தேடுதல்

Vatican News
83 வயதான இயேசு சபை அருள்பணி ஸ்டான் சுவாமி 83 வயதான இயேசு சபை அருள்பணி ஸ்டான் சுவாமி 

அருள்பணி ஸ்டான் சுவாமிக்கு பிணையல் மீண்டும் மறுப்பு

மனித உரிமைகள் அமைப்புக்களின் தேசிய அவை என்று பொருள்படும் NCHRO என்ற நிறுவனம், மனித உரிமை போராளிகளுக்கென ஒவ்வோர் ஆண்டும் வழங்கிவரும் விருதுக்கு, அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களைத் தெரிவு செய்துள்ளது.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுடன் தொடர்பு கொண்டவர் என்றும், பீமா கோரேகான் (Bhima Koregaon) வன்முறை நிகழ்வுகளைத் தூண்டிவிட்டவர் என்றும் அடுக்கடுக்காக பொய் குற்றம் சுமத்தப்பட்டு, மும்பை Taloja மத்திய சிறையில் வைக்கப்பட்டிருக்கும், 83 வயதான இயேசு சபை அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், பிணையலில் விடுதலை பெறுவதற்கு, மீண்டும் ஒருமுறை, டிசம்பர் 14, இத்திங்களன்று, மறுக்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டு, அக்டோபர் 9ம் தேதியிலிருந்து சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், முதுமையின் காரணமாகவும், பார்க்கின்சன்ஸ் உடல் நோயின் காரணமாகவும் பிணையலில் விடுவிக்கப்படுவதற்கு விடுத்துவரும் விண்ணப்பத்தை, நீதிமன்றம் தொடர்ந்து மறுத்து வந்துள்ளது.

டிசம்பர் 10ம் தேதி, மனித உரிமைகள் உலக நாளன்று அவரது வழக்கு நீதிமன்றத்திற்கு வரும் என்று கூறப்பட்டிருந்த நிலையில், அன்று, நீதிபதி, விடுமுறையில் சென்றதாகக் கூறி, வழக்கின் விசாரணை, டிசம்பர் 14ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டு, அன்றும், அவருக்கு பிணையல் மறுக்கப்பட்டுள்ளது.

பொய்யான வழக்குகளை அருள்பணி சுவாமி மீது பதிவு செய்துள்ள தேசிய புலனாய்வு அமைப்பு (NIA), அவரை பிணையலில் விடுவித்தால், அது, இந்த வழக்கு விசாரணைக்கு பெரிதும் ஆபத்தாக அமையும் என்று, இத்திங்களன்று நீதிமன்றத்தில் கூறியதைத் தொடர்ந்து, அவருக்கு பிணையல் மறுக்கப்பட்டுள்ளது.

அருள்பணி சுவாமி அவர்களின் விசாரணை, டிசம்பர் 21ம் தேதி மீண்டும் நடைபெறும் என்றும், அந்த விசாரணையைத் தொடர்ந்து, அடுத்த கட்ட நடவடிக்கைகளை தீர்மானிக்க வேண்டும் என்றும், இந்த வழக்கில் ஈடுபட்டுள்ள இயேசு சபை வழக்கறிஞர், அருள்பணி சந்தானம் அவர்கள் UCA செய்தியிடம் கூறியுள்ளார்.

இதற்கிடையே, மனித உரிமைகள் அமைப்புக்களின் தேசிய அவை என்று பொருள்படும் NCHRO என்ற நிறுவனம், மனித உரிமை போராளிகளுக்கென ஒவ்வோர் ஆண்டும் வழங்கிவரும் விருதுக்கு, அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களைத் தெரிவு செய்துள்ளது. 

மனித உரிமைகளுக்காக குரல் எழுப்பிவந்த மறைந்த செய்தியாளர் Mukundan Menon அவர்களின் நினைவாக வழங்கப்படும் இந்த விருது, 2020ம் ஆண்டில் அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

16 December 2020, 15:22