தேடுதல்

டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் 

விவசாயிகள் நலனில் அக்கறை காட்டப்படுமாறு ஆயர்கள்

இந்தியாவின் 130 கோடி மக்களில், ஏறத்தாழ எழுபது விழுக்காட்டினர், விவசாயத்தைச் சார்ந்து வாழ்கின்றவேளை, நடுவண் அரசு, விவசாயிகள் மீது அக்கறை காட்டி, நாட்டை, விவசாயிகளின் நட்பு நாடாக அமைக்கவேண்டும் - கேரள ஆயர்கள்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இந்தியாவில், நடுவண் அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து, கடந்த ஒரு வாரமாக இடம்பெற்றுவரும் போராட்டத்தை முடிவுக்குக்கொணரும் வகையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்துள்ளவேளை, விவசாயிகளின் நெருக்கடிநிலைகள் அகற்றப்படுவதற்கு, நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, கேரள கத்தோலிக்க ஆயர்கள், நடுவண் அரசை வலியுறுத்தியுள்ளனர்.

இந்தியாவில், விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் குறித்து, கேரளாவின் நாற்பதுக்கும் அதிகமான ஆயர்கள் சார்பாக, யூக்கா செய்தியிடம் கருத்து தெரிவித்த, கர்தினால் ஜார்ஜ் ஆலெஞ்சேரி அவர்கள், மத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்களால், நாட்டின் இலட்சக்கணக்கான விவசாயிகள், தங்களின் வருங்காலம் குறித்து மிகவும் கவலைகொண்டுள்ளனர் என்று கூறினார்.

இந்தியாவின் 130 கோடி மக்களில், ஏறத்தாழ எழுபது விழுக்காட்டினர், விவசாயத்தை நம்பி வாழ்ந்து வருகின்றவேளை, நாட்டின் நலன்கருதி, விவசாயிகளுக்கு ஆதரவான கொள்கைகளைச் செயல்படுத்துமாறும், இந்தியாவை, விவசாயிகளின் நலன் நாடும் நட்பு நாடாக அமைக்குமாறும், கேரள ஆயர்கள், அரசுக்கு, அழைப்பு விடுத்துள்ளனர்.

வேளாண்துறையில் பெரிய வர்த்தக அமைப்புகள் நுழைவது, 86 விழுக்காட்டுக்கு அதிகமான, சிறிய மற்றும், நடுத்தர விவசாயிகளை நெருக்கடியில் ஆழ்த்தும் என்று,  சில வல்லுனர்களின் கூற்றை குறிப்பிட்டுள்ள ஆயர்கள், நடுவண் அரசு, விவசாயிகள் மீது அக்கறை காட்டுமாறு வலியுறுத்தியுள்ளனர். (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 December 2020, 14:33