தேடுதல்

Vatican News
பாகிஸ்தான் பேராயர் Sebastian Shaw பாகிஸ்தான் பேராயர் Sebastian Shaw 

முன்னாள் கைதிகளுக்கு பாகிஸ்தான் திருஅவை உதவி

முன்னாள் கைதிகள், புதுப்பிக்கப்பட்ட மனிதர்களாக சமுதாயத்தில் தங்களை நிலை நிறுத்திக்கொள்ள உதவும் திருஅவையின் திட்டங்கள்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் கைதிகளுக்கு புனர்வாழ்வு வழங்கி அவர்களை சமுதாயத்தோடு  இணைக்கும் திருஅவைப்பணிகளின் ஒரு பகுதியாக, 41 பேருக்கு ரிக்சாக்களையும், தொழில் கருவிகளையும் கொடையாக வழங்கியுள்ளார், பாகிஸ்தான் பேராயர் Sebastian Shaw.

கிறிஸ்துபிறப்பு காலத்தின் கொடையாக இந்த ரிக்சாக்களை வழங்கிய இலாகூர் பேராயர் Shaw அவர்கள், முன்னாள் கைதிகள், தங்கள் சொந்த காலிலேயே நின்று வருமானத்தை ஈட்ட, இந்த உதவிகளை திருஅவை ஆற்றுவதாகக் கூறினார்.

இரு கிறிஸ்தவ கோவில்களை தாக்கி சேதப்படுத்தினார்கள் என தவறாக கருதப்பட்ட இரு இஸ்லாமியர்களை தாக்கி கொன்றதாக, 40 கிறிஸ்தவர்கள் 2015ம் ஆண்டு கைது செய்யப்பட்டு, அவ்விருவரின் குடும்பங்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கவேண்டும் என்ற கட்டுப்பாட்டுடன், 38 பேர் விடுவிக்கப்பட்டனர். இரு கிறிஸ்தவர்கள், ஏற்கனவே சிறையில் இறந்துவிட்டனர்.

40 கிறிஸ்தவர்கள், ஓர் இஸ்லாமியர் என, 41 பேருக்கு, ரிக்சா வழங்கல், மற்றும், தொழில் துவங்குவதற்கான இந்த உதவிகள், முன்னாள் கைதிகள் புதுப்பிக்கப்பட்ட மனிதர்களாக சமுதாயத்தில் தங்களை நிலை நிறுத்திக்கொள்ள உதவும் என, தலத்திருஅவை கூறியுள்ளது.

முன்னாள் கைதிகள், சமுதாயத்தில் தங்களை ஒருங்கிணைக்கும் நோக்கத்துடன் உதவிகளை வழங்கிய திருஅவை கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய பாகிஸ்தானின் பஞ்சாப் மாநில மனித உரிமைகள் துறை அமைச்சர் Ejaz Alam Augustine அவர்கள், தலத்திருஅவையின் மனிதாபிமானப் பணிகளையும், அநீதியாக சிறைவைக்கப்பட்டிருக்கும் கிறிஸ்தவர்களை விடுவிப்பதில் பிரதமர் இம்ரான் கான் அரசின் முயற்சிகளையும், பாராட்டுவதாகத் தெரிவித்தார்.

22 December 2020, 15:11