தேடுதல்

Vatican News
ஜெர்மனியில்  கிறிஸ்மஸ் ஜெர்மனியில் கிறிஸ்மஸ்  (AFP or licensors)

துன்புறுத்தப்படும் கிறிஸ்தவர்களுக்காக இறைவேண்டல் நாள்

துன்புறுத்தப்படும் கிறிஸ்தவர்களுக்காக, ஒவ்வோர் ஆண்டும் ஒரு குறிப்பிட்ட நாட்டிற்காகச் செபித்து வந்த ஜெர்மன் ஆயர்கள், அத்தகைய கிறிஸ்தவர்கள் குறித்த விழிப்புணர்வை, அந்நாட்டு அரசியல் உலகம் மற்றும், நம்பிக்கையாளர்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகின்றனர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

டிசம்பர் 26, இச்சனிக்கிழமையன்று, ஜெர்மன் கத்தோலிக்கத் திருஅவை, உலகளவில் துன்புறுத்தப்படும் கிறிஸ்தவர்களுக்காகச் சிறப்பான இறைவேண்டல்களை எழுப்பியது.

2019ம் ஆண்டில் ஜெர்மன் கத்தோலிக்க ஆயர்கள் நிறைவேற்றிய தீர்மானத்தில், 2020ம் ஆண்டிலிருந்து, ஒவ்வோர் ஆண்டும், ஜெர்மன் தலத்திருஅவையில், டிசம்பர் 26ம் நாள், உலகளவில் துன்புறுத்தப்படும் கிறிஸ்தவர்களுக்காக இறைவேண்டல் நாள் கடைப்பிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

கத்தோலிக்கத் திருஅவையில், முதல் கிறிஸ்தவ மறைசாட்சியான புனித ஸ்தேவான் திருவிழா, டிசம்பர் 26ம் தேதியன்று சிறப்பிக்கப்படுவதால், அந்த நாளன்று, உலகில் துன்புறும் கிறிஸ்தவர்களை சிறப்பாக நினைத்து, அவர்களுக்கு தங்களின் ஆதரவையும், ஒருமைப்பாட்டையும் தெரிவிக்கும் நோக்கத்தில், இந்த நாள் உருவாக்கப்பட்டது என்று ஜெர்மன் ஆயர்கள், தங்கள் அறிக்கையில் கூறியுள்ளனர்.

ஜெர்மனியில் 1994ம் ஆண்டுவரை, கம்யூனிச நாடுகளில் வாழ்ந்த கிறிஸ்தவர்களுக்காக, இறைவேண்டல் நாள் ஒன்று கடைப்பிடிக்கப்பட்டது. அதற்குப்பின், உலக அளவில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்களும், அடக்குமுறைகளும் அதிகரித்துவருவதைக் கண்ணுற்ற ஜெர்மன் ஆயர்கள், 2003ம் ஆண்டில் புதிய நடவடிக்கை ஒன்றையும் தொடங்கினர்.

துன்புறுத்தப்படும் கிறிஸ்தவர்களுக்காக, ஒவ்வோர் ஆண்டும் ஒரு குறிப்பிட்ட நாட்டிற்காகச் செபித்து வந்த ஜெர்மன் ஆயர்கள், அந்த கிறிஸ்தவர்கள் குறித்த விழிப்புணர்வை, அந்நாட்டு அரசியல் உலகம் மற்றும், நம்பிக்கையாளர்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகின்றனர்.

2020ம் ஆண்டில் எகிப்து நாட்டையும், அந்நாட்டில் புரட்சிக்குப்பின்னுள்ள சூழலையும் நினைவுகூர்ந்து, அந்நாட்டிற்காக, இச்சனிக்கிழமையன்று சிறப்பாகச் செபித்தனர், ஜெர்மன் ஆயர்கள்.

26 December 2020, 15:16