தேடுதல்

புதன் மறைக்கல்வியுரை புதன் மறைக்கல்வியுரை 

மகிழ்வின் மந்திரம்: உழைப்பு, மனித மாண்பின் இன்றியமையாத ஒரு பகுதி

மனிதர், நிலத்தில் உழைக்கும் உழைப்பாளராக, இயற்கையின் சக்திகளை பயன்படுத்துபவராக, மற்றும், “உணவுக்காக வருந்தி உழைப்பவராகக்” (தி.பா.127:2) காட்டப்படுகிறார் (அன்பின் மகிழ்வு 23)

மேரி தெரேசா: வத்திக்கான்

இறைவார்த்தையின் ஒளியில் என்ற தலைப்பில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அன்பின் மகிழ்வு (Amoris Latitia) திருத்தூது அறிவுரை மடலின் முதல் பிரிவில், எண் 8 முதல் 22 வரை, குடும்ப அன்பு, தம்பதியர்க்கிடையே நிலவவேண்டிய உண்மையான உறவு, பிள்ளைகளின் முக்கியத்துவம், குடும்பங்களில் சாதாரணமாக காணப்படும் பிரச்சனைகள் போன்றவை, விவிலிய மேற்கோள்களுடன் வழங்கப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக, முதல் பிரிவில், எண் 23 முதல் 26 வரை, “உங்கள் கரங்களில் உழைப்பு” என்ற தலைப்பில், உழைப்பின் மகத்துவம்  விவரிக்கப்பட்டுள்ளது. “உமது உழைப்பின் பயனை நீர் உண்பீர்! நீர் நற்பேறும் நலமும் பெறுவீர்!” (தி.பா.128:2). இவ்வாறு, திருப்பாடல் 128ன் துவக்கத்தில், ஒரு குடும்பத்தின் தந்தை உழைப்பாளராகத் தோன்றுகிறார். இவர், தன் கரங்களால் உழைத்து, தன் குடும்பத்தின் உடல்நல வாழ்வையும், அமைதியையும் பேணிக் காக்கிறார். உழைப்பு, மனித மாண்பின் இன்றியமையாத ஒரு பகுதி என்பது, திருவிவிலியத்தின் முதல் பக்கங்களில் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. தொடக்க நூலின் 2ம் பிரிவில் இவ்வாறு வாசிக்கிறோம். “ஏதேன் தோட்டத்தைப் பண்படுத்தவும், பாதுகாக்கவும் ஆண்டவராகிய கடவுள் மனிதனை அங்கு கொண்டுவந்து குடியிருக்கச் செய்தார்” (தொ.நூ.2:15). மனிதர், பூமியில் உழைக்கும் உழைப்பாளராக, இயற்கையின் சக்திகளை பயன்படுத்துபவராக, மற்றும், “உணவுக்காக வருந்தி உழைப்பவராக”வும், (தி.பா.127:2) அதோடு, தனது சொந்தக் கொடைகளையும், திறமைகளையும், வளர்த்துக்கொள்பவராகவும், காட்டப்படுகிறார். (அன்பின் மகிழ்வு 23)

"அன்பின் மகிழ்வு குடும்பம்" என்ற சிறப்பு ஆண்டு, திருஅவையில், 2021ம் ஆண்டு மார்ச் 19ம் தேதி, புனித யோசேப்பு விழாவன்று துவங்குகிறது. அந்த ஆண்டு 2022ம் ஆண்டு ஜூன் 26ம் தேதி வரை சிறப்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

28 January 2021, 13:13