தேடுதல்

Vatican News
இல்லங்களி்ல் நடைபெறும் வன்முறைகளைக் கண்டனம் செய்து, பிரான்ஸ் நாட்டில் போராட்டம் இல்லங்களி்ல் நடைபெறும் வன்முறைகளைக் கண்டனம் செய்து, பிரான்ஸ் நாட்டில் போராட்டம்  (AFP or licensors)

பெண்கள், சிறார்க்கெதிரான வன்முறை ஒழிக்கப்பட..

உலகில் ஏறத்தாழ நூறு கோடிச் சிறார், பல்வேறு வகையான உரிமை மீறல்களுக்கு உள்ளாகின்றனர், இவர்களில் பெரும்பான்மையினோர் ஆசியச் சிறார் - யூனிசெப் அமைப்பு

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

பாலியல் வன்கொடுமை உட்பட, பெண்கள், மற்றும், சிறார்க்கெதிராக மேற்கொள்ளப்படும் அனைத்துவிதமான வன்முறைகள் ஒழிக்கப்படவேண்டுமென்று மலேசிய கத்தோலிக்க ஆயர் பேரவை விண்ணப்பம் ஒன்றை விடுத்துள்ளது.

பெண்கள் மற்றும், சிறார்க்கெதிரான வன்முறைகள், ஒழிக்கப்படவேண்டுமென்று உலக அளவில் மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் மற்றும், அழைப்புகளுடன், மலேசிய ஆயர்களும் இணைவதாக, அந்நாட்டு ஆயர் பேரவையின் தலைவரான, கோலாலம்பூர் பேராயர் Julian Leow Beng Kim அவர்கள் தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு குறித்து, கடந்த நவம்பர் மாதம் 25ம் தேதி, ஐக்கிய நாடுகள் நிறுவனம் தொடங்கிய 16 நாள் உலகளாவிய நடவடிக்கையில், தாங்களும் ஓர் அங்கமாக இணைவதாக, பேராயர் Kim அவர்கள் கூறியுள்ளார்.

கோவிட்-19 கொள்ளைநோய் காலத்தில், வன்முறையால் பாதிக்கப்பட்டு வாழ்கின்ற பெண்கள் மற்றும், சிறார்க்குத் தேவையான அடிப்படை உதவிகளை வழங்கவும், அவர்கள் மீது அக்கறை காட்டவும், மலேசிய ஆயர்கள் உறுதி செய்துள்ளனர்.

இதற்கிடை.யே, கடந்த ஆண்டில், 24 கோடியே 30 இலட்சம் பெண்களும், சிறுமிகளும், வன்முறைகளை எதிர்கொண்டனர் என்று கூறப்படுகின்றது.

உலகில் ஏறத்தாழ நூறு கோடிச் சிறார், பல்வேறு வகையான உரிமை மீறல்களுக்கு உள்ளாகின்றனர், இவர்களில் பெரும்பான்மையினோர் ஆசியச் சிறார் என்று, யூனிசெப் அமைப்பு கூறியுள்ளது.

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு உலக நாளான, கடந்த நவம்பர் மாதம் 25ம் தேதி, பெண்கள் மற்றும், சிறார்க்கெதிரான வன்முறை ஒழிப்பு 16 நாள் உலகளாவிய நடவடிக்கை, ஐ.நா.வால் தொடங்கப்பட்டது. மனித உரிமைகள் உலக நாளான டிசம்பர் 10ம் தேதி இந்த நடவடிக்கை நிறைவடையும். (UCAN)

04 December 2020, 14:51