தேடுதல்

தமிழகத்தில் கிறிஸ்மஸ் தமிழகத்தில் கிறிஸ்மஸ் 

தமிழக ஆயர் பேரவையின் கிறிஸ்மஸ் செய்தி

எந்தவொரு எதிர்மறை நிகழ்வும், கடவுள் நம்மோடு இருக்கும்வரை நம்மைப் பின்னோக்கி இழுக்கமுடியாது - மதுரை பேராயர் அந்தோனி பாப்புசாமி

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

குழந்தையின் எளிமையில், வலுவற்றநிலையில், கையறுநிலையில், சார்புநிலையில் கடவுள் வந்து பிறக்கிறார், எனவே நம் வாழ்விலும், வலுவற்றநிலை, கையறுநிலை, சார்புநிலை போன்றவற்றில் உள்ளவர்களையும், எளியவர்களையும் தேடிச்சென்றால், அங்கே, கிறிஸ்து ஒவ்வொரு நாளும் பிறக்கிறார் என்று, தமிழக ஆயர்கள் தங்களின் கிறிஸ்மஸ் செய்தியில் கூறியுள்ளனர்.

தமிழக ஆயர் பேரவையின் தலைவரான, மதுரை பேராயர் அந்தோனி பாப்புசாமி அவர்கள், தமிழக ஆயர்கள் சார்பாக வெளியிட்டுள்ள கிறிஸ்மஸ் செய்தியில், கிறிஸ்துவின் பிறப்புச் செய்தி, மன அமைதியைத் தந்து, நம் பாவங்களிலிருந்து நம்மை மீட்பதாக உள்ளது என்று கூறியுள்ளார்.

ஏறத்தாழ ஒன்பது மாதங்களாக, கோவிட்-19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு, பொதுமுடக்கம், நம் அன்புக்குரியவர்களின் மறைவு தந்த வேதனை, போன்றவற்றிலிருந்து சிறிது, சிறிதாக, இயல்புநிலைக்கு திரும்பிக்கொண்டிருக்கிறோம் என்று கூறும் அச்செய்தி, மானுடம் தன் எதிர்நோக்கை இன்றும் தக்கவைக்கக் காரணம், பலர் தங்களையே வலுவற்ற மானுடத்திற்காக கையளித்து, அவர்களுக்குத் தோள்கொடுத்ததுவே என்று கூறியுள்ளது.

எந்தவொரு எதிர்மறை நிகழ்வும், கடவுள் நம்மோடு இருக்கும்வரை நம்மைப் பின்னோக்கி இழுக்கமுடியாது என்றும் கூறும் பேராயரின் அச்செய்தி, கிறிஸ்மஸ் தரும் முதல் செய்தி என்னவென்றும் குறிப்பிட்டுள்ளது.

இந்த உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும், கடவுள் இந்த உலகத்தை இன்னும் வெறுக்கவில்லை என்ற செய்தியைத் தாங்கிப் பிறக்கிறது என்றுரைத்த இரபீந்தரநாத் தாகூர் அவர்கள், குழந்தையின் பிறப்பால் இவ்வுலகில் அன்பின் ஒளிக்கீற்று பிறக்கின்றது எனச் சொல்கிறார் என்று, தன் செய்தியில் கூறியுள்ள பேராயர் அந்தோனி பாப்புசாமி அவர்கள், கிறிஸ்துவின் பிறப்பு தரும் முதல் செய்தி, காலத்தைக் கடந்த கடவுள், மனித வரலாற்றுக்குள் ஒரு குழந்தையின் கால்கள் கொண்டு கால்பதிக்க திருவுளம் கொள்கிறார் என்பதுதான் என்று கூறியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 December 2020, 14:59