தேடுதல்

Vatican News
புது தில்லியின் எல்லையில் போராடும் வேளாண் குடிமக்கள் புது தில்லியின் எல்லையில் போராடும் வேளாண் குடிமக்கள்  

உழவர்களின் போராட்டம் வெல்ல, தமிழக ஆயர்களின் ஆதரவு

வேளாண் குடிமக்களின் கோரிக்கைக்கு இந்திய நடுவண் அரசு செவிமடுத்து, தற்போது நிறைவேற்றியிருக்கும் வேளாண் சட்டங்களை உடனே திரும்பப்பெற தமிழக கத்தோலிக்க ஆயர் பேரவை கேட்டுக்கொள்கிறது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

புது தில்லியில் போராடும் வேளாண் குடிமக்களின் கோரிக்கைக்கு, இந்திய நடுவண் அரசு செவிமடுத்து, தற்போது நிறைவேற்றியிருக்கும் வேளாண் சட்டங்களை உடனே திரும்பப்பெற, தமிழக கத்தோலிக்க ஆயர் பேரவை கேட்டுக்கொள்கிறது, என்ற சொற்களுடன், தமிழக ஆயர்கள், டிசம்பர் 9, இப்புதனன்று, அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.

மதுரைப் பேராயரும், தமிழக ஆயர் பேரவைத் தலைவருமான பேராயர் அந்தோனி பாப்புசாமி அவர்கள் கையொப்பமிட்டு வெளியிட்டுள்ள இவ்வறிக்கையில், நடுவண் அரசால், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கும் வேளாண் சட்டங்கள், இந்திய நாட்டின் வேளாண் மக்களின் வாழ்வுரிமையைப் பறிக்கும் என்பதில் எவ்வித அய்யமுமில்லை என்று கூறப்பட்டுள்ளது.

இந்தச் சட்டம், இந்திய கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிராகவும், மாநிலங்களின் சுயாட்சியை கேள்விக்குள்ளாக்கும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது என்றும், இந்தச் சட்டத்தால், மக்களாட்சியின் மிக முக்கிய பண்பான தெரிவு செய்யும் சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது என்றும், தமிழக ஆயர்கள் கூறியுள்ளனர்.

வேளாண் குடிமக்கள், உடலுழைப்பைத் தந்து உற்பத்தி செய்யும் விளைபொருள்களின் விலையை, வேறு எவரோ நிர்ணயிப்பது, அவ்வாறு நிர்ணயிப்பது, 'கார்ப்பரேட்' என்று சொல்லப்படும் பன்னாட்டு பெரு நிறுவனங்களாக இருப்பது என்பதெல்லாம், இந்தியாவின் எதிர்காலத்தை இருள் சூழும் நிலைக்கு இட்டுச்செல்லும் என்பதை, இவ்வறிக்கை அழுத்தந்திருத்தமாகக் கூறியுள்ளது.

கோவிட்-19 கொள்ளைநோயின் அச்சங்களையும், கடும் குளிரையும் பொருள்படுத்தாமல், புதுடெல்லியின் எல்லையில், இரவு பகலென்று பாராமல் போராடும் வேளாண் குடிமக்களின் உறுதியை, தமிழக ஆயர்களின் அறிக்கை, பாராட்டியுள்ளது.

உழவர்கள் மேற்கொண்டுள்ள இப்போராட்டத்தில், அரசியல் எதுவும் திண்ணமாக இல்லை என்பதால், இதில் அரசியல் உள்நோக்கம் உண்டென்றும், எதிர்க்கட்சிகளின் தூண்டுதலால் நடைபெறுகிறது என்றும், ஆளும் அரசின் அமைச்சர்கள் கூறிவருவதை தவிர்க்கவேண்டும் என்று ஆயர்கள் கூறியுள்ளனர்.

மக்களாட்சியின் நியமங்களைப் பின்பற்றி, அறவழியே போராடிவரும் குடிமக்களின் குரலுக்கு அரசு செவிமடுக்க வேண்டும் என்ற வேண்டுகோளுடனும், உழவர்களின் போராட்டம் வெல்ல, தமிழக ஆயர் பேரவை தன் முழு ஆதரவை வழங்கும் என்ற உறுதியுடனும், பேராயர் பாப்புசாமி அவர்கள் வெளியிட்டுள்ள இந்த அறிக்கை நிறைவடைகிறது.

உதவித் தலைவர், ஆயர் நீதிநாதன், செயலர், ஆயர் தாமஸ் பால்சாமி, மற்றும் பொருளாளர் ஆயர் அந்தோனிசாமிஆகியோர் பொறுப்பில் இயங்கிவரும் தமிழக ஆயர்கள் பேரவை விடுத்துள்ள இந்த அறிக்கை, தமிழகத்தின் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

10 December 2020, 15:27