறியுள்ளது, இந்த எண்ணத்தை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. புனித பவுல், கிறிஸ்துவுக்கும், திருஅவைக்கும் உள்ள உறவை, தம்பதியரின் உறவுடன் இணைத்துப் பேசுகிறார் (காண். எபேசியர் 5:21-23). (அன்பின் மகிழ்வு – 11)

இவ்வாறு, உயிர்களை உருவாக்கும் எண்ணத்தில், தம்பதியரிடையே நிலவும் படைப்பாற்றல் மிக்க அன்பை, மூவொரு கடவுளின் இயல்போடு ஒப்புமைப்படுத்தி, 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலின் அறிமுகப்பிரிவில் கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

12 January 2021, 13:07