தேடுதல்

Vatican News
ஈராக் திருஅவை தலைவர்கள் ஈராக் திருஅவை தலைவர்கள்   (AFP or licensors)

பாலைவனப் பாதையைக் கடந்துசெல்ல உதவும் நம்பிக்கை

ஈராக் ஆயர்கள் : துன்புறும் மக்களின் நம்பிக்கைக்கு உரமூட்டுவதாக, திருத்தந்தையின் திருத்தூதுப் பயண அறிவிப்பு உள்ளது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

பல்வேறு துயர்களை அனுபவித்துவரும் ஈராக் மக்கள், இத்துயர்களிலிருந்து தங்களை மீட்க இயேசு வருவார் என கொண்டிருக்கும் நம்பிக்கைக்கு உரமூட்டுவதாக, திருத்தந்தை, அந்நாட்டிற்கு மேற்கொள்ளும் திருத்தூதுப் பயண அறிவிப்பு உள்ளது என அறிவித்துள்ளனர், அந்நாட்டு ஆயர்கள்.

பொருளாதார, மற்றும், ஆன்மீக அளவில், பாலைவனத்தைப் போன்ற நிலையில் வாழும் தங்கள் பலவீனங்கள் வெளிப்பட்டு நிற்கும் வேளையில், ஈராக் மக்கள் அனைவரும், வருங்காலத்தைக் குறித்த கவலைகளையும், அச்சங்களையும் களைந்து, இறைவனின் வருகைக்காக இக்கிறிஸ்மஸ் காலத்தில் தயாரிக்கவேண்டும் என, ஈராக் ஆயர்கள் இணைந்து வெளியிட்ட அறிக்கையில்  விண்ணப்பித்துள்ளனர்.

கல்தேய வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை, கர்தினால் லூயிஸ் ரஃபேல் சாக்கோ அவர்களின் தலைமையில், ஈராக்கிற்கான திருப்பீடத் தூதர், பேராயர் Mitja Leskovar அவர்கள் முன்னிலையில் ஒன்றுகூடிய ஆயர்கள், துன்பதுயர்கள் நிறைந்த பாலைவனப் பாதையைக் கடந்துசெல்ல உதவும் நம்பிக்கையைக் கொணர்பவராக, இயேசு, கிறிஸ்மஸின்போது வருவார் என, தங்கள் அறிக்கையில் நம்பிக்கையை வெளியிட்டுள்ளனர்.

2021ம் ஆண்டு மார்ச் 5 முதல் 8ம் தேதி வரை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஈராக் நாட்டில் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளவிருப்பது தொடர்புடைய தயாரிப்புக்கள் குறித்தும் விவாதித்த ஆயர்கள், இதற்கு தயாரிப்பாக, வரும் சனவரி, மற்றும், பெப்ரவரி மாதங்களில், இரு சிறப்புக் கூட்டங்களை நடத்தவுள்ளதாகவும் தெரிவித்தனர். (ZENIT)

15 December 2020, 14:58