தேடுதல்

Vatican News
இந்தோனேசியாவில் செபிக்கும் குடும்பம் இந்தோனேசியாவில் செபிக்கும் குடும்பம்  (AFP)

மகிழ்வின் மந்திரம்: “வீடுகளில் கூடும் திருச்சபைகள்”

ஒரு குடும்பத்தின் வாழும் இடம், இல்லத் திருச்சபையாக, திருநற்கருணை கொண்டாட்டத்திற்கு உரிய இடமாக, அது நிறைவேற்றப்படும் மேசையில் கிறிஸ்துவின் பிரசன்னம் வீற்றிருப்பதாக மாறமுடியும். (அன்பின் மகிழ்வு 15)

மேரி தெரேசா: வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின், அன்பின் மகிழ்வு (Amoris Latitia) என்ற திருத்தூது அறிவுரை மடலின் முதல் பிரிவு, “இறைவார்த்தையின் ஒளியில்” என்ற தலைப்பில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இந்தப் பிரிவில், 8வது எண்ணிலிருந்து 14வது எண் வரை, குடும்ப அன்பு, மனைவியரின் மேன்மை, கணவன், மனைவிக்கிடையே நிலவும் உள்ளார்ந்த பிணைப்பு, குடும்பத்தில் பிள்ளைகளின் முக்கியத்துவம்.. இவ்வாறு பல கூறுகள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. எண் 15ல், குடும்பத்தின் மற்றுமொரு கூறு விளக்கப்பட்டுள்ளது.

“வீடுகளில் கூடும் திருச்சபைகள்” (1கொரி.16:19; உரோ.16:5; கொலோ.4:15; பிலமோ 2) பற்றி, புதிய ஏற்பாடு பேசுவதை நாம் அறிந்துள்ளோம். ஒரு குடும்பத்தின் வாழும் இடம், இல்லத் திருச்சபையாக, திருநற்கருணை கொண்டாட்டத்திற்கு உரிய இடமாக, அது நிறைவேற்றப்படும் மேசையில் கிறிஸ்துவின் பிரசன்னம் நிறைந்திருப்பதாக மாறமுடியும். திருவெளிப்பாடு நூலில் நாம் காணும் உருவகத்தை நம்மால் ஒருபோதும் மறக்கஇயலாது. அதில் ஆண்டவர், “இதோ, நான் கதவு அருகில் நின்று தட்டிக்கொண்டிருக்கிறேன். யாராவது எனது குரலைக் கேட்டுக் கதவைத் திறந்தால், நான் உள்ளே சென்று அவர்களோடு உணவு அருந்துவேன்; அவர்களும் என்னோடு உணவு அருந்துவார்கள்” (தி.வெ.3:20)  என்று சொல்கிறார். இங்கு, கடவுளின் பிரசன்னத்தால், பொது இறைவேண்டலால், மற்றும், எல்லா ஆசீர்வாதங்களாலும் நிறைந்துள்ள ஒரு வீட்டை நாம் பார்க்கிறோம். இதுவே, திருப்பாடல் 128ன் நிறைவின் அர்த்தமாகும். “ஆண்டவருக்கு அஞ்சி நடக்கும் ஆடவர் இத்தகைய ஆசி பெற்றவராய் இருப்பார். ஆண்டவர் சீயோனிலிருந்து உமக்கு ஆசி வழங்குவாராக!” (தி.பா.128:4-5).  (அன்பின் மகிழ்வு 15)

18 January 2021, 13:32