தேடுதல்

Vatican News
கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ் கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ் 

இந்திய கத்தோலிக்க தலைவர்கள், பிரதமர் சந்திப்பு

நான்கு ஆண்டுகளுக்கு முன்பே, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, இந்தியாவிற்கு வரவேற்பதாக இருந்த திட்டம் தோல்வியடைந்துள்ளவேளை, அவருக்கு மீண்டும் அழைப்புவிடுக்குமாறு, பிரதமர் மோடி அவர்களிடம் கர்தினால்கள் பரிந்துரை

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்தியாவிற்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ள அழைப்புவிடுக்குமாறு, இந்திய கத்தோலிக்கத் திருஅவையின் மூன்று முக்கியத் தலைவர்கள், பிரதமர் நரேந்திர மோடி அவர்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

சனவரி 19, இச்செவ்வாயன்று, இலத்தீன் வழிபாட்டுமுறையின் கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ், சீரோ-மலபார் வழிபாட்டுமுறையின் கர்தினால் ஜார்ஜ் ஆலெஞ்சேரி, சீரோ-மலங்கரா வழிபாட்டுமுறையின் கர்தினால் பசிலியோஸ் கிளீமிஸ் ஆகிய மூவரும், புதுடெல்லியில், பிரதமர் மோடி அவர்களின் அலுவலகத்தில் ஏறத்தாழ 45 நிமிடங்கள் சந்தித்து கலந்துரையாடினர்.

இச்சந்திப்பு குறித்து செய்தியாளர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு, முதலில் பதிலளித்த கர்தினால் கிரேசியஸ் அவர்கள், பிரதமர் மோடி அவர்களின் அழைப்பின்பேரில் இச்சந்திப்பு இடம்பெற்றது எனவும், இந்தியாவில் கத்தோலிக்கத் திருஅவை ஆற்றிவரும் பல்வேறு பணிகள் பற்றி, குறிப்பாக, கல்வி, மருத்துவம், மற்றும், சமுதாய நலவாழ்வு ஆகிய துறைகளில் ஆற்றிவரும் பணிகள் பற்றி பேசப்பட்டதாகவும் கூறினார்.

வருங்காலத்தில் திருஅவை, அரசோடு இணைந்து எவ்வாறு கூடுதலாக ஒத்துழைப்பை வழங்கமுடியும் என்பது பற்றி பரிசீலனை செய்யப்பட்டது என்றும் கூறிய கர்தினால் கிரேசியஸ் அவர்கள், திருத்தந்தையை நான்கு ஆண்டுகளுக்கு முன்பே வரவேற்பதாக இருந்த திட்டம் தோல்வியடைந்துள்ளவேளை, அவரை மீண்டும் இந்தியாவிற்கு திருத்தூதுப் பயணம் மேற்கொள்ள அழைப்புவிடுக்குமாறு பிரதமரிடம் பரிந்துரைத்தோம் என்றும் கூறினார்.  

பயங்கரவாத நடவடிக்கைகளோடு தொடர்புபடுத்தி சிறைவைக்கப்பட்டுள்ள, வயது முதிர்ந்த இயேசு சபை அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள் பற்றி பிரதமர் இரக்கம் காட்டினார், அதேநேரம், அவர் சார்ந்த விவகாரத்தை, தனிப்பட்ட அமைப்பு ஒன்று நடத்திவருகிறது, அரசு இதில் தலையிட விரும்பவில்லை என்று பிரதமர் கூறினார் என, கர்தினால் கிரேசியஸ் அவர்கள் தெரிவித்தார்.

இந்தியாவில் நடைபெற்றுவரும் விவசாயிகள் போராட்டம் உட்பட, பல்வேறு விவகாரங்கள் இச்சந்திப்பில் இடம்பெற்றன என்றுரைத்த கர்தினால்கள், கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில், வறியோர் நலனுக்கென, 152 கோடி ரூபாயை, கத்தோலிக்கத் திருஅவை செலவழித்துள்ளது என்றும், 2 கோடிக்கு மேற்பட்ட மக்களுக்கு, பல்வேறு கத்தோலிக்க அமைப்புகள் உதவியுள்ளன என்றும், பிரதமர் மோடி அவர்களிடம் தெரிவித்ததாக எடுத்துரைத்தனர்.

இந்தியாவில் மக்களுக்கு அவசரகால உதவிகளை கத்தோலிக்கத் திருஅவை தொடர்ந்து ஆற்றும் என, பிரதமர் மோடி அவர்களிடம் உறுதி அளித்ததாகவும் கர்தினால்கள் கூறினர். (CBCI)

20 January 2021, 14:59