தேடுதல்

Vatican News
புது டெல்லியில் உரிமைகளுக்காக போராடும் தலித் மற்றும் பூர்வீக குடிமக்கள் (5 மார்ச் 2019) புது டெல்லியில் உரிமைகளுக்காக போராடும் தலித் மற்றும் பூர்வீக குடிமக்கள் (5 மார்ச் 2019)  (ANSA)

தலித் கிறிஸ்தவர்களுக்கென்று தனியொரு செய்தி பிரிவு

ஒடுக்கப்பட்ட மக்களின் துயர்களையும், சவால்களையும், தேவைகளையும், வெற்றிகளையும், மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டி, பகிரும் இடமாக, விளங்கும் இந்திய ஆயர்களின் செய்தி பிரிவு

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

இந்தியாவில் தலித் மக்கள் எதிர்நோக்கும் சவால்களையும், அவர்களின் வெற்றிக் கதைகளையும் தேசிய அளவிலும், உலக அளவிலும் பிரபலமாக்கும் நோக்கத்துடன், இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவை, இணையதள கலந்துரையாடல் கருத்தரங்கில், செய்திப் பிரிவு ஒன்றை துவக்கியுள்ளது.

தலித், மற்றும், சாதியின் அடிப்படையில் ஒடுக்கப்பட்ட மக்களுக்குரிய இந்திய ஆயர் பேரவை பணிக்குழுவின் தலைவராகப் பணியாற்றும், Berhampur ஆயர் Sarat Chandra Nayak அவர்கள், இச்செய்திப் பிரிவை திறந்துவைத்து உரையாற்றியபோது, ஒடுக்கப்பட்ட மக்களின் துயர்களையம் சவால்களையும், தேவைகளையும், வெற்றிகளையும் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டி பகிரும் இடமாக இது இருக்கும் என்று கூறினார்.

மனிதர்கள் அனைவரும் இறைவனின் சாயலில் படைக்கப்பட்டவர்கள், அனைவருக்கும் சம உரிமைகள்  உள்ளன என்பதை வலியுறுத்தி ஊக்குவிப்பதாக, இந்த இணையதள செய்திப் பிரிவின் நோக்கம் இருக்கும் என உரைத்தார், ஆயர் நாயக்.

தலித் கிறிஸ்தவர்களின் துன்பங்களை வெளிஉலகிற்கு எடுத்துரைக்கும் நோக்கத்தில், அவர்களுக்கென்று தனியாக கிறிஸ்தவ செய்தி பிரிவுகள் எதுவும் இல்லாதச் சூழலில், இந்திய ஆயர்களால் அத்தகைய ஒரு பிரிவு துவக்கப்பட வேண்டியது காலத்தின் அவசியம் என்றார், ஆயர் பேரவை, தலித் பிரிவின், முன்னாள் செயலர், அருள்பணி சகாய ராஜ்.

இந்தியாவின் 120 கோடி மக்கள் தொகையில் 20 கோடியே 10 இலட்சம் பேர் ஒடுக்கப்பட்ட சமுதாயங்களைச் சேர்ந்தவர்கள் என்பதும், இந்தியாவின் 2 கோடியே 50 இலட்சம் கிறிஸ்தவர்களுள், ஏறக்குறைய 60 விழுக்காட்டினர் தலித், மற்றும், பழங்குடி இனங்களைச் சேர்ந்தவர்கள் என்பதும், குறிப்பிடத்தக்கன.

10 December 2020, 14:48