தேடுதல்

Vatican News
பெத்லகேம் கிறிஸ்து பிறப்பு பசிலிக்கா பெத்லகேம் கிறிஸ்து பிறப்பு பசிலிக்கா  (AFP or licensors)

கோவிட்-19 சூழலில் கிறிஸ்மஸ்: கடவுளில் அதிக நம்பிக்கை வைக்க..

கிறிஸ்மஸ், கடவுளின் தாய் புனித கன்னி மரியா, திருக்குடும்பம் திருக்காட்சி, ஆகிய பெருவிழாக்களில் பாத்திமா திருத்தல திருப்பலிகளில் எடுக்கப்படும் சிறப்பு உண்டியல், மொசாம்பிக் நாட்டின் புலம்பெயர்ந்த மக்களுக்கென வழங்கப்படும்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கொரோனா தொற்றுக்கிருமி அச்சுறுத்தலின் இரண்டாவது, மூன்றாவது அலைகளின் காலக்கட்டத்தில் சிறப்பிக்கப்படும் கிறிஸ்மஸ் பெருவிழா, நமக்கு வழங்கும் முக்கிய செய்திகளை மையப்படுத்தி, பல்வேறு தலத்திருஅவைத் தலைவர்கள், தங்களின் கிறிஸ்மஸ் செய்திகளை வெளியிட்டுள்ளனர்.

எருசலேம் முதுபெரும்தந்தையின் செய்தி

எருசலேம் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை போராயர் பியெர்பத்திஸ்தா பிட்ஸபல்லா (Pierbattista Pizzaballa) அவர்கள் வெளியிட்டுள்ள கிறிஸ்மஸ் செய்தியில், கோவிட்-19 பெருந்தொற்று உலக அளவில் அச்சங்களை உருவாக்கி, எல்லாத் திட்டங்களையும் அழித்து, அனைத்தையும் புரட்டிப்போட்டுள்ள இவ்வேளையில், கடவுள், தம் அடையாளங்களை மனிதருக்குத் தொடர்ந்து காட்டிவருகிறார் என்று கூறியுள்ளார்.

நமக்குள் மறைவாய் இருக்கும் கடவுளது சக்தி, அவரது பிரசன்னம், இறையாட்சி  போன்று கடவுள் நமக்கு வழங்கும் தமது அடையாளங்களை, தூய ஆவியாரின் துணைகொண்டு பார்க்க இயலும் என்று கூறியுள்ள போராயர் பிட்ஸபல்லா அவர்கள், மாட்டுத்தொழுவத்தில் உள்ள குழந்தையும், அந்த அடையாளங்களில் ஒன்று எனக் குறிப்பிட்டுள்ளார்.

நாம் வாழ்வில் எத்தகைய துன்பங்களை எதிர்கொண்டாலும், அவற்றுக்கு மத்தியிலும், நம் எதார்த்தத்தில், கடவுளின் பிரசன்னத்தை ஏற்றுக்கொள்வதற்கு ஆவியாரால் நாம் வழிநடத்தப்படவேண்டும் என்று கூறியுள்ள முதுபெரும்தந்தை போராயர் பிட்ஸபல்லா அவர்கள், நம் எண்ணங்களைப் புரட்டிப்போட, நம் எதிர்பார்ப்புக்களை வியக்கவைக்க, நமது இருப்பை அசைக்க, நம்மை விழித்தெழச் செய்ய இயேசு இவ்வுலகிற்கு வந்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.

நாம் வாழ்வில் எதைத் தெரிவுசெய்கிறோம் என்பது குறித்து சிந்திப்பதற்கு அழைப்பு விடுத்துள்ள முதுபெரும்தந்தை போராயர் பிட்ஸபல்லா அவர்கள், கிறிஸ்மஸ் என்பது, இயேசு கிறிஸ்துவின் பிறப்பிலும், அவரது பிரசன்னத்திலும் நம்பிக்கை வைப்பதாகும் என்று கூறியுள்ளார்.

பாத்திமா திருத்தல அதிபரின் செய்தி

மேலும், போர்த்துக்கல் நாட்டு பாத்திமா அன்னை மரியா திருத்தலத்தின் அதிபரான அருள்பணி கார்லோஸ் காபேசின்ஹாஸ் (Carlos Cabecinhas) அவர்கள் வலைக்காட்சி வழியாக வெளியிட்டுள்ள கிறிஸ்மஸ் செய்தியில், பெருந்தொற்று காலத்தில் கொண்டாடப்படும் கிறிஸ்மஸ் நமக்கு விடுக்கும் அழைப்பு என்ன என்று சிந்திக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

கிறிஸ்மஸைக் கொண்டாடுவது என்பது, கடவுளின் கரங்களில் நம்மையே கையளிப்பதாகும், மற்றும், அதிகத் தேவையில் இருப்போர் மற்றும், வலுவற்றோர் மீது கனிவும் அக்கறையும் காட்டுவதற்கு நம்மையே அர்ப்பணிப்பதாகும் என்று, அருள்பணி காபேசின்ஹாஸ் அவர்கள் கூறியுள்ளார்.

கிறிஸ்மஸ், கடவுளின் தாய் புனித கன்னி மரியா, திருக்குடும்பம், திருக்காட்சி, ஆகிய பெருவிழாக்களில், பாத்திமா திருத்தலத்தில் நிறைவேற்றப்படும் திருப்பலிகளில் எடுக்கப்படும் சிறப்பு உண்டியல்., மொசாம்பிக் நாட்டின் Pemba மறைமாவட்டத்தில், கடுமையான மனிதாபிமான நெருக்கடிகளை எதிர்கொள்ளும் புலம்பெயர்ந்த மக்களுக்கென வழங்கப்படும் என்றும், அருள்பணி காபேசின்ஹாஸ் அவர்கள், நம் துன்பங்களை கடவுள் அறிகிறார் என்றும் கூறியுள்ளார்.

Pemba மறைமாவட்டத்தின் Cabo Delgadoவில், இஸ்லாமிய அடிப்படைவாத புரட்சியாளர்களின் தாக்குதலால் இரண்டாயிரத்துக்கு அதிகமான மக்கள் இறந்துள்ளனர் மற்றும், 5,60,000 பேர் புலம்பெயர்ந்துள்ளனர் என்றும் கூறியுள்ள அருள்பணி காபேசின்ஹாஸ் அவர்கள், நம் வலுவற்றநிலையில் கடவுள் நம்மைத் தேடிவருகிறார் என்று, தன் கிறிஸ்மஸ் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

23 December 2020, 14:46