தேடுதல்

மரியா, "நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்" என்றார் - லூக்கா 1:38 மரியா, "நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்" என்றார் - லூக்கா 1:38 

திருவருகைக்காலம் – 4ம் ஞாயிறு : ஞாயிறு சிந்தனை

எத்தியோப்பியாவில் பட்டினியால் பரிதவித்த குழந்தைகளை மையப்படுத்தி, “இது கிறிஸ்மஸ் காலம் என்பதாவது அவர்களுக்கு தெரியுமா?” என்ற கேள்வியை எழுப்பும் பாடலின் வரிகள், நம் சிந்தனைகளை இன்று துவக்கிவைக்கின்றன.

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

திருவருகைக்காலம் – 4ம் ஞாயிறு: ஞாயிறு சிந்தனை

இன்னும் நான்கு நாள்களில் கிறிஸ்மஸ் விழாவைக் கொண்டாடவிருக்கிறோம். ஆனால், பல வழிகளில், இவ்வாண்டு, நமக்கு வழக்கமான கிறிஸ்மஸ் காலமாகத் தெரியவில்லை. கொள்ளைநோயின் இரண்டாம் அலை, மூன்றாம் அலை என்று வெவ்வேறு புள்ளிவிவரங்களைக் கூறி, கிறிஸ்மஸ் வழிபாடுகளை அரசுகள் கட்டுப்படுத்தியுள்ளன. உறவினர்களும், நண்பர்களும் கூடிவரும் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. இத்தகையச் சூழலில், "இது கிறிஸ்மஸ் தானா?, இது, கிறிஸ்மஸ் காலம் என்பதாவது, நம் குழந்தைகளுக்குத் தெரியுமா?" என்ற கேள்விகளுடன் நாம் தடுமாறி வருகிறோம். இதேபோன்றதொரு கேள்வி, நாற்பது ஆண்டுகளுக்கு முன், புகழ்பெற்ற ஓர் ஆங்கிலப் பாடலில் கேட்கப்பட்டது. "Do They Know It's Christmas time at all?" அதாவது, “இது கிறிஸ்மஸ் காலம் என்பதாவது அவர்களுக்கு தெரியுமா?” என்ற கேள்வியை எழுப்பும் அப்பாடலை Bob Geldof, Midge Ure என்ற இரு இசைக்கலைஞர்கள் உருவாக்கினர்.

1980களில், ஆப்ரிக்காவின் எத்தியோப்பியாவில் நிகழ்ந்துவந்த பட்டினிச்சாவுகள், இவ்விரு இசைக்கலைஞர்களையும் வெகுவாகப் பாதித்தன. எத்தியோப்பிய மக்களை, முக்கியமாக, அங்கு பட்டினியால் பரிதவித்த குழந்தைகளை மையப்படுத்தி, “இது கிறிஸ்மஸ் காலம் என்பதாவது அவர்களுக்கு தெரியுமா?” என்ற கேள்வியை எழுப்பும் பாடலை இயற்றினர். புகழ்பெற்ற அப்பாடலின் வரிகள், நம் சிந்தனைகளை இன்று துவக்கிவைக்கின்றன.

 • "இது கிறிஸ்மஸ் காலம், அச்சம்கொள்ளத் தேவையில்லை,
 • கிறிஸ்மஸ் காலத்தில், இருளை விரட்டி, ஒளியை வரவேற்கிறோம்
 • அதிகமதிகமாக நிறைந்துள்ள நம் உலகில் மகிழ்வின் புன்னகையைப் பரப்புகிறோம்"

மகிழ்வு கலந்த தொனியுடன் இவ்வாறு ஆரம்பமாகும் இப்பாடல், அடுத்து, மற்றொரு உலகைப்பற்றி, முற்றிலும் மாறுபட்ட ஓர் உலகைப்பற்றி கூறுகிறது.

 • "கிறிஸ்மஸ் மகிழ்வில் நீங்கள் இருக்கும்போது,
 • மற்றவர்களுக்காக செபம் ஒன்றை சொல்லுங்கள்
 • அவர்களுக்கு இது கடினமான காலமாக உள்ளது
 • உங்கள் சன்னலுக்கு வெளியே ஓர் உலகம் உள்ளது
 • அது, பயங்கரமான, அச்சமூட்டும் உலகம்
 • அங்கு, ஓடும் நீரெல்லாம், கசப்பான கண்ணீர் மட்டுமே
 • அங்கு ஒலிக்கும் கிறிஸ்மஸ் மணிகள் எல்லாம்
 • ஏதோ ஓர் அழிவைச் சொல்லும் மணியோசைகளே
 • அங்கு, ஆப்ரிக்காவில், கிறிஸ்மஸ் காலத்தில்,
 • வானிலிருந்து பனி விழுவதில்லை, அங்கு எதுவும் வளர்வதில்லை
 • இது கிறிஸ்மஸ் காலம் என்பதாவது, அவர்களுக்கு தெரியுமா?"

என்ற வரிகள் வழியே, வளம் மிகுந்த ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளையும், வறட்சியில் தவித்த ஆப்ரிக்க நாடுகளையும் பாடலாசிரியர்கள் இணைத்தனர்.

1980களில் மட்டுமல்ல, அதற்கு முன்னும், அதற்குப் பின்னும், செல்வச் செழிப்பும், வறுமையும் நிறைந்த இரு வேறு உலகங்கள், இரு வேறு வகையில் கிறிஸ்மஸைக் கொண்டாடி வருகின்றன. ஏன்... கிறிஸ்து பிறந்த அந்த முதல் கிறிஸ்மஸ் நாளிலும், "இது கிறிஸ்மஸ் காலம் என்பதாவது, அவர்களுக்கு தெரியுமா?" என்ற கேள்வி, யூதேயாவில் ஒலித்திருக்கவேண்டும்.

கூர்மையான அம்பைப்போல் பாயும் இக்கேள்வியை, இந்த ஆண்டு, கிறிஸ்மஸ் காலத்தில், உலகெங்கும் துன்புறும் கோடான கோடி மக்களைக் குறித்து நம்மால் எழுப்பமுடியும். கடந்த ஓராண்டளவாய், கோவிட்-19 கொள்ளைநோயின் விளைவாக, இவ்வுலகில், ஏராளமான கண்ணீர் துளிகள் சிந்தப்பட்டன. நம் கோவில்களில், பெரும்பாலான நேரங்களில் ஒலித்த மணியோசை, கொள்ளைநோயினால் ஒருவர் இறந்துள்ளார் என்பதை அறிவிக்கும் மணியோசையாக இருந்தது கடந்த சில வாரங்களாக இந்தியாவின் தலைநகர் டில்லியைச் சுற்றி, வேளாண் பெருமக்களின் கண்ணீரும் இரத்தமும் சிந்தப்பட்டு வருகின்றன. இந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கும், இன்னும் உலகெங்கும் போராடிவரும் கோடான கோடி வறியோருக்கும் புலம் பெயர்ந்தோருக்கும் இது கிறிஸ்மஸ் காலம் என்ற எண்ணம் மனதில் தோன்றியிருக்க வாய்ப்பில்லை.

'இது கிறிஸ்மஸ் காலம் என்பதாவது அவர்களுக்கு தெரியுமா?' என்ற கேள்வியை எழுப்பிய அந்தப் பாடல் பதிவான இசைத்தட்டுகள், பெருமளவு விற்பனையாயின. அதில் கிடைத்த தொகையை, Bob Geldof, Midge Ure என்ற இரு இசைக்கலைஞர்களும் எத்தியோப்பியாவிற்கு அனுப்பிவைத்தனர். இருப்பினும், அவர்கள் மனம், திருப்தி அடையவில்லை. இன்னும் அதிகம் செய்யவேண்டும் என்று எண்ணினர்.

எத்தியோப்பிய மக்களின் பட்டினியைப் போக்க நிதிதிரட்டும் எண்ணத்துடன், Live Aid என்ற இசைவிழாவை, இருவரும் ஏற்பாடு செய்தனர். உலகப் புகழ்பெற்ற இசைக்கலைஞர்கள் பலர் பங்கேற்ற அந்த இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட உலகப் புகழ்பெற்ற பாடகர்களில் ஒருவர் Paul McCartney. 1960களில் இசை உலகின் முடிசூடா மன்னர்களாக விளங்கிய Beatles குழுவில் இவரும் ஒருவர். Live Aid என்ற இசை நிகழ்ச்சியில் இவர் பாடிய “Let It Be” என்ற பாடல், இந்த ஞாயிறு நற்செய்தியுடன் நம்மைத் தொடர்புகொள்ளச் செய்கிறது. Paul McCartney அவர்கள் பாடிய “Let It Be” என்ற பாடலின் பொருள் "அப்படியே ஆகட்டும்" அல்லது, "அப்படியே இருக்கட்டும்". இப்பாடலின் முதல் வரிகள் இதோ:

 • "நான் பிரச்சனைகளைச் சந்திக்கும் வேளையில், அன்னை மரியா என்னிடம் வருகிறார்.
 • 'அப்படியே ஆகட்டும்' என்ற அறிவு செறிந்த வார்த்தைகளைச் சொல்கிறார்.
 • என் வாழ்வை இருள் சூழும் நேரங்களில், அவர் எனக்கு முன் நிற்கிறார்.
 • 'அப்படியே ஆகட்டும்' என்ற அறிவுசெறிந்த வார்த்தைகளை மென்மையாக என்னிடம் சொல்கிறார்" என்று இந்தப் பாடல் ஆரம்பமாகிறது.

“Let It Be” என்ற பாடலை தான் எழுதுவதற்குக் காரணம், தன் தாயே என்று, Paul McCartney அவர்கள், தன் பேட்டிகளில் கூறியுள்ளார். Paul McCartney அவர்களின் தாயின் பெயர் மேரி. ஆனால், பாடலின் ஆரம்ப வரியில், அவர், Mother Mary என்று எழுதியிருப்பது, பலர் மனதில் அன்னை மரியாவை நினைவுறுத்துகிறது. அதேபோல், “Let It Be” என்று அடிக்கடி இந்தப் பாடலில் இடம்பெறும் சொற்கள், இளம்பெண் மரியா, வானதூதர் கபிரியேலிடம் சொன்ன புகழ்பெற்ற சொற்களை நினைவுறுத்துகின்றன. உலக மீட்பர் பிறக்கப்போகிறார் என்று வானதூதர் கபிரியேல் அன்று சொன்ன செய்தியும், அதற்கு இளம்பெண் மரியா "நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்" (லூக்கா 1:38) என்று சொன்ன பதிலும், இன்றைய நற்செய்தியாக ஒலிக்கின்றன.

விவிலியத்தில் கூறப்பட்டுள்ள வரலாற்று நிகழ்வுகளை, திருப்பலியில், வாசகங்களாக வாசிக்கும்போது, புனிதமான உணர்வுகள் மேலோங்குவதால், அந்நிகழ்வுகளில் பொதிந்துள்ள வேதனைகளையும், காயங்களையும், மறந்துவிட வாய்ப்புண்டு. அதனால்தான், இன்றைய நற்செய்திப் பகுதியை வாசித்ததும், துணிவோடு "இது இறைவன் வழங்கும் நற்செய்தி" என்று சொல்லிவிட்டோம். ஆனால், ஆழமாகச் சிந்தித்தால், வானதூதர் கபிரியேல், இளம்பெண் மரியாவிடம் இச்செய்தியைச் சொன்ன வேளையில், அது, நிச்சயம், அப்பெண்ணுக்கு, நல்லதொரு செய்தியாக இருந்திருக்கமுடியாது என்பதை உணர்வோம்.

பொதுவாக, கிறிஸ்மஸ் நெருங்கிவரும் நாட்களில், பல பள்ளிகளிலும், பங்குத் தளங்களிலும் கிறிஸ்மஸ் நாடகங்கள் அரங்கேறும். இவ்வாண்டு அவை இடம்பெறவில்லை எனினும், அந்த நாடகங்களை இப்போது நினைத்துப் பார்க்கலாம். அவற்றில் நடிப்பவர்கள், பெரும்பாலும், குழந்தைகள் என்பதால், நாம் இரசிப்போம், சிரிப்போம். ஒரு சில ஆண்டுகளுக்கு முன், இப்படி ஒரு நாடகம் முடிந்து திரும்பிவரும் வழியில், ஒரு நண்பர் திடீரென, "முதல் கிறிஸ்மஸ் இவ்வளவு அழகாக, ஆனந்தமாக இருந்திருக்குமா?" என்று கேட்டார். சிந்திக்க வேண்டிய ஒரு கேள்வி இது.

வரலாற்றில் நடந்த முதல் கிறிஸ்மஸ் எப்படி இருந்திருக்கும்? இவ்வளவு அழகாக, ஒளிமயமாக, மகிழ்வாக இருந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், அன்றையச் சூழல் அப்படி. அந்தக் கொடுமையானச் சூழலிலிருந்து, ஒரே ஓர் அம்சத்தைப்பற்றி சிந்திப்போம்.

யூதேயா முழுவதும் உரோமையர்களின் ஆக்ரமிப்பு நிலவியது. அந்த அடக்குமுறையை நடைமுறைப்படுத்த, உரோமைய அரசு, படைவீரர்களை அதிகம் பயன்படுத்தியது. அடுத்த நாட்டை ஆக்ரமிக்கும் படைவீரர்களால் அதிகம் பாதிக்கப்படுவது, அந்நாட்டில் இருக்கும் பெண்கள். பகலோ, இரவோ, எந்த நேரத்திலும், இந்தப் பெண்களுக்கு, படைவீரர்களால் ஏற்படும் ஆபத்துக்கள் ஏராளம். இப்படிப்பட்ட ஒரு சூழலில் வாழ்ந்தவர், இளம்பெண் மரியா.

தன் சொந்த நாட்டிலேயே, இரவும் பகலும் சிறையிலடைக்கப்பட்டதைப் போல் உணர்ந்த மரியா, "இந்த அவலநிலையிலிருந்து மீட்படையும் வழியைக் காட்டமாட்டாயா இறைவா?" என்று, தினமும் எழுப்பி வந்த வேண்டுதலுக்கு, இறைவன் விடையளித்தார். மணமாகாத மரியாவை, மீட்பரின் தாயாகும்படி அழைத்தார்.

இது அழைப்பு அல்ல. தீர்ப்பு. மரணதண்டனையை வழங்கும் தீர்ப்பு. மணமாகாத இளம் பெண்கள் கருவுற்றால், அவர்களை ஊருக்கு நடுவே நிறுத்தி, கல்லால் எறிந்து கொல்லவேண்டும் என்பது, யூதர்களின் சட்டம். இதை நன்கு அறிந்திருந்தார் மரியா. மணமாகாத தன்னை, தாய்மை நிலைக்கு கடவுள் அழைத்தது, பேரிடிபோல் மரியாவின் செவிகளில் ஒலித்திருக்கும்.

இறைவன் தந்த அந்த அழைப்பிற்கு சரி என்று சொல்வதும், மரணதண்டனையைத் தனக்குத் தானே வழங்கிக் கொள்வதும், ஒன்றுதான். இருந்தாலும், அந்த இறைவன் மேல் அத்தனை அதீத நம்பிக்கை, இளம் பெண் மரியாவுக்கு. 'இதோ உமது அடிமை' என்று சொன்னார். மரியா சொன்ன 'அப்படியே ஆகட்டும்' என்ற இந்த அற்புத சொற்கள், இத்தனை நூற்றாண்டுகளாக பலருக்கு, பல வழிகளில், நம்பிக்கைதரும் நற்செய்தியாக ஒலித்துள்ளன. மரியா சொன்ன அந்த அற்புத சொற்கள், 1985ம் ஆண்டு Paul McCartney அவர்கள் பாடிய “Let It Be” பாடல் வழியாக, மீண்டும் பலருக்கு, நற்செய்தியாக ஒலித்திருக்க வேண்டும்.

1985ம் ஆண்டு நடைபெற்ற Live Aid நேரடி ஒளிபரப்பில் பாடகர்கள் அனைவரும் இணைந்து பாடிய “இது கிறிஸ்மஸ் காலம் என்பதாவது அவர்களுக்கு தெரியுமா?” என்ற பாடலின் இரண்டாவது பகுதியில், சில சவால்கள் விடுக்கப்பட்டன:

 • இதோ உங்களிடம் கேட்கிறோம்...
 • வாய்ப்புகள் மறுக்கப்பட்டோரைப்பற்றி சற்றே நினைத்துப்பாருங்கள்
 • அந்த நிலை உங்களுக்கு ஏற்பட்டால், உங்களால் தாங்கமுடியுமா?
 • குற்ற உணர்வு கொள்ளவேண்டாம், கொஞ்சம் சுயநலத்தை விட்டுக்கொடுங்கள்
 • உதவியற்றிருப்போருக்கு உதவுங்கள்
 • உலகிற்கு உணவளியுங்கள்
 • உலகிற்கு உணவளியுங்கள்
 • இது கிறிஸ்மஸ் காலம் என்பதை அவர்கள் மீண்டும் தெரிந்துகொள்ளட்டும்.

Bob Geldof, Midge Ure என்ற இரு இசைக்கலைஞர்கள் ஏற்பாடு செய்த இந்த இசை நிகழ்ச்சியின் வழியே திரட்டப்பட்ட 15 கோடி பவுண்டுகள், அதாவது, 1050 கோடி ரூபாய் நிதியுதவி, எத்தியோப்பியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த முயற்சியைத் தொடர்ந்து, ஆப்ரிக்காவில் வறட்சியும், பட்டினியும் நிகழ்வதாக செய்திகள் வெளியான இன்னும் சில தருணங்களில், இதே பாடல், புகழ்பெற்ற பாடகர்களால் மீண்டும் மீண்டும் பதிவு செய்யப்பட்டு, ஒளிபரப்பானது. இந்த ஒளிபரப்புக்கள் வழியே, ஒவ்வொருமுறையும் திரட்டப்பட்ட நிதி, ஆப்ரிக்காவில், பல்லாயிரம் பேரை, குறிப்பாக குழந்தைகளை, பட்டினிச்சாவிலிருந்து காப்பாற்றியது.

இன்றும் உலகின் ஒவ்வொரு நாட்டிலும் பல்வேறு கொடுமைகள் நாள்தோறும் அரங்கேறிய வண்ணம் உள்ளன. அநீதிகளாலும், கொடுமைகளாலும் நொறுக்கப்பட்டுள்ள ஒரு சமுதாயத்தில், அனைவருமே துன்பங்களால், துவண்டுபோகாமல், அவர்களில் ஒருவர், அல்லது, ஒருசிலர் எடுக்கும் துணிவான ஒரு முடிவு, வரலாற்றையே மாற்றியுள்ளது என்பதற்கு, மரியாவின் 'ஆகட்டும்' என்ற முடிவு, ஓர் எடுத்துக்காட்டு. மரியாவுக்கு இந்தத் துணிவை அளித்தது, அவரது சொந்த சக்தி அல்ல, மாறாக, இறைவன்மீது அவர் கொண்டிருந்த ஆணித்தரமான, அசைக்கமுடியாத நம்பிக்கை.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன், வேதனையில் வெந்துகொண்டிருந்த இஸ்ரயேல் மக்கள் நடுவே, இறைவன், 'இம்மானுவேலாக' வாழ வந்ததைப்போல், இன்றும், வேதனையில் இருப்போர் நடுவே, அவர் மீண்டும் பிறக்கவேண்டும் என்று மன்றாடுவோம். 'இம்மானுவேலை' நம்மிடையே கொணர, இளம்பெண் மரியாவைப்போல, 'அப்படியே ஆகட்டும்' என்று சொல்லும், நம்பிக்கையையும், துணிவையும், பணிவையும் நமக்கு இறைவன் வழங்கவேண்டும் என்று, அன்னை மரியாவின் பரிந்துரையோடு செபிப்போம்.

19 December 2020, 14:59