தேடுதல்

Vatican News
ஆண்டவரோடு இணைந்து என்றும் மகிழுங்கள்; மீண்டும் கூறுகிறேன், மகிழுங்கள் - பிலிப்பியர் 4:4 ஆண்டவரோடு இணைந்து என்றும் மகிழுங்கள்; மீண்டும் கூறுகிறேன், மகிழுங்கள் - பிலிப்பியர் 4:4 

திருவருகைக்காலம் – ‘மகிழுங்கள்’ ஞாயிறு : ஞாயிறு சிந்தனை

உண்மையான மகிழ்வு, வெளியிலிருந்து வருவதல்ல, அது, நம் உள்ளத்திலிருந்து உருவாவது என்பதை, நாம் வாழ்வில் பலமுறை அனுபவித்துள்ளோம். புதுடெல்லியில் போராடிவரும் விவசாயிகள், இந்த உண்மையை நமக்கு உணர்த்துகின்றனர்.

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

திருவருகைக்காலம் – ‘மகிழுங்கள்’ ஞாயிறு : ஞாயிறு சிந்தனை

இந்த ஞாயிறு சிந்தனையின் துவக்கத்தில், நம் எண்ணங்கள், இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியை நோக்கிச் செல்கின்றன. அங்கு, தங்கள் சொந்த வாழ்வுக்காக மட்டுமல்லாமல், இந்திய மக்களின் வாழ்வுக்காக, இலட்சக்கணக்கான விவசாயிகள் போராடிவருகின்றனர்.

2016ம் ஆண்டு தமிழகத்தில் நிலவிய கடும் வறட்சியைத் தொடர்ந்து, விவசாயத்திற்கு மிக அவசியமாகத் தேவைப்பட்ட உதவிகளைக் கோரி, தமிழக விவசாயிகள், 2017ம் ஆண்டு புதுடெல்லியில் நடத்திய போராட்டங்களையும் இவ்வேளையில் நினைத்துப் பார்க்கிறோம். தமிழக விவசாயிகள் மேற்கொண்ட அப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த தமிழக கத்தோலிக்க ஆயர்கள், தற்போது நடைபெறும் போராட்டத்திற்கும் ஆதரவு தெரிவித்து, அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.

"நடுவண் அரசே! வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறு" என்ற தலைப்புடன், தமிழக ஆயர்கள் பேரவை சார்பாக, அப்பேரவையின் தலைவரும், மதுரைப் பேராயருமான, அந்தோனி பாப்புசாமி அவர்கள், டிசம்பர் 9ம் தேதி, அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். இவ்வறிக்கையில், நடுவண் அரசின் எதேச்சாதிகாரப் போக்கை கண்டித்தும், விவாசாயிகளுக்கு ஆதரவு வழங்கியும், தெளிவான கருத்துக்கள் பதிவாகியுள்ளன: "வரலாற்றுச் சிறப்புமிக்க உழவர்களின் போராட்டம் வெல்ல, தமிழக கத்தோலிக்க ஆயர் பேரவை தன் முழு ஆதரவை தரும்" என்ற உறுதியோடும், ஆசீரோடும் ஆயர்களின் அறிக்கை நிறைவடைகிறது.

தமிழக ஆயர்களுடன் இணைந்து, நாமும், இந்த ஞாயிறு வழிபாட்டில் விவசாயிகளுக்கு நம் ஆதரவை வழங்குவோம்; அவர்களுக்குத் தேவையான இறைவேண்டலை எழுப்புவோம்.

சுதந்திர இந்தியாவின் இரண்டாவது பிரதமர், லால் பகதூர் சாஸ்திரி அவர்கள், "ஜெய் ஜவான், ஜெய் கிஸான்" என்ற முழக்கத்தை உருவாக்கினார். "வீரர்கள் வாழ்க" என்று சொன்ன அதே மூச்சில், அந்த வீரர்களின் நல்வாழ்வுக்காக உழைக்கும் "விவசாயிகள் வாழ்க" என்ற முழக்கத்தையும், அந்த உண்மையான, உன்னதமான தலைவர், ஒன்றாக இணைத்தார்.

இப்போது, இந்தியாவை ஆளும் பிரதமரும், அவருக்குத் துதிபாடும் அமைச்சர்களும், வீரர்களையும், விவசாயிகளையும், ஒருவருக்கெதிராக மற்றொருவரை ஏவிவிட்டு வேடிக்கைப் பார்க்கின்றனர். கொள்ளைநோய் உருவாக்கிய முழு அடைப்பை தங்களுக்குச் சாதகமாக்கிக்கொண்டு, நடுவண் அரசு, மக்கள்மீது திணித்துவரும் பல்வேறு அடக்குமுறை சட்டங்களில், விவசாயிகளுக்கு எதிரான சட்டங்கள் கொடுமையானவை. விவசாயிகள் எவரையும் கலந்துபேசாமல், பாராளுமன்றத்தில் எவ்வித கருத்துப் பரிமாற்றமும் இடம்பெறாமல், அவசரமாக நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்டங்களை, நடுவண் அரசு, திரும்பப் பெறவேண்டுமென்ற கோரிக்கையுடன், விவசாயிகள் போராடிவருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டள்ள வேளாண் பெருமக்களை அடக்குவதற்கு, நடுவண் அரசு, காவல்துறையினரையும், துணை இராணுவ வீரர்களையும் ஏவிவிட்டுள்ளது. ஆயுதம் ஏதுமின்றி, அமைதியான முறையில் போராடிவரும் விவசாயிகள் மீது தண்ணீர் பீரங்கி கொண்டும், கண்ணீர் புகையைக் கொண்டும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

தண்ணீர் பீரங்கி கொண்டு தங்களைத் தாக்கும் வீரர்கள், நாள் முழுவதும் வெயிலில் நிற்பதைக் கண்டு, அவர்களது தாகத்தைத் தணிக்க, இந்த விவசாயிகள், அவர்களுக்கு குடிநீர் வழங்கும் காட்சிகளும், தாங்கள் கொண்டுவந்துள்ள உணவை, அந்த வீரர்களோடு பகிர்ந்துகொள்ளும் காட்சிகளும், சமூக வலைத்தளங்கள் வழியே, உலகெங்கும் பரவி, விவசாயிகளின் மேன்மையை பறைசாற்றி வருகின்றன.

இந்தியாவின் முதுகெலும்பாக விளங்கும் விவசாயத்தையும், விவசாயிகளின் உழைப்பையும், தனியாருக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும், தாரைவார்ப்பதில் குறியாய் இருக்கும் இன்றைய நடுவண் அரசுக்கு எதிராக, தர்மப்போர் ஒன்றை நடத்திவரும் விவசாயிகள், இறைவனின் அருளால், மனஉறுதியும், இந்தக் கொள்ளைநோயிலிருந்து பாதுகாப்பும் பெறுவதற்கு, உருக்கமாக வேண்டி, இன்றைய சிந்தனைகளைத் துவக்குவோம்.

இத்தகையதொரு சூழலில், இன்றைய ஞாயிறு வழிபாடு, நம்மிடம், 'மகிழுங்கள்' என்ற அழைப்பை முன்வைக்கிறது. குழந்தை இயேசுவின் வரவை  எதிர்பார்த்துக் காத்திருக்கும் திருவருகைக் காலத்தின் மூன்றாம் ஞாயிறு, Gaudete Sunday அதாவது, 'மகிழுங்கள் ஞாயிறு' என்று அழைக்கப்படுகிறது.

கொள்ளைநோய், அரசுகளின் அத்துமீறிய அடக்குமுறைகள், வேலையின்மை, உறுதியற்ற எதிர்காலம் என்ற பல்வேறு இருள் மேகங்கள் சூழ்ந்துள்ள இக்காலக்கட்டத்தில், நம் மகிழ்வை எங்கிருந்து பெறுவது என்பதை ஆய்வு செய்ய, இந்த ஞாயிறு வழிபாடு, நமக்கு வாய்ப்பளிக்கிறது.

உண்மையான மகிழ்வு, வெளியிலிருந்து வருவதல்ல, அது, நம் உள்ளத்திலிருந்து உருவாவது என்பதை, நாம் வாழ்வில் பலமுறை அனுபவித்துள்ளோம். புதுடெல்லியில், தங்கள் வாழ்வுக்காகப் போராடிவரும் விவசாயிகள், அந்த நெருக்கடியிலும், தங்களை அடக்குவதற்காக ஏவிவிடப்பட்டுள்ள வீரர்களுடன், தங்களிடம் உள்ளதைப் பகிர்ந்து, அதில் மகிழ்வடைவதைக் காணும்போது, உண்மையான மகிழ்வை, எந்தச் சூழலிலும் நாம் உணரமுடியும் என்ற உண்மையை நமக்கு உணர்த்துகின்றனர்.

கிறிஸ்துபிறப்பு விழாவின் மகிழ்வு, கண்ணைக் கவரும் வெளிப்புற அலங்காரங்களிலும், பரிசுப்பொருள்களிலும் உள்ளதென்ற தவறான எண்ணங்களை, வர்த்தக உலகம், நம்மீது திணிக்க முயல்கிறது. வர்த்தக உலகின் பாடங்களுக்கு எதிராக, உண்மையான மகிழ்வு உள்ளத்திலிருந்து வருவது என்பதைச் சொல்லித்தரும் பல கதைகளில் இதுவும் ஒன்று. அயர்லாந்தைச் சேர்ந்த ஒரு பெண்மணியின் இந்தக் கதையை, அவர் சொல்வதாகவே கேட்போம்:

பனி கொட்டிக் கொண்டிருந்த ஒரு நாள் மாலையில், என் வீட்டுக் கதவைத் தட்டியபடி ஒரு சிறுவனும், சிறுமியும் நின்றனர். அவர்கள் ஏழைகள் என்பதை, அவர்கள் அணிந்திருந்த உடையே பறைசாற்றியது. "உங்களிடம் பழையச் செய்தித்தாள்கள் உள்ளனவா?" என்று அக்குழந்தைகள் என்னிடம் கேட்டனர். அப்போதுதான், அவர்களது கால்களை நான் பார்த்தேன். உறையவைக்கும் பனியிலும், அவர்கள் அணிந்திருந்தது, மெலிதான செருப்புக்கள்.

அந்தச் செருப்புக்களைப்பற்றி, இக்கதையில் வாசிக்கும்போது, வறுமைப்பட்ட நாடுகளில், செருப்பேதும் அணியாமல் நடக்கும் பல்லாயிரம் மக்கள் நம் எண்ணங்களில் வலம்வருகின்றனர். குளிரிலிருந்தும், சுடும் வெயிலிலிருந்தும் காலடிகளைக் காத்துக்கொள்ள, சாக்குத் துணி, ‘பிளாஸ்டிக் பாட்டில்’, செய்தித்தாள், என்று பலவடிவங்களில், வறியோர் உருவாக்கிக் கொள்ளும் 'காலணிகள்', நம் நினைவில் நிழலாடுகின்றன.

நம் கதையைத் தொடர்வோம்: உறையவைக்கும் பனியிலும், மெலிதான செருப்புக்கள் அணிந்திருந்த அக்குழந்தைகளை, வீட்டுக்குள் வரச்சொன்னேன். அவர்கள் அணிந்திருந்த அழுக்கான செருப்புக்கள், பனியில் நனைந்திருந்ததால், ஈரமான, அழுக்கானச் சுவடுகளை வீட்டிற்குள் பதித்தன.

சுடச்சுட தேநீரும், சில ‘பிஸ்கட்டு’களும் தந்தேன். தேநீரை அருந்திய சிறுவன், என்னிடம், "நீங்கள் பணக்காரரா?" என்று கேட்டான். "நானா, பணக்காரியா? இல்லையே. ஏன் அப்படி கேட்கிறாய்?" என்று அவனிடமே கேட்டேன். அப்போது அவனது தங்கை என்னிடம், "நீங்கள் தேநீர் கொடுத்த இந்த ‘கப்’பும் தட்டும் ஒரே நிறத்தில் உள்ளன. அதனால், நீங்கள் பணக்காரராகத்தான் இருக்கவேண்டும் என்று நினைத்தோம்" என்று பதில் சொன்னாள்.

இதைச் சொன்னபின், நான் தந்தவற்றை எடுத்துக்கொண்டு அவர்கள் இருவரும் சென்றனர். அவர்கள் சென்றபின், அந்த ‘கப்’பையும் தட்டையும் பார்த்தேன். அவை ஒரே நிறத்தில் இருந்தது, அவர்கள் கண்களில், என்னை ஒரு பணக்காரியாகக் காட்டியது. ஆனால், என் வறுமை மட்டுமே, என் கண்களையும், எண்ணங்களையும், அதிகம் நிறைத்து வந்துள்ளதை எண்ணி வெட்கப்பட்டேன். உண்ண உணவு, உடுத்த உடை, வாழ ஒரு வீடு இவற்றைத் தந்த இறைவனை, அப்போது, நன்றியோடு எண்ணிப்பார்த்தேன்.

வீட்டைச் சுத்தம்செய்ய ஆரம்பித்தேன். அப்போது, அக்குழந்தைகளின் நனைந்த, அழுக்கான பாதங்கள் விட்டுச்சென்ற சுவடுகளை, சுத்தம் செய்யாமல் விட்டுவைத்தேன். நான் பணக்காரி இல்லையே என்று ஏக்கம் எழும்போதெல்லாம், அந்தப் பாதச்சுவடுகள், நான் எவ்வளவு பணக்காரி என்பதை, மீண்டும் மீண்டும் எனக்கு நினைவுறுத்த வேண்டும் என்பதற்காக, அந்தச் சுவடுகளை, துடைக்காமல் விட்டுவைத்தேன்.

அன்று, அவ்வீட்டில் பதிந்தன, இரு குழந்தைகளின் பாதங்கள்; அப்பெண்ணின் மனதில் பதிந்தன, அற்புதப் பாடங்கள்.

குழந்தை வடிவில் வரும் கண்ணனின் பாதங்களை வரைந்தால், வீட்டுக்குள், நல்லவை நடந்துவரும் என்று எண்ணுவது, இந்திய மண்ணில் ஓர் அழகிய மரபு. குழந்தை வடிவில் இறைவன் வரும் இந்த கிறிஸ்மஸ் நேரத்திலும், அவரது பாதங்கள், நம் இல்லங்களிலும், உள்ளங்களிலும் அழகிய பாடங்களைப் பதி்க்கவேண்டும் என்று மன்றாடுவோம்.

“உள்ளதை அனுபவித்து மகிழ்பவரே, உண்மையில் செல்வந்தர்கள்” (The truly rich are those who enjoy what they have) என்பது ஒரு யூதப் பழமொழி. இல்லாத தேவைகளை உருவாக்கி, இன்னும் அதிகம், அதிகமாய் பெறுவதில் மட்டுமே நமது கிறிஸ்மஸ் மகிழ்வு உள்ளது என்று வர்த்தக உலகம் சொல்கிறது. 'நான்' என்ற உலகை நிரப்பிக்கொள்வதே மகிழ்வு என்று சொல்லித்தரும் வர்த்தக, விளம்பர உலகின் பாடங்களுக்கு முற்றிலும் எதிர்மறையான பாடங்களை, உண்மையான கிறிஸ்மஸ் மகிழ்வைப்பற்றிய பாடங்களை, இன்றைய முதல் வாசகம் நமக்குச் சொல்லித்தருகின்றது. நமது வாழ்வின் பொருளும், மகிழ்வும் நம்மிடமிருந்து அல்ல, அடுத்தவரிடமிருந்து ஆரம்பமாகவேண்டும் என்பதை இறைவாக்கினர் எசாயா அவர்களின் வார்த்தைகள் முழங்குகின்றன: எசாயா 61: 1-3

தங்களையே மறந்து, மற்றவருக்காக உழைப்பவர்கள் பெறும் மகிழ்வு, 'நான்' என்ற சிறைக்குள் சிக்கிக்கொள்ளாது. இத்தகைய மகிழ்வுக்குத் தலைசிறந்த எடுத்துக்காட்டு, திருமுழுக்கு யோவான். தன்னைத் தேடி, மக்கள், கூட்டம், கூட்டமாக வந்தபோது, அத்தருணத்தைத் தனக்குச் சாதகமாக்கிக்கொண்டு, பேரும், புகழும் பெறுவதற்கு முயற்சி செய்யாமல், தான் உலக மீட்பர் அல்ல, அந்த மீட்பர் வரும் வழியைக் காட்டுவது மட்டுமே தன் பணி என்பதை, திருமுழுக்கு யோவான் வெளிப்படையாகச் சொன்னார். இதைத்தான் இன்றைய நற்செய்தியில் நாம் வாசிக்கிறோம்: யோவான் நற்செய்தி 1: 6-8, 19-20

தான் ஒளி அல்ல; அந்த ஒளியை மக்களுக்கு அடையாளம் காட்டவந்தவர் என்று, யோவானைப்பற்றி சொல்லப்பட்டுள்ள இவ்வரிகள், கிறிஸ்மஸைப்பற்றிய ஓர் உருவகத்தை நமக்கு நினைவுபடுத்துகிறது. திருமுழுக்கு யோவானின் பணியைக் குறித்தும், கிறிஸ்மஸ் விழாவின் உட்பொருளைக் குறித்தும் புரிந்துகொள்ள உதவும் அழகிய உருவகம், ஒரு கதையின் வடிவில், இதோ...

நள்ளிரவில் இடி, மின்னலுடன் கூடிய புயல் ஒன்று வீட்டைச் சூழ்ந்தபோது, தனி அறையில் படுத்திருக்கும் தன் சிறுவயது மகன் பயந்துவிடுவானே என்று அவனைப் பார்க்கச் செல்கிறார் ஒரு தந்தை. அங்கு, இருளில் படுத்திருக்கும் மகனைக் காண ஒரு ‘டார்ச்’ விளக்கை எடுத்துச்செல்கிறார். அவர் கதவைத் திறந்து ‘டார்ச்’ விளக்கை அடித்ததும், சப்தம் கேட்டு, எழுந்த மகன், பயத்தில், "யாரது?" என்று கேட்கிறான். தந்தை உடனே அந்த ‘டார்ச்’ விளக்கை அவன் மீது அடித்து, அவனை இன்னும் பயத்தில் ஆழ்த்தாமல், அந்த டார்ச் ஒளியைத் தன்மீது திருப்பி, "மகனே, நான்தான்!" என்று சொல்கிறார். மகனும், அந்த ஒளியில், தந்தையைக் கண்டு, பயம் தெளிகிறான்; மகிழ்கிறான்.

இருள் சூழ்ந்த உலகில் தன் மீது ஒளியைத் திருப்பி, இதோ நான் வருகிறேன் என்று இறைவன் சொன்னதே, கிறிஸ்மஸ் பெருவிழா. அந்த ஒளியை இறைவன் மீது திருப்பிய ‘டார்ச்’ விளக்கு, திருமுழுக்கு யோவான்.

கொள்ளைநோய் என்ற இருள் சூழ்ந்துள்ள இவ்வுலகில், கிறிஸ்து பிறப்பு விழாவுக்கு நம் இல்லங்களில் உயர்த்திக் கட்டும் விண்மீன்களைப் போல, நம்மிடம் ஒளிரும் உண்மையான மகிழ்வு, அனைவருக்கும் இறைவனை அடையாளம் காட்டும் மகிழ்வாக அமையட்டும். மகிழுங்கள் ஞாயிறு, இந்த உண்மையான, நிறைவான மகிழ்வை நமக்குச் சொல்லித்தரும்படி, குழந்தை இயேசுவை மன்றாடுவோம்.

12 December 2020, 13:51