தேடுதல்

இயேசு, மரியா, யோசேப்பு - திருக்குடும்பம் இயேசு, மரியா, யோசேப்பு - திருக்குடும்பம் 

திருக்குடும்பத் திருநாள் - ஞாயிறு சிந்தனை

கிறிஸ்து பிறப்புப் பெருவிழா, திருக்குடும்பத் திருவிழா, மாசற்றக் குழந்தைகள் திருவிழா, ஆகிய அனைத்தும், துன்பத்திலும், இரத்தத்திலும் தோய்ந்திருந்தாலும், நம்பிக்கை தரும் விழாக்களாக, நம் மத்தியில் வலம் வருகின்றன.

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

திருக்குடும்பத் திருநாள் - ஞாயிறு சிந்தனை

கிறிஸ்துபிறப்புப் பெருவிழாவைத் தொடர்ந்து, குடும்பத்தையும், குழந்தைகளையும் கொண்டாடும் இரு திருநாள்கள் இடம்பெறுகின்றன. இயேசுவின் பிறந்தநாளைத் தொடர்ந்துவரும் ஞாயிறன்று, திருக்குடும்பத் திருநாளும், டிசம்பர் 28, திங்களன்று, மாசற்றக் குழந்தைகள் திருநாளும் கொண்டாடப்படுகின்றன. குடும்பங்களையும், குடும்பங்களின் அடித்தளமாக, எதிர்காலமாக விளங்கும் குழந்தைகளையும் மையப்படுத்தி சிந்திக்க, ஒரு வாய்ப்பு, இன்று நமக்கு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக, கிறிஸ்மஸ் காலத்தில், ஒரு துயர நினைவும் நம்மைத் தொடர்ந்தவண்ணம் உள்ளது. அதுதான், எதிர்பாராமல் நம்மைத் தாக்கிய சுனாமிப் பேரழிவின் நினைவு. சரியாக பதினாறு ஆண்டுகளுக்கு முன்னர், 2004ம் ஆண்டு டிசம்பர் 25, கிறிஸ்துபிறப்புப் பெருவிழா, சனிக்கிழமையன்று வந்தது. அதற்கடுத்த நாள், டிசம்பர் 26, ஞாயிறன்று, திருக்குடும்பத் திருவிழா வந்தது.

2004ம் ஆண்டு, திருக்குடும்பத் திருவிழாவன்று, பல ஆசிய நாடுகளின் கடற்கரைப் பகுதிகளைத் தாக்கிய சுனாமி, 2,30,000க்கும் மேற்பட்ட உயிர்களைப் பறித்துச்சென்றது. பல இலட்சம் குடும்பங்கள் சிதைக்கப்பட்டன. ஆசியாவின் 14 நாடுகளுக்கு, அழிவையும், கண்ணீரையும் கொண்டு வந்த பேரழிவு அது.

நிறைவுறவிருக்கும் இந்த 2020ம் ஆண்டில், கோவிட்-19 என்ற மற்றொரு சுனாமி, இதுவரை, உலகெங்கும், ஏறத்தாழ 8 கோடி மக்களின் நலனைக் கெடுத்துள்ளது. 17 இலட்சத்திற்கும் அதிகமான உயிர்களைப் பறித்துச் சென்றுள்ளது. இந்த கொள்ளைநோய் என்ற சுனாமியின் பசி இன்னும் அடங்க மறுக்கிறது.  

திருக்குடும்பத் திருநாள், சுனாமிப் பேரழிவு என்ற இரண்டு கருத்துக்களையும் இணைத்துச் சிந்திக்கும்போது, கத்தோலிக்கத் திருஅவையில் திருக்குடும்பத் திருநாள் உருவானதற்கு முக்கிய காரணமாக இருந்தது, அழிவுகளே என்ற வரலாற்று உண்மை, நம் நினைவில் நிழலாடுகிறது.

பல நூற்றாண்டுகளாக, திருக்குடும்பத் திருநாள், தனிப்பட்ட ஒரு பக்திமுயற்சியாக துறவற சபைகளால் வளர்க்கப்பட்டு வந்தது. இத்திருநாள், 1921ம் ஆண்டு, திருத்தந்தை 11ம் பயஸ் அவர்களால், திருவழிபாட்டின் ஓர் அங்கமாக இணைக்கப்பட்டது. இதற்கு முக்கிய காரணம், அப்போது நடந்து முடிந்திருந்த முதல் உலகப்போர். 1918ம் ஆண்டில் முடிவுற்ற உலகப்போரினால், ஆயிரமாயிரம் குடும்பங்கள் சிதைக்கப்பட்டன. இக்குடும்பங்களுக்கு ஆறுதலும், நம்பிக்கையும் தரும்வகையில், திருக்குடும்பத் திருநாளை, வழிபாட்டின் ஒரு பகுதியாக அறிமுகப்படுத்தி, குடும்பங்களில் நம்பிக்கையைக் கட்டியெழுப்ப, திருஅவை முயன்றது.

1962ம் ஆண்டு துவங்கிய 2ம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின்போது, திருக்குடும்பத்தைப் பற்றிய எண்ணங்களை, திருஅவை மீண்டும் புதுப்பித்தது. இதற்கு முக்கிய காரணம், அன்றைய உலகின் நிலை. குறுகிய கால இடைவெளியில் நிகழ்ந்த முதல், மற்றும் இரண்டாம் உலகப்போர்களால், குடும்பங்கள் அதிகமாகச் சிதைந்திருந்தன. தொழில்மயமான உலகம், அறிவியல் முன்னேற்றங்கள் என்று, பல வழிகளில், உலகம் முன்னேறியதைப்போலத் தெரிந்தது. ஆனால், அதேவேளை, குடும்பம் என்ற அடித்தளம், நிலைகுலைந்தது. ஹிப்பி கலாச்சாரம், போதைப் பொருட்களின் பரவலான பயன்பாடு என்று, மக்கள், வீட்டுக்கு வெளியே நிம்மதியைத் தேடி அலைந்தனர். அந்த அமைதியை, அன்பை, வீட்டுக்குள், குடும்பத்திற்குள், தேடச்சொன்னது, திருஅவை. குடும்ப உணர்வுகளை வளர்க்கும் கிறிஸ்மஸ் பெருவிழாவுக்கு அடுத்துவரும் ஞாயிறை, திருக்குடும்பத் திருநாளாக, திருஅவை அறிவித்தது.

அகந்தை, சுயநலன், ஆகியவற்றால் எழுந்த பகைமை உணர்வுகள், போர்களாக வெடித்தபோது, மனிதர்கள் எழுப்பியிருந்த பல கட்டடங்கள் தரைமட்டமாயின. அவற்றிற்கும் மேலாக, அவர்கள் உருவாக்கிய குடும்பங்கள் சிதைந்துபோயின. இந்த அழிவுகளை, கைகட்டி நின்று, வேடிக்கை பார்ப்பதற்குப் பதிலாக, எல்லாம் அழிந்தது என்று மனம்தளர்ந்து போவதற்குப் பதிலாக, கத்தோலிக்கத் திருஅவை, மனித சமுதாயத்தை மீண்டும் கட்டியெழுப்பும் முயற்சிகளுக்கு வழிகாட்டியது. அந்த வழிகாட்டுதலின் ஒரு பகுதிதான், நாம் இன்று கொண்டாடும் திருக்குடும்பத் திருநாள்.

நமது வழிபாட்டு ஆண்டின் மிக முக்கிய திருநாளாகவும், குடும்பங்கள் இணைந்து வருவதற்கு ஏற்ற நாளாகவும் விளங்கும் கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவை, நம் குடும்பத்தினர், மற்றும், நண்பர்களுடன் கொண்டாடமுடியாமல், இந்தக் கொள்ளைநோய் நம்மை சிறைப்படுத்திவிட்டது. இந்தக் கொள்ளைநோயைக் குறித்தும், இதை தங்களுக்கு ஆதாயமாகப் பயன்படுத்திக்கொண்டு, அரசியல் தலைவர்கள் மேற்கொண்டுள்ள அநீதியான அடக்குமறைகளைக் குறித்தும், கடந்த ஓராண்டளவாக நம்மை வந்தடைந்துள்ள செய்திகள், அயர்வையும், சலிப்பையும் உருவாக்குகின்றன. 'சே, என்ன உலகம் இது' என்று, நமக்குள் உருவாகும் சலிப்பு, நம் உள்ளங்களில் நம்பிக்கை வேர்களை அறுத்துவிடுகிறது.

நம் சலிப்பையும், மனத்தளர்ச்சியையும் நீக்கும் மருந்தாக, இந்த ஞாயிறு வாசகங்கள், நம்பிக்கையைப்பற்றி பேசுகின்றன. பிள்ளைப்பேறின்றி தவித்த ஆபிரகாமிடம், "வானத்தை நிமிர்ந்து பார். முடியுமானால், விண்மீன்களை எண்ணிப்பார். இவற்றைப் போலவே உன் வழிமரபினரும் இருப்பர்" (தொ.நூ. 15:5) என்று, ஆண்டவர் வாக்களிக்கிறார். ஆபிராம் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டார். அதை ஆண்டவர் அவருக்கு நீதியாகக் கருதினார் (தொ.நூ. 15:6) என்று முதல் வாசகம் வலியுறுத்திக் கூறுகிறது.

உடலளவில், வயது முதிர்ச்சி, உள்ளத்தளவில், பிள்ளைப்பேறு இல்லையே என்ற ஏக்கம் ஆகிய காரணங்களால், தளர்ந்திருந்த ஆபிரகாம் வளர்த்துக்கொண்ட நம்பிக்கையைப் பற்றி, எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகம், பின்வரும் சொற்களில் விவரிக்கின்றது:

ஆபிரகாம் வயது முதியவராயும் சாரா கருவுற இயலாதவராயும் இருந்தபோதிலும், அவர் ஒரு தந்தையாவதற்கான ஆற்றல் பெற்றதும் நம்பிக்கையினால்தான். ஏனெனில் வாக்களித்தவர் நம்பிக்கைக்குரியவர் என அவர் கருதினார். இவ்வாறு, உயிரற்றவர் போலிருந்த இந்த ஒருவரிடமிருந்து வானத்திலுள்ள திரளான விண்மீன்களைப் போலவும் கடற்கரையிலுள்ள எண்ணிறந்த மணலைப் போலவும் கணக்கற்ற மக்கள் பிறந்தனர். (எபிரேயர் 11: 11-12)

நம்பிக்கையின் அடித்தளம், நம்மையோ, நமக்கு அளிக்கப்பட்ட வாக்கையோ சார்ந்தது அல்ல, அது, வாக்களித்த ஆண்டவரைச் சார்ந்தது என்பதை, நாம் கற்றுக்கொள்ள, இன்றைய வாசகங்கள் அழைப்பு விடுக்கின்றன.

நம் நம்பிக்கைக்குத் தேவையான மற்றோர் அடித்தளம், பரந்து, விரிந்த கண்ணோட்டம் என்பதையும், இன்றைய வாசகங்கள் சொல்லித்தருகின்றன. தனக்கு வாரிசு இல்லை என்பதால் மனமுடைந்து, நம்பிக்கையிழந்து தவித்த ஆபிரகாமை, 'ஆண்டவர் வெளியே அழைத்து வந்து, வானத்தை நிமிர்ந்து பார்க்கும்படி கூறினார்' (காண்க. தொ.நூ. 15:5) என்று இன்றைய முதல் வாசகம் கூறுகிறது.

'வெளியே வா', 'வானத்தை நிமிர்ந்து பார்' என்று இறைவன் ஆபிரகாமுக்கு வழங்கிய இவ்விரு அழைப்புக்களும், குடும்பத்தில் உள்ளவர்களுக்குத் தேவையான அழைப்புக்கள். குடும்பத்திற்குள்ளும், வெளி உலகத்திலிருந்தும் பிரச்சனைகள் உருவாகும் வேளையில், அவை, நம் எண்ணங்களை ஆக்ரமித்துவிடுவதால், நம் கண்ணோட்டம் குறுகிப்போகிறது.

பிரச்சனைகள் எழுவது இயல்புதான். ஆனால், பிரச்சனைகள் மட்டுமே நம் வாழ்வாகிவிட்டன என்ற விரக்தி நம்மைச் சிறைப்படுத்தும்போது, நம்மால் வானத்தைக் காணமுடியாமல் போகிறது. "ஆபிராம்! அஞ்சாதே. நான் உனக்குக் கேடயமாக இருப்பேன். உனக்குப் பெரும் கைம்மாறு கிடைக்கும்." (தொ.நூ. 15:1) என்று ஆண்டவர் கூறும் நம்பிக்கைச் சொற்களுடன் இன்றைய முதல் வாசகம் துவங்குகிறது. ஆனால், இறைவனின் சொற்களை செவிமடுக்கும் மனநிலையில் இல்லாத ஆபிராம், 'என்ன பெரிய கேடயம்? என்ன பெரிய கைம்மாறு? எனக்குத்தான் பிள்ளைவரம் இல்லையே' என்று தன் குறைபாட்டிலேயே சிறைப்பட்டிருக்கிறார். எனவே, ஆண்டவர் அவரை அந்தச் சிறையிலிருந்து வெளியேறி, வானத்தை நிமிர்ந்து பார்க்க அழைக்கிறார்.

சிறையில் அடைபட்ட இருவரைப்பற்றி கூறப்பட்டுள்ள ஓர் கூற்று, நம் நினைவில் எழுகிறது: "இருவர் சிறைக்கம்பிகளுக்குப் பின்னிருந்து பார்த்தனர், ஒருவர் மண்ணைப் பார்த்தார், மற்றொவர் விண்மீனைப் பார்த்தார்" (“Two men looked out from prison bars, One saw the mud, the other saw stars.”) என்ற இந்தக் கூற்றினை, Dale Carnegie என்பவர் கூறியதாகச் சொல்லப்பட்டுள்ளது. நம் சொந்த வாழ்விலோ, குடும்ப வாழ்விலோ பிரச்சனைகள் என்ற சிறையில் சிக்கிவிட்டதைப்போல் உணரும்போது, விண்மீனைக் காண்கிறோமா அல்லது, மண்ணை மட்டும் காண்கிறோமா என்பது, நம் மனநிலையைப் பொருத்தது.

சிறையில் இருந்தாலும், அங்கும் உன்னதமானவற்றை சிந்திக்கமுடியும் என்பதை, அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள் நமக்கு உணர்த்தியிருக்கிறார். இந்திய அரசால் அநீதியான, பொய்யான பழிகள் சுமத்தப்பட்டு, மும்பைச் சிறையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக அடைக்கப்பட்டுள்ள அருள்பணி ஸ்டான் அவர்கள், அண்மையில் தன் சிறை அனுபவத்தை ஒரு கவிதை வடிவில் அனுப்பியுள்ளார். “Prison life, a great leveller”, அதாவது, "அனைத்தையும் சமமாக்கும் சிறைவாழ்வு" என்று தலைப்பிடப்பட்டுள்ள அந்தக் கவிதையின் வரிகள், தமிழில்:

 • அச்சுறுத்தும் இந்தச் சிறையின் கதவுகளுக்குப்பின்,
 • மிக அவசியமானவை தவிர,
 • மற்றெல்லா உடைமைகளும் அகற்றப்படுகின்றன
 • 'நீ' என்பது முதலாகவும்
 • 'நான்' என்பது அடுத்ததாகவும் மாறுகிறது
 • 'நாம்' என்பதே இங்கு சுவாசிக்கப்படும் காற்று
 • எதுவும் என்னதில்லை
 • எதுவும் உன்னதில்லை
 • எல்லாமே நம்மது
 • மீதமான உணவு தூக்கியெறியப்படுவதில்லை
 • அவை, வானத்துப் பறவைகளுடன் பகிர்ந்துகொள்ளப்படுகின்றன
 • பறவைகள் சிறை வளாகத்திற்குள் பறந்து வருகின்றன
 • வயிறார உண்டபின் பறந்து செல்கின்றன
 • ஒவ்வொருவரிடமிருந்தும் அவரால் முடிந்தது
 • ஒவ்வொருவருக்கும் அவருக்குத் தேவையானது
 • இதுதானே பொதுவுடைமைக் கோட்பாடு
 • இதோ, இங்கே, அத்தகையச் சமுதாயம்
 • கட்டாயத்தின்பேரில் உருவாக்கப்பட்டுள்ளது
 • இந்நிலையை எல்லா மனிதர்களும்
 • சுதந்திரமாக, விருப்பப்பட்டு அரவணைத்தால்
 • நாம் அனைவருமே பூமித்தாயின் குழந்தைகளாவோம்

இன்று நாம் விழா கொண்டாடும் இயேசு, மரியா, யோசேப்பு என்ற திருக்குடும்பத்தைப் பற்றி இப்போது பெருமையாக, புனிதமாக எண்ணி வருகிறோம். ஆனால், அவர்கள் வாழ்ந்த காலத்தில் அக்குடும்பத்தைச் சுற்றி நிகழ்ந்தது எதுவும் புனிதமாகவோ, பெருமை தருவதாகவோ இல்லையே! பச்சிளம் குழந்தை இயேசு பிறந்ததும், இரவோடிரவாக அவர்கள் வேறொரு நாட்டிற்கு புலம்பெயர்ந்து ஓடவேண்டியிருந்தது. இளம்பெண் மரியாவும், இளைஞன் யோசேப்பும், தங்கள் பிரச்சனைகளிலேயே சிறைப்பட்டுவிடாமல், இறைவன் மீது நம்பிக்கை கொண்டு, வானத்தை தங்கள் உள்ளங்களில் உருவாக்கிக்கொண்டு, வாழ்வைத் தொடர்ந்தனர்.

தங்களைச் சுற்றி நடந்த அத்தனை அவலங்களையும் மீறி, புனிதத்தையும் பெருமையையும் நிலைநாட்டிய மரியா, யோசேப்பு, குழந்தை இயேசு, அந்தக் குழந்தைக்காக உயிர் துறந்த மாசில்லாக் குழந்தைகள், ஆகிய இவர்களால்தான், கிறிஸ்மஸ் காலம் ஒரு கொண்டாட்டமாக மாறியுள்ளது. மலை போல, சுனாமி அலை போல, துயர் வந்தாலும், மனித குலத்தில் இன்னும் நம்பிக்கை வேரூன்ற, அருள்பணி ஸ்டான் சுவாமி போன்ற மனிதர்கள் இருப்பதாலேயே, உலகத்தில் திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன. கிறிஸ்து பிறப்புப் பெருவிழா, திருக்குடும்பத் திருவிழா, மாசற்றக் குழந்தைகள் திருவிழா, ஆகிய அனைத்தும், துன்பத்திலும், இரத்தத்திலும் தோய்ந்திருந்தாலும், நம்பிக்கை தரும் விழாக்களாக, நம் மத்தியில் வலம் வருகின்றன.

கோவிட்-19 கொள்ளைநோயினால், இவ்வுலகமே ஏறத்தாழ ஒரு சிறைக்கூடமாக மாறிவிட்ட சூழலிலும், நம்மிடையே வாழும் ஒரு சிலர், வானத்தையும், விண்மீன்களையும் காண்பதற்கு, நம்பிக்கைப் பாடங்களைச் சொல்லித்தருகின்றனர். அவர்களுக்காக, நாம், இறைவனுக்கு நன்றி சொல்வோம்.

26 December 2020, 14:08