தேடுதல்

திருக்குடும்பம் திருக்குடும்பம் 

நம் மீட்பர் இயேசுவின் பிறப்புக்காய் காத்திருக்கும் மரியா

கிறிஸ்து எனப்படும் மெசியா வருவார் என எனக்குத் தெரியும். அவர் வரும்போது அனனத்தையும் எங்களுக்கு அறிவிப்பார்" (யோவா.4,25) என்ற நம்பிக்கைதான் கிறிஸ்துவின் பிறப்பு.

மேரி தெரேசா: வத்திக்கான்

கிறிஸ்மஸ் பெருவிழா அண்மித்து வருகிறது. தூய ஆவியாரின் வல்லமையால் நம் மீட்பராம் இயேசுவை கருத்தாங்கிய நாசரேத்து கன்னி மரியா, தம் மகனைப் பெற்றெடுக்க காத்திருந்தது பற்றி நம்மை சிந்திக்க அழைக்கிறார், மரியின் ஊழியர் சபையின் அருள்பணி அமல்ராஜ்.

நம் மீட்பர் இயேசுவின் பிறப்புக்காய் காத்திருக்கும் மரியா

மீட்பரின் பிறப்புக்காய்க் காத்திருக்கும் அன்னை மரியா

திருவருகைக் காலம் என்பது இறைமகன் கிறிஸ்துவினுடைய பிறப்புக்காகக் காத்திருக்கும் காலம். கிறிஸ்து எனப்படும் மெசியா வருவார் என எனக்குத் தெரியும். அவர் வரும்போது அனைத்தையும் எங்களுக்கு அறிவிப்பார்" (யோவா.4,25) என்ற நம்பிக்கைதான் கிறிஸ்துவின் பிறப்பு. காத்திருத்தல் என்பது, ஓர் அழகிய இன்பமான சுகம் நிறைந்த ஓர் அனுபவம். மனித வாழ்வு என்பது, அவனுடைய கனவுகள் நிறைவேறும் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையோடு காத்திருக்கும் பல அனுபவங்கள் நிறைந்தது என்றால் அது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று அல்ல.  ஏனெனில், ஒவ்வொரு மனிதனும, எதோ ஒன்றை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றான். குழந்தை பெற்றோரின் பாசத்தை எதிர்பார்த்தும், மாணவன் தேர்வு மற்றும் மதிப்பெண்ணை  எதிர்பார்த்தும், காதலன் காதலியை எதிர்பார்த்தும், இளைஞர் இளம் பெண்கள் தனது இணையோடு இணைந்து புதுவாழ்வைத் தொடங்கும் மண நாளை எதிர்பார்த்தும், மணமான பெண் தனது கருப்பையில் ஒரு புதிய உயிர் உருவாவதையும், கருத்தரித்த பெண், அப்பிள்ளையைப் பெற்றெடுக்கும் நாளை நோக்கியும், ஒரு பிள்ளையை மகப்பேறு வேதனையோடு பெற்றெடுத்த அன்னை தனது சதையும், எலும்புமான அப்புதிய உயிராகிய அக்குழந்தையின் முகத்தைக் கண்டு அதைத் தனது மார்போடு கட்டித் தழுவி அரவணைத்துக் கொஞ்சவும் காத்திருக்கின்றாள். இப்படியெல்லாம்  மனித வாழ்வில் எதிர்பார்ப்புக்கள் பல்வேறு கூறுகளை உள்ளடக்கியதாக  அமைகின்றது. 

இதோ, திருவருகைக் காலத்தில் இருக்கின்ற நாம், இன்று இயேசு கிறிஸ்துவைப் பெற்றெடுக்கவிருக்கும் கன்னி மரியாளுடைய காத்திருப்பைப் பற்றி சற்று சிந்திப்போம். ஒரு  பெண்ணுக்குத் தாய்மை என்பது இறைவன் கொடுக்கும் மிகப்பெரிய கொடையாகும். ஏனெனில்  அவளிடமிருந்து ஒரு புதிய உயிர் உருவாகின்றது. இயேசுவினுடைய பிறப்பினிலே ஒரு அதிசயம் நடக்கின்றது. அதாவது இவ்வுலகையும் மனிதனையும் படைத்தவனையே ஒரு பெண் தனது கருவில்  தாங்குகின்றாள். இங்குதான் கிறித்தவ மானுடவியலின் தனிச்சிறப்பும், வார்த்தையான இறைவனின் மனுவுருவாதல் நிகழ்வின் மகத்துவமும் வெளிப்படுகின்றது. இவ்வாறு, கிறிஸ்து பிறப்பு நிகழ்வானது பெண்மையையும், அதன்  கொடையான தாய்மையையும் போற்றும் ஒரு நிகழ்வாகும்.

இறைமகன் கிறிஸ்து பிறப்பு அறிவிப்பு நிகழ்வை விவரிக்கும் புனித பெர்நார்து அக்காட்சியை “கன்னி [மரியே], கர்ப்பமாகி ஒரு மகனனப் பெறுவீர்கள் என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள், மேலும், அது மனிதனால் அல்ல, மாறாக பரிசுத்த ஆவியினால் இருக்கும் என்றும் நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். வானதூதர் உம்முடைய ஒரு பதிலுக்காக காத்திருக்கிறார்; அவரை அனுப்பிய கடவுளிடம் அவர் திரும்ப வேண்டிய நேரம் இது. பெண்ணே, உம்முடைய இரக்க வார்த்தைக்காக நாமும் காத்திருக்கிறோம்; பாவத்தின் தண்டனையானது எமக்குப் பாரமாக இருக்கிறது” (An excerpt from a  homily In Praise of the Virgin Mother by St. Bernard (Hom. 4, 8-9: Opera omnia, Edit. Cisterc. 4 [1966], 53- 54) என்று விவரிக்கின்றார். 

இவ்வுலகின் மீட்புக்காகப் பன்னெடுங்காலமாகக் காத்துக்கிடந்த பல ஆயிரக்கணக்கான மக்களில், குறிப்பாக, யூதப் பெண்களில் கன்னி மரியாளும் ஒருவர். ஏனென்றால், எசாயா கூறும். “இதோ, கருவுற்றிருக்கும் அந்த இளம்பெண் ஓர் ஆண் மகவைப் பெற்றெடுப்பார்; அக்குழந்தைக்கு அவள் 'இம்மானுவேல்' என்று பெயரிடுவார்” (எசா.7,14) என்னும் மீட்பர் பற்றிய இறைவாக்கினர் எசாயாவின் முன்னறிவிப்பை அனைத்து யூதப் பெண்களும் அறிவர். எனவே, எல்லா யூதகுலக் கன்னிப்பெண்களும் குறிப்பாக அரச குடும்பத்து கன்னிப் பெண்கள், “மெசியா என்னுடைய கருவில் உருவாக மாட்டாரா? என்று தவமிருந்து ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தனர்.

அப்படி அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்க வான்தூதர் கனவில்  தோன்றி, “இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். அவர் பெரியவராயிருப்பார்; உன்னதக் கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியனணயை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தின் மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது" (லூக்.1,31- 33) என்று  கலிலேயாவில் உள்ள மரியா என்னும் சாதாரண ஏழைக் குடும்பத்துக் கன்னியிடம் சொன்னபோது அவளால் அதை முழுமையாக நம்ப முடியவில்லை.

யூத மத சமய சம்பிரதாயங்களையும் சமூக வரம்புகளையும் மீறி அது இறைமகனாகவே இருந்தாலும், ஒரு சாதாரண இளம் பெண்ணால் எப்படி திருமணத்திற்கு முன்பாகவே ஒரு கருவைத் தன்னுடைய வயிற்றில் தாங்க முடியும்? இந்த உலகையே படைத்தவரை தன்னுடைய உதரத்தில் தாங்குவதா? இது எங்ஙனம் முடியும்? இந்தக் கேள்விகளின் வேள்வியில் எழுந்த அறிவியல் பூர்வமானதொரு கேள்விதான், "இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே!" (லூக்.1,34). அன்னை  மரியாளுடைய இந்தக் கேள்விகளில் நியாயம் இல்லாமல் இல்லை, உண்மை இல்லாமல் இல்லை,  எதார்த்தம் இல்லாமல் இல்லை. இந்தக் கேள்விகளுக்கு வானதூதர் விளக்கம் கொடுக்கையில், உம்மிடம் பிறக்கப்போவது ஒரு சாதாரண குழந்தை அல்ல, மாறாக அது அதிசயக் குழந்தை. அது இறைவனுடைய மகன். அவர் அதிசயமான முறையிலே ஆவியின் வல்லமையினால் உன் கருப்பையில் மனிதனாக உருவாவார் என்று விளக்கம் கொடுக்கின்றார். வானதூதர் இப்படிச் சொல்லியும் குழப்பத்திலிருந்த மரியாளுக்கு  கடவுளுடைய வல்லமையையும் அவரால் எதையும் செய்ய முடியும் என்பதையும் விளக்கும்வண்ணம் அவளே தன்னுடைய இரு கண்களாலும் பார்த்துத் தெளிவுபெறும் விதமாக, “உம் உறவினராகிய எலிசபெத்தும் தம் முதிர்ந்த வயதில் ஒரு மகனனக் கருத்தரித்திருக்கிறார். கருவுற இயலாதவர் என்று சொல்லப்பட்ட அவருக்கு இது ஆறாம் மாதம். ஏனெனில், கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை" (லூக்.1: 36-37) என்கின்ற அடையாளமும் கொடுக்கப்படுகிறது. இறைவனுடைய இந்த வார்த்தைகளை நம்பி, "நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்"(லூக்.1,38) என்று சொல்லி மானுட மீட்புக்காக இறைமகனைத் தன்னுடைய கருப்பையில் தாங்கச்  சம்மதிக்கின்றாள். 

2. இறைவன் எல்லாம் வல்லவர் மலடியையும் குழந்தைச் செல்வத்தால் மகிழச் செய்பவர் என்பதை இந்த வானதூதருடைய வார்த்தையானது தெளிவுபடுத்துகின்றது. இதே போன்றதொரு அற்புதமானதொரு நிகழ்வை, அதாவது  குழந்தைச் செல்வத்திற்காக ஏங்கிய ஒரு பெண் இயற்கைக்கு அப்பாற்பட்டு இறைவனுடைய அருளால் தாய்மை அடைந்ததைப் பழைய ஏற்பாட்டுப் பின்னணியில் விளக்க முடியும்.

எசாயா இறைவாக்கினர் “பிள்னள பெறாத மலடியே, மகிழ்ந்து பாடு; பேறுகால வேதனன அறியாதவளே, அக்களித்துப் பாடி முழங்கு; […] அஞ்சாதே. நீ அவமானத்திற்குள்ளாகமாட்டாய்; வெட்கி நாணாதே, இனி நீ இழிவாக நடத்தப்படமாட்டாய்; உன் இளமையின் மானக்கேட்டை நீ மறந்துவிடுவாய்; உன் கைம்மையின் இழிநிலையை இனி நினனக்கமாட்டாய். […] நொடிப்பொழுதே நான் உன்னனக் கைவிட்டேன்;  ஆயினும் பேரிரக்கத்தால் உன்னன மீண்டும் ஏற்றுக்கொள்வேன்” (எசா.54,1-7) என்று கூறுகின்றார். இவை வெற்று வாக்குறுதிகள் அல்ல. இதற்கு ஆண்டவரின் அரும்பெரும் செயல்களை எடுத்துரைக்கும் ஏராளமான நிகழ்வுகள் பழைய ஏற்பாட்டில் இருந்தாலும், இறைவனின் கொடையான இந்த  மகப்பேறுக்காகக் காத்திருந்த சாராளுடைய வாழ்வு (தொநூ.18,14) ஒரு சான்றாகும். சாராள்  தன்னுடைய நம்பிக்கையால் “மலடி” என்ற தன்னுடைய நிலையிலிருந்து “தாய்மை” என்னும் கொடையினால் நிறைக்கப்பட்டாள். 

சாராளுடைய வாழ்வில் தன்னுடைய விசுவாசத்தின் பயனாக அவள் அனுபவித்த அந்த அற்புதம்  மரியாள் வானதூதருடைய வார்த்தையில் நம்பிக்கை வைப்பதற்கானதொரு அடையாளமாக இருந்திருக்கக்கூடும் என்பது விவிலிய அறிஞர்களுடைய கருத்தாகும். ஏனெனில், ஆபிரகாமுக்குத் தோன்றிய இறைவன் அவரிடம், “உன் மனனவி சாராவுக்கு ஒரு மகன் பிறந்திருப்பான்” (தொ.நூ.18,10) என்று சொன்னபொழுது அதைக் கேட்டுக்கொண்டிருந்த சாராள் சிரித்துக்கொண்டே, “நானோ கிழவி;  என் தலைவரோ வயது முதிர்ந்தவர். எனக்கா இன்பம்?” (தொ.நூ.18,12) என்று கூறி ஆண்டவருடைய வார்த்தையை நம்பத் தயங்குகின்றாள். அவருடைய தயக்கத்தைக் கண்ட இறைவன் ஆபிரகாமை நோக்கி, "நான் வயது முதிர்ந்தவளாய் இருக்க, எனக்கு உண்மையில் பிள்ளை பிறக்குமா" என்று சொல்லி, சாரா ஏன் இப்படிச் சிரித்தாள்? ஆண்டவரால் ஆகாதது எதுவும் உண்டோ! இளவேனிற்காலத்தில் குறிப்பிட்ட நேரத்தில் நான் உன்னிடம் மீண்டும் வருவேன். அப்பொழுது சாராவுக்கு ஒரு மகன் பிறந்திருப்பான்" (தொ.நூ.18,13-14) என்று கூறி அவருடைய வார்த்தையில் நம்பிக்கை வைக்குமாறு அவர்களை  அழைக்கின்றார். தொடக்க நூலில் இறைவன் - ஆபிரகாம் மற்றும் சாராள் இவர்களுக்கிடையே  நடந்த உரையாடலானது லூக்கா நற்செய்தியில மரியாளுக்கும் வானதூதருக்கும் இடையே  நடைபெறும் உரையாடலோடு ஒத்துப்போவதை நாம் காணலாம்.

3. சாராள், மரியாள், எலிசபெத் போன்ற விவிலியத்தில் வரும் இப்பெண்களுடைய வாழ்வும், அவர்களுடைய இறைநம்பிக்கையும் இன்றைய பெண்களுக்கும், மற்றும் இயேசுவினுடைய பிறப்புக்காகக் காத்திருக்கும் நமக்கும் கொடுக்கின்ற செய்தி என்னவென்று பார்ப்போம்.   

நாம் விவிலியத்தில் வாசிக்கும் சாராள், மரியாள், எலிசபெத் போன்ற பெண்கள் இறைவிசுவாசத்திற்கும், தாய்மைக்கும் ஒரு சிறந்த உதாரணமாக இருக்கின்றார்கள். இப்பெண்களின் வழியில் நாம் அனைவரும் இறைவார்த்தையில் நம்பிக்கை வைத்து அந்த இறைவனின் அரும்பெரும் செயல்களை எதிர்பார்த்துக் காத்திருப்போம். அப்பொழுது நாம் கொண்டாடவிருக்கும் கிறிஸ்து பிறப்பு விழாவானது நம்மை மகிழ்ச்சியாலும் அன்பாலும் அமைதியாலும் நிரப்பும். 

நாம் பெற்ற அந்த இறை அனுபவத்தை, இறை அன்பை, மகிழ்ச்சியை, சந்தோசத்தை மற்றும், இறை  அமைதியை கன்னி மரியாளைப் போன்று தேவையில் இருப்போருக்கும், சமூகத்தில் நலிந்த நிலையில் இருப்போருக்கும் கொண்டு சென்று, அவளைப் போன்று நாமும் "ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப்படுத்துகின்றது. என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவுவகை கொள்கின்றது. ஏனெனில் அவர்தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார். இதுமுதல் எல்லாத் தலைமுனறயினரும் என்னனப் பேறுபெற்றவர் என்பர். ஏனெனில் வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். தூயவர் என்பதே அவரது பெயர்” (லூக்.1,47-49) என்ற ஆண்டவருக்கான  நமது புகழ்பாடலைப் பாடி மகிழ்வோம்.

இயேசு கிறிஸ்துவைத் தன் கருப்பையில் சுமந்துகொண்டிருந்த அந்த அன்னை மரியாள் தேவையில் இருந்த தனது உறவுப் பெண்ணான எலிசபெத்தைச் சந்திக்கச் சென்றபோது, எலிசபெத்  அகமகிழ்ந்து, “என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?” (லூக்.1,43) என்று மகிழ்ச்சியால் பூரித்துப் போகின்றாள். மரியாளைப் போன்று நாமும் புது வாழ்வாம் கிறிஸ்துவை, கிறிஸ்தவ நம்பிக்கையை, இறை ஆசீரை மற்றும் இறைவனை நம்  அண்டை வீட்டார்களுக்கும் தேவையில் இருப்போருக்கும் கொண்டு செல்வோம். கிறிஸ்துவுக்காகக் காத்திருப்பதில் நாம் பெறும் அந்த  நம்பிக்கை வெளிச்சம், பிறருடைய வாழ்விலும் பரவட்டும். கொரோனா என்னும் கொள்ளை நோயின் பிடியில் நம்பிக்கை இழந்து வாழும் ஒவ்வொருவருக்கும், "அஞ்சாதீர்கள், இதோ, எல்லா மக்களுக்கும் மாபெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார்” (மத். 2,10-11) என்ற இறைச் செய்தியைக் கொண்டு செல்வோம்.

அருட்தந்தை ஆ.அமல்ராஜ், மஊச

மரியின் ஊழியர் சபைத் தலைமையகம்,

புனித மர்செல்லோ இல்லம், உரோமை

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 December 2020, 15:34