தேடுதல்

வத்திக்கான் பெருங்கோவிலின் கீழ், திருத்தந்தையர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடம் வத்திக்கான் பெருங்கோவிலின் கீழ், திருத்தந்தையர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடம் 

திருத்தந்தையர் வரலாறு - மீண்டும் அதிகார மோதல்கள்

மக்களும், ஆயர்களும், அருள்பணியாளர்களும் இணைந்து, கிரேக்கத் திருஅவை, உரோமைத் திருஅவையோடு இணைக்கப்பட வேண்டும் என பேரரசர் ஜஸ்டினை வலியுறுத்தினர்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

திருஅவையின் 52வது திருத்தந்தையாக 514ம் ஆண்டு பதவியேற்றார் திருத்தந்தை புனித ஹொர்மிஸ்தாஸ்(Hormisdas). இவர் இத்தாலியின் Frosinoneயின் பணக்கார, உயர்குடும்பத்தில் பிறந்தவர். அருள்பணியாளராவதற்கு முன்னர் இவருக்கு திருமணம் முடிந்திருந்தது. இவரின் மகன்தான் 536ம் ஆண்டு திருத்தந்தையாக பதவியேற்று திருஅவையை ஓராண்டு வழிநடத்திய புனித சில்வேரியுஸ் (Silverius).

     திருத்தந்தை புனித ஹொர்மிஸ்தாஸ், அவருக்கு முன்பிருந்த திருத்தந்தை சிமாக்கஸ் அவர்களிடம் திருத்தொண்டராக இருந்து, குறிப்பெழுதுவதில் வல்லவராகத் திகழ்ந்தார். 514ம் ஆண்டு ஜூலையில் திருத்தந்தை சிமாக்கஸின் அடக்கச் சடங்கு முடிந்த மறுநாளே இவர் திருத்தந்தையாகத் தேர்தெடுக்கப்பட்டு, உடனே பதவியேற்பும் நடந்தது. பேரரசர் Genoவின் காலத்தில், திருத்தந்தையருடன் ஏற்பட்ட முரண்பாடு, பேரரசர் அனஸ்தாசியுஸ் காலத்திலும், திருத்தந்தை  ஹொர்மிஸ்தாஸுடனும் தொடர்ந்தது. Byzantine பேரரசரின் அதிகாரத்தின் வழியாக, Constantinopleன் Macedonius, எருசலேமின் Elias, Antiochவின் Flavianus என, மூன்று முதுபெரும்தந்தையர்களும் அவர்களின் பதவியிலிருந்து நீக்கப்பட்டாலும், உரோமைய செனட் அவையும், மன்னர் Theodoricம் திருத்தந்தைக்கு உண்மையுள்ளவர்களாக இருந்தனர். Byzantine பேரரசர் அனஸ்தாசியுஸின் சூழ்ச்சியை உணர்ந்து, திருத்தந்தைக்கே தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர். அனைத்து ஆயர்களும் ஏற்று கையெழுத்திட்டு தனக்கு அனுப்பும்படி, திருஅவை நம்பிக்கை அறிக்கை ஒன்றையும் திருத்தந்தை ஹொர்மிஸ்தாஸ் ஆயர்களுக்கு அனுப்பிவைத்தார். இதன் வழியாக, திருஅவையில் ஆயர்களிடையே துவங்கியிருந்த சில முரண்பாடுகள் ஓரளவு தீர்வுக்கு வந்தன.

     திருஅவைக்குள் பிளவை நீக்கி, அனைவரையும் உரோமை திருஅவைக்குள் கொண்டுவர உரோமிலிருந்து திருத்தந்தையால் Constantinopleக்கு அனுப்பப்பட்ட குழு ஒன்றை, இரகசியமாக சிறைப்பிடித்த பேரரசர் அனஸ்தாசியுஸ், அப்படியே நகரின் பின்வாயில் வழியாக கடற்கரைக்கு எடுத்துச் சென்று, ஒரு கப்பலில் ஏற்றி இத்தாலிக்கு திருப்பி அனுப்பிவிட்டார். அந்த அளவுக்கு அவர் உரோமைத் தலைமைப்பீடத்தின் மீது கோபமாக இருந்தார். தொடர்ந்து திருத்தந்தைக்கு விசுவாசமாக இருந்த திருஅவை அதிகாரிகளை கொடுமைப்படுத்தத் துவங்கினார். ஆனால் 518ம் ஆண்டு ஜூலை 9ந்தேதி வீசிய பெரும் புயலில் சிக்கி திடீர் மரணம் அடைந்தார் பேரரசர் அனஸ்தாசியுஸ். அதற்குப்பின் வந்த பேரரசர் ஜஸ்டின், ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ வழிபாட்டுமுறையைச் சேர்ந்தவர். இவ்வேளையில், திருத்தந்தைக்கு எதிராக இருந்த Constantinople முதுபெரும்தந்தையும் இறந்திருந்தார். மக்களும், ஆயர்களும், அருள்பணியாளர்களும் இணைந்து, கிரேக்க திருஅவை, உரோமைத் திருஅவையோடு  இணைக்கப்படவேண்டும் என பேரரசர் ஜஸ்டினை வலியுறுத்தினர். அவரும் இசைந்து, திருத்தந்தைக்கு தூது விடுத்தார். திருஅவைக்குள் அமைதியையும் ஒன்றிப்பையும் எதிர்பார்த்து ஜெபித்துக் கொண்டிருந்த பாப்பிறை ஹொர்மிஸ்தாஸும் இரு கரம் விரித்து இதனை வரவேற்க, 519ம் ஆண்டு மார்ச் 28ம் தேதி, பெரிய வியாழனன்று, திருஅவையின் நம்பிக்கை அறிக்கையை Constantinople முதுபெரும்தந்தை யோவான் கையெழுத்திட்டு, அனைத்து மக்கள் முன்னிலையில், கிரேக்க திருஅவையை உரோமைத் திருஅவையோடு இணைத்துக்கொண்டார். திருத்தந்தை ஹொர்மிஸ்தாஸின் இறுதிக் காலத்தில் ஆப்ரிக்காவில் கிறிஸ்தவர்களைக் கொடுமைப்படுத்தி வந்த மன்னர் Thrasamundம் இறந்துவிட, அங்கும் அமைதி நிலவியது. 523ம் ஆண்டு இறந்த திருத்தந்தை ஹொர்மிஸ்தாஸ், புனித பேதுரு பெருங்கோவிலில் அடக்கம் செய்யப்பட்டார்.

திருத்தந்தை ஹொர்மிஸ்தாஸ்  இறந்தபின் அடுத்த திருத்தந்தையாக முதலாம் யோவான் தேர்ந்தெடுக்கப்பட, 7 நாட்களாகின. இவரின் பணிக் காலம்,  இரண்டு ஆண்டுகள் 9 மாதங்கள் ஏழு நாட்களே நீடித்தது. திருத்தந்தை முதலாம் யோவானின் காலத்தில், திருஅவைக்கு அதிகம் அதிகமாக உதவிசெய்ய விரும்பிய பேரரசர் ஜஸ்டின், கடவுள் மூவரல்லர் ஒரு முழு முதற் பரம்பொருளே என்ற ஏரியஸின் கொள்கையைக் கடைப்பிடிப்பவர்களுக்கு எதிராக ஒரு கடும் ஆணையைப் பிறப்பித்தார். அவர்கள் ஆக்ரமித்திருந்த கத்தோலிக்க கோவில்களை திருப்பி வழங்க வேண்டும் என கட்டளையிட்டார். இதனால், இக்கொள்கையினை ஆதரித்த இத்தாலிய மன்னர் Theodoric கோபம் கொண்டார். இக்கோபம், திருத்தந்தை முதலாம் யோவான் மீதும் பாய்ந்தது. இவ்வேளையில் திருத்தந்தை, Constantinopleக்கு பயணம் மேற்கொள்ள, அங்கு மன்னர் ஜஸ்டின், திருத்தந்தையின் முன்னே, உடல் மண்ணில்பட விழுந்து அவரை வரவேற்க, திருத்தந்தையும் அவரை பேரரசராக முடிசூட்டி வைத்தார். இவையெல்லாவற்றையும் மகிழ்ச்சியுடன் முடித்துவிட்டு இத்தாலிக்குத் திரும்பிய பாப்பிறை முதலாம் யோவான், மன்னர் Theodoricஆல் கைதுசெய்யப்பட்டு, ரவென்னா சிறையில் அடைக்கப்பட்டார். ஏற்கனவே நீண்ட பயணத்தில களைப்புடன் வந்திருந்த திருத்தந்தை, எதிர்பாராத விதமாக சிறையிலும் அடைக்கப்பட்டதால், மனந்தளர்ந்து சிறிது காலத்திலேயே, சிறையில், அதாவது, 526ம் ஆண்டு மே மாதம் இறந்தார். இவரது உடல் உரோம் நகருக்கு கொணரப்பட்டு, புனித பேதுரு பெருங்கோவிலில் அடக்கம் செய்யப்பட்டது.

திருத்தந்தை முதலாம் யோவான் இறந்தபின், மன்னர் Theodoric அவர்களால் சுட்டிக்காட்டப்பட்டு, 4ம் பெலிக்ஸ் என்பவர் பாப்பிறையாக தேர்வு செய்யப்பட்டார். மன்னரால் சுட்டிக்காட்டப்பட்டார் எனினும், இவர் திருஅவைக்கே விசுவாசமாக நடந்துகொண்டார். இவர் பதவியேற்ற ஒன்றரை மாதங்களிலேயே மன்னர் Theodoric மரணமடைய, மன்னரின் ஆண்வாரிசான, அவரின் பேரன் சிறுவனாக இருந்ததால், மகள் Amalasuntha, சிறுவனின் சார்பில் நிர்வாகத்தை நடத்தினார். இவர், நிறைய கட்டடங்களை திருத்தந்தைக்கு பரிசளித்தார். திருஅவைக்கு எதிரான வழக்குகள் திருஅவை மன்றத்தாலேயே விசாரிக்கப்பட வேண்டும் எனவும் கட்டளையிட்டார். இந்த திருத்தந்தை நான்காம் பெலிக்ஸ்,  நோய்வாய்ப்பட்டு இறக்கும் தறுவாயில் இருந்தபோது, அனைத்து அருள்பணியாளர்களையும் தன் அருகே அழைத்து, தனக்குப்பின் தன் தலைமை திருத்தொண்டர் இரண்டாம் பொனிபாசையே திருத்தந்தையாக ஏற்க வேண்டும் என கட்டளையிட்டார். 530ம் ஆண்டு திருத்தந்தை நான்காம் பெலிக்ஸ் காலமானார். ஆனால், இவரின் மரணத்திற்குப்பின் பதவியேற்ற திருத்தந்தை இரண்டாம் பொனிபாசை ஏற்றுக்கொள்ள திருஅவை  தந்தையர்கள் தயாராக இல்லை.

530ம் ஆண்டு செப்டம்பர் 22ந்தேதி Julius பெருங்கோவிலில் திருத்தந்தையாக இரண்டாம் பொனிபாஸ் பதவியேற்க, அதேநாளில் உரோம் நகரின் 70 அருள்பணியாளர்களுள் 60 பேரால் தேர்ந்தெடுக்கப்பட Dioscorus என்பவர் இலாத்தரன் பெருங்கோவிலில் திருத்தந்தையாக பதவியேற்றார். இவ்வாறு, ஏழாவது முறையாக ஒரு திருத்தந்தைக்கு எதிரான இன்னொரு திருத்தந்தையின் ஆட்சி பிறந்தது. இதற்கிடையே, போட்டி திருத்தந்தை Dioscorusக்கு ஆதரவளித்த அருள்பணியாளர்கள், ஒவ்வொருவராக திருத்தந்தை இரண்டாம் பொனிபாசுக்கு தங்கள் ஆதரவை அளித்து அவரை அங்கீகரித்தனர். ஆனால், இத்திருத்தந்தையும், தனக்குப்பின் ஒருவரை திருத்தந்தையாக அறிவிக்கும் அதிகாரம் தனக்குள்ளது என வாதாடி, Vigilius என்பவரை தனக்குப் பின்னான திருத்தந்தையாக அறிவித்தார். அதாவது, தேர்வு வழியாக அல்ல, நியமனத்தின் வழியாக திருத்தந்தையர்கள் பதவி வகிக்கும் முறையைக் கொணர்ந்தார். இதற்கு பரவலான எதிர்ப்பு இருந்ததால், இதனைக் கைவிட்டு, இப்புதிய சட்டத்தை, அருள்பணியாளர்கள் முன்னிலையில் தானே எரித்தார் திருத்தந்தை இரண்டாம் பொனிபாஸ்.

திருத்தந்தை பொனிபாஸ் அவர்கள், பிறரன்பு நடவடிக்கைகளில் அதிகம் ஆர்வம் கொண்டிருந்தார் என வரலாறு கூறுகிறது. உரோம் நகரில் பஞ்சம் நிகழ்ந்தபோது, ஏழைகளுக்கு இவர் ஆற்றிய பணிகள் குறிப்பிடும்படியானவை. இவரது உடல் 532ம் ஆண்டு அக்டோபர் 17ந்தேதி புனித பேதுரு பெருங்கோவிலில் அடக்கம் செய்யப்பட்டது.

வரும் வாரம்,  வரலாற்றின் 533ம் ஆண்டிலிருந்து, அதாவது திருத்தந்தை இரண்டாம் யோவானுடன் பயணம் தொடரும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 December 2020, 13:21