தேடுதல்

Vatican News
பொலிவியா நாட்டில் வறியோருக்கு கிறிஸ்மஸ் கால உதவிகளை வழங்கும் Sant’Egidio குழுமம் பொலிவியா நாட்டில் வறியோருக்கு கிறிஸ்மஸ் கால உதவிகளை வழங்கும் Sant’Egidio குழுமம் 

உலக அமைதி நாள் - Sant’Egidio குழுமத்தின் நேரடி ஒளிபரப்பு

சனவரி 1, புத்தாண்டு நாளன்று, உரோம் நகரின் Sant’Egidio குழுமம், பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளின் சாட்சிய அறிக்கைகளையும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கும் மூவேளை செப உரையையும் வலைத்தளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யும்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

சனவரி 1, புத்தாண்டு நாளன்று, உலக அமைதி நாள் சிறப்பிக்கப்படுவதையொட்டி, உரோம் நகரில் செயலாற்றிவரும் Sant’Egidio குழுமம், பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் பகிர்ந்துகொள்ளும் சாட்சிய அறிக்கைகளையும், இறுதியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கும் மூவேளை செப உரையையும் வலைத்தளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வோர் ஆண்டும், சனவரி 1ம் தேதி, நண்பகலையொட்டி, Sant’Egidio குழுமம், வத்திக்கான் புனித பேதுரு வளாகம் நோக்கி நடத்திவரும் பேரணியும், அதன் முடிவில் திருத்தந்தை வழங்கும் மூவேளை செப உரையும் இவ்வாண்டு, கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக நடைபெறாது என்பதை அறிவித்துள்ள இக்குழுமம், அதே நண்பகல் வேளையில், பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளும் திருத்தந்தையும் வழங்கும் செய்திகள் ஒளிபரப்பாகும் என்று அறிவித்துள்ளது.

மொசாம்பிக், லெபனான், சிரியா, தென் சூடான், மத்திய ஆப்ரிக்கா ஆகிய நாடுகளிலிருந்தும், கிரேக்க நாட்டின் லெஸ்போஸ் தீவில் உள்ள புலம்பெயர்ந்தோர் முகாமிலிருந்தும் பல்வேறு பிரதிநிதிகள் உலக அமைதியைக் குறித்து பகிர்ந்துகொள்ளும் கருத்துக்கள் ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்ரிக்காவில் எய்ட்ஸ் நோயையும், கோவிட்-19 பெருந்தொற்றையும் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகள், லெபனான் நாட்டில் ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட பெரும் வெடிவிபத்தைத் தொடர்ந்து அங்கு நடைபெற்றுவரும் மறுவாழ்வு முயற்சிகள், சிரியாவிலும், லெஸ்போஸ் தீவிலும் புலம்பெயர்ந்தோர் நடுவே மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகள் ஆகியவை குறித்து அந்தந்த நாட்டு பிரதிநிதிகள் தங்கள் எண்ணங்களை பகிர்ந்துகொள்வர் என்று Sant’Egidio குழுமத்தின் தலைவர், Marco Impagliazzo அவர்கள் கூறினார்.

இந்நிகழ்வின் இறுதியில், உலக அமைதி நாள் மற்றும் மரியா இறைவனின் தாய் பெருவிழா ஆகியவற்றையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கும் மூவேளை செப உரை, வலைத்தள நேரடி ஒளிபரப்பில் இடம்பெறும் என்று, Sant’Egidio குழுமம் அறிவித்துள்ளது. (Zenit)

30 December 2020, 14:41