தேடுதல்

Vatican News
ஈராக் கோவில் வழிபாடு ஒன்றில் ஈராக் கோவில் வழிபாடு ஒன்றில்  (AFP or licensors)

ஈராக் கிறிஸ்தவ சமுதாயத்தை அழிவிலிருந்து காப்பாற்றும் பயணம்

ஈராக் கிறிஸ்தவ சமுதாயத்திற்கு, வலிமையையும் ஊக்கத்தையும் வழங்குவதோடு, அவர்கள், சொந்த நாட்டிற்குள்ளேயே தங்கி, அதனை கட்டியெழுப்ப, திருத்தந்தையின் திருத்தூதுப்பயணம் உதவும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஈராக் நாட்டின் மிகத் தொன்மையான கிறிஸ்தவ சமுதாயத்தை, அழிந்துவரும் ஆபத்திலிருந்து காப்பதற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாட்டில் மேற்கொள்ளும் திருத்தூதுப்பயணம் பெருமளவில் உதவுவதாக இருக்கும் என அறிவித்துள்ளார், அந்நாட்டின் கல்தேய கத்தோலிக்க வழிபாட்டுமுறை பேராயர் Bashar Warda.

எர்பில் உயர்மறைமாவட்ட பேராயர் Warda  அவர்கள், ACN என்ற கத்தோலிக்க பிறரன்பு நிறுவனத்திற்கு அளித்த நேர்முகத்தில், ஈராக் நாட்டு மக்கள் கடந்த 20 ஆண்டுகளாக ஒரு திருத்தந்தையின் திருப்பயணத்திற்காக காத்திருப்பதாகத் தெரிவித்தார்.

ஈராக் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை ஒரே தலைமுறைக் காலத்தில் 80 விழுக்காடு அளவு குறைந்து, ஒரு இலட்சத்து ஐம்பது ஆயிரமாகக் மாறியுள்ளதெனக் கூறிய பேராயர் Warda அவர்கள், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தொடர்ந்து குரல் எழுப்பிவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வருகை, இந்நாட்டு கிறிஸ்தவ சமுதாயத்தை அழிவிலிருந்து காப்பாற்றுவதாக இருக்கும் என்றார்.

ஏழ்மையாலும், சித்ரவதைகளாலும் துன்புறும், ஈராக் கிறிஸ்தவ சமுதாயத்திற்கு, வலிமையையும் ஊக்கத்தையும் வழங்குவதோடு, அவர்கள், சொந்த நாட்டிற்குள்ளேயே தங்கி, அதனை கட்டியெழுப்ப, திருத்தந்தையின் திருத்தூதுப்பயணம் உதவும் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டார், எர்பில் பேராயர்.

மிகத்தொன்மையான கோவில்களையும் துறவு இல்லங்களையும் கொண்டிருந்த Mosul நகரம், தற்போது பல அழிவுகளை சந்தித்துள்ள நிலையில், அப்பகுதிகளை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சென்று பார்வையிட உள்ளது, ஈராக் மக்களுக்கு புதிய நம்பிக்கைகளை விதைப்பதாக இருக்கும் என தெரிவித்தார், பேராயர் Warda.

கிறிஸ்தவர்களுக்கு மட்டுமல்ல, அனைத்து மதத்தினருக்கும், குறிப்பாக, சித்ரவதைகளை அனுபவிக்கும் சிறுபான்மை சமுதாயங்களுக்கு பெரும் ஆறுதலைத் தருவதாகவும், முக்கியத்துவம் நிறைந்ததாகவும் திருத்தந்தையின் திருத்தூதுப்பயணம் இருக்கும் என உரைத்த பேராயர் Warda அவர்கள், நம்பிக்கையின் செய்தியை திருத்தந்தை தாங்கிவருவார் என மேலும் கூறினார்.

10 December 2020, 14:56