தேடுதல்

Vatican News
இளம் தம்பதியரின் திருமணத் திருப்பலியை நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் - கோப்புப் படம் 2018 இளம் தம்பதியரின் திருமணத் திருப்பலியை நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் - கோப்புப் படம் 2018  (Archivio Personale di Letícia Schafer)

மகிழ்வின் மந்திரம் - குடும்பம் அமைக்கும் ஆர்வம்

"திருமணம் புரிந்து, குடும்பம் அமைக்கும் ஆர்வம், இன்றும், இளையோரிடையே இருப்பது, திருஅவைக்கு ஓர் உந்துசக்தியாக அமைந்துள்ளது." (அன்பின் மகிழ்வு 1)

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

குடும்பத்தில் அன்பு என்ற எண்ணத்தைக் குறித்து, ஆயர்கள், அருள்பணியாளர்கள், திருத்தொண்டர்கள், துறவியர், கிறிஸ்தவ மணத்தம்பதியர், மற்றும், அனைத்து பொதுநிலையினருக்கும், ‘அன்பின் மகிழ்வு’ திருத்தூது அறிவுரை மடலை, தான் எழுதுவதாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இம்மடலின் துவக்கத்தில் கூறியுள்ளார்.

"குடும்பங்களில் உய்த்துணரப்படும் அன்பின் மகிழ்வே திருஅவையின் மகிழ்வாக உள்ளது" என்ற சொற்கள், இம்மடலின் அறிமுக சொற்களாக அமைந்துள்ளன.

"திருமணம் புரிந்து, குடும்பம் அமைக்கும் ஆர்வம், இன்றும், இளையோரிடையே இருப்பது, திருஅவைக்கு ஓர் உந்துசக்தியாக அமைந்துள்ளது. குடும்பம் நற்செய்தியே என்பதை பறைசாற்றுவதே, இந்த ஆர்வத்திற்கு நாம் வழங்கக்கூடிய கிறிஸ்தவ பதிலிறுப்பு" (அன்பின் மகிழ்வு 1)

குடும்ப வாழ்வு குலைந்துவருவதாக பலரும் கூறிவரும் இன்றைய உலகில், இத்தகைய மகிழ்வான, நேர்மறை உணர்வு நிறைந்த சொற்களுடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இம்மடலை அறிமுகப்படுத்தியிருப்பது, குடும்ப வாழ்வைக் குறித்து, நம் நம்பிக்கையைப் புதுப்பிக்கிறது. 'அன்பின் மகிழ்வு' என்ற ஆழ்கடலில் மகிழ்வுடன் மூழ்கி முத்தெடுப்போம், இனிவரும் நாள்களில்!

02 January 2021, 14:21