தேடுதல்

Vatican News
திருத்தந்தை முதலாம் Gelasius திருத்தந்தை முதலாம் Gelasius 

திருத்தந்தையர் வரலாறு – பிளவும் இணைப்பும்

பிறரன்பு நடவடிக்கைகளுக்குரிய திருஅவையின் கடமையை தன் எழுத்துக்களில் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியவர் திருத்தந்தை செலாசியுஸ்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

கி.பி.483ம் ஆண்டு திருஅவையின் 48வது திருத்தந்தையாகப் பொறுப்பேற்றார் பாப்பிறை மூன்றாம் பெலிக்ஸ்.  இவர் உரோமைய செனட் அவைக் குடும்பத்தைச் சேர்ந்தவர் எனினும், திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்குமுன், இவரைப் பற்றி பெரிதாக எவரும் தெரிந்திருக்கவில்லை. திருஅவையில் புகழ் பெற்று விளங்கிய புனித பெரிய கிறகரி, திருத்தந்தை 3ம் பெலிக்ஸின் உறவினர் என நம்பப்படுகிறது. திருத்தந்தை 3ம் பெலிக்ஸின் காலத்திலும் மேற்கத்திய மற்றும், கீழை வழிபாட்டு முறை திருஅவைகளுக்கு இடையேயான முரண்பாடு தொடர்ந்து கொண்டிருந்தது. பேரரசர் Geno அவர்களால், கான்ஸ்தாந்திநோபிள் முதுபெரும்தந்தை Acaciusன் தூண்டுதலின் பேரில் வெளியிடப்பட்ட, நம்பிக்கை குறித்த ஓர் அறிக்கை, கீழை வழிபாட்டுமுறை திருஅவையை 3 அல்லது 4 கூறுகளாக உடைத்தது. பேரரசரின் அறிக்கையை எதிர்த்தவர்கள் தண்டிக்கப்பட்டனர். பேரரசர் ஒரு படி மேலே போய், அந்தியோக்கியா, மற்றும், அலெக்சாந்திரியா முதுபெரும்தந்தையர்களையே பதவி நீக்கம் செய்தார். அதன்பின் பேரரசருக்கு வேண்டியவர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த புதிய முதுபெரும்தந்தையர்களான, Peter the Tanner, Peter Mongus ஆகியோரை, திருத்தந்தை 3ம் பெலிக்ஸ், திருஅவையிலிருந்தே விலக்கி வைத்தார். இதனால் திருஅவைக்குள் ஏற்பட்ட காயம் ஆற 35 ஆண்டுகள் பிடித்தன.

இதற்கிடையில், கான்ஸ்தாந்திநோபிள் முதுபெரும்தந்தை Acacius, அலெக்சாந்திரியாவின் புதிய முதுபெரும்தந்தை Peter Mongusஐ, திருத்தந்தையின் ஆணைக்கு எதிராக ஏற்றுக்கொண்டார். இதனால், கோபமுற்ற திருத்தந்தை 3ம் பெலிக்ஸ், விளக்கம்கேட்டு முதுபெரும்தந்தை Acaciusக்கும், பேரரசருக்கும் ஒரு பிரதிநிதிகள் குழுவை அனுப்பினார். என்ன நடந்தது என்றால், திருத்தந்தையின் இக்குழு சிறைபிடிக்கப்பட்டு, துன்புறுத்தப்பட்டு, Acaciusன் தப்பறைகளை ஏற்க கட்டாயப்படுத்தப்பட்டது. அக்குழுவும் திருத்தந்தைக்கு எதிராக, முதுபெரும்தந்தை Acaciusடன் இணைந்தது. இதையெல்லாம் அறியவந்து கவலையுற்ற திருத்தந்தை 3ம் பெலிக்ஸ், உரோம் நகர் இலாத்தரன் பெருங்கோவிலில் 77 ஆயர்கள் கொண்ட மாநாட்டைக் கூட்டி, Acaciusஐயும், அவரோடு இணைந்து கொண்ட, தான் அனுப்பிய குழு அங்கத்தினர்களையும் திருஅவையிலிருந்து விலக்கினார். ஆனால், முதுபெரும்தந்தை Acacius இதைக் குறித்தெல்லாம் கவலைப்படவே இல்லை. ஏனெனில், பேரரசரின் முழு ஆதரவு அவருக்கிருந்தது. இதனால் பதவி விலகாமல், தான் சாகும் வரை திருத்தந்தையின் ஆணையை மீறி கான்ஸ்தாந்திநோபிள் முதுபெரும்தந்தையாக பதவியைத் தொடாந்தார். அவர் இறந்த பின்னர் வந்த இரு முதுபெரும் தந்தையர்களின் காலத்திலும் திருஅவையுடன் ஒன்றிப்பு ஏற்படவில்லை. எட்டாண்டு, 11 மாதங்கள், 23 நாட்கள் திருஅவையை வழிநடத்தி, 492ம் ஆண்டு திருத்தந்தை 3ம் பெலிக்ஸ் இறந்தபோதுகூட, இருதரப்பினருக்கும் இடையே, அதாவது, கான்ஸ்தாந்திநோபிள் முதுபெரும்தந்தைக்கும், உரோமை தலைமைத் திருஅவைக்கும் இடையே உடன்பாடு காணப்படவில்லை. இறுதியில், 518ம் ஆண்டுதான் இப்பிரச்சனை முடிவுக்குவந்தது.

திருத்தந்தை 3ம் பெலிக்ஸ்க்குப்பின் பதவிக்கு வந்தவர் திருத்தந்தை முதலாம் Gelasius. Acacius பற்றிய பிரச்சனை ஒருபுறம் தொடர்ந்து கொண்டிருக்க, இத்திருத்தந்தையோ உரோம் தலைமைத் திருஅவையின் அதிகாரத்தை எவ்வகையிலும் விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை. ஏனெனில் தலைமைப்பீடத்தின் அதிகாரம், கௌரவம், எவ்வகையிலும் சமரசம் செய்யப்பட முடியாதது என்பதில் உறுதியாக இருந்தார். மன்னருக்குரிய அதிகாரம் மண்ணோடு தொடர்புடையது, திருஅவைத் தலைவருடைய அதிகாரம் ஆன்மாக்களின் மேம்பாட்டோடு தொடாபுடையது என்பதை வலியுறுத்தினார். பழைய பாரம்பரியங்களுக்கு முழு ஆதரவு வழங்குபவராக இருந்தாலும், திருஅவைக்கு வழங்கப்படும் எந்த ஒரு நன்கொடையும், ஒரு பகுதி ஏழைகளுக்கும், இரண்டாம் பகுதி கோவில்களை நிர்வகிக்கவும், மூன்றாம் பகுதி ஆயருக்கும், நான்காம் பகுதி அருள்பணியாளர்களுக்கும் செல்லவேண்டும் என ஆலோசனை வழங்கினார் திருத்தந்தை செலாசியுஸ். பிறரன்பு நடவடிக்கைகளுக்குரிய திருஅவையின் கடமையை தன் எழுத்துக்களில் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியவர் இந்த பாப்பிறை. இவர் நிறைய பாடல்களை இயற்றியுள்ளார். மேலும், திருப்பலிக்கென ஒரு முறையான வழிபாட்டு படிவத்தையும் உருவாக்கித் தந்துள்ளார். நான்கரை ஆண்டுகளே பதவியிலிருந்தாலும், திருஅவை கொள்கைகளை வடிவமைப்பதிலும், திருவழிபாட்டு கொண்டாட்டங்களை முறைப்படுத்துவதிலும் சிறப்புச் சேவை ஆற்றியுள்ளதோடு, செபம், நோன்பு, போன்றவற்றில் பெரும் வழிகாட்டியாகவும் இருந்துள்ளார். பிறரன்பு நடவடிக்கைகளில் அளவுக்கதிகமாக ஆர்வம் கொண்டு, ஏழைகளின் நலனுக்காகவே இவர் உழைத்ததால், இத்திருத்தந்தை இறந்தபோது இவர் கையில் ஒரு காசுகூட இருக்கவில்லை என்பது இன்றும் வரலாற்று ஆசிரியர்கள் வியந்து கூறும் ஒன்று.

திருத்தந்தை செலாசியுஸின் மரணத்திற்குபின் 496ம் ஆண்டு,  திருஅவையின் 50வது திருத்தந்தையாக பதவியேற்றார் திருத்தந்தை இரண்டாம் அனஸ்தாசியுஸ் (Anastasius). இவர் காலத்தில் நிலவிவந்த Traducianism  என்ற உயிர் முதற்பெருக்கக் கோட்பாட்டை வன்மையாக கண்டித்தார்  திருத்தந்தை இரண்டாம் அனஸ்தாசியுஸ். உயிர் முதற்பெருக்கக் கோட்பாடு என்பது, ஆன்மாவின் தோற்றம் குறித்தது. அதாவது, பெற்றோர் வழி உடலைப்பெறும் மனிதன், அவன் பிறக்கும்போதே உடலுடன் ஆன்மாவைப் பெறுகிறான் என்பது இதன் சாரம். இதன்படி பார்த்தால், ஆதாமுக்கு மட்டுமே கடவுள் ஆன்மாவைப் படைத்தார். அதிலிருந்து வழி வழியாக நம் ஆன்மா பெறப்படுகிறது என்பது இக்கோட்பாடு. அதாவது, ஆன்மா புதிதாக ஒவ்வொருவருக்கும் படைக்கப்படவில்லை, அதனால்தான் ஜென்மபாவமும் ஒவ்வொருவரையும் தொடர்கிறது என்பது இக்கொள்கையை கொணர்ந்தவர்களின் வாதம். இதனை வன்மையாக கண்டித்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார் திருத்தந்தை இரண்டாம் அனஸ்தாசியுஸ். இது  தவிர, இவரைக் குறித்து பெரிய குறிப்புகள் எதுவும் வரலாற்றில் இல்லை. இத்திருத்தந்தை இரண்டே ஆண்டுகள் ஆட்சிபுரிந்து 498ம் ஆண்டு நவம்பர் 16ல் இறைபதம் சேர்ந்தார்.

கடந்த சில வாரங்களில் நம் திருத்தந்தையர் வரலாற்று நகழ்ச்சியில், 50 திருத்தந்தையர்கள் குறித்து நோக்கியுள்ளோம். இந்த வரலாற்றில் நாம் இன்னும் கால் கிணறுகூட தாண்டவில்லை. வரும்வாரம் 51ம் திருத்தந்தை புனித Symmachus அவர்களுடன் பயணத்தைத் தொடர்வோம்.

09 December 2020, 15:38