தேடுதல்

Vatican News
கராச்சி பேராயர், கர்தினால் ஜோசப் கூட்ஸ்(டிசம்பர் 2019) கராச்சி பேராயர், கர்தினால் ஜோசப் கூட்ஸ்(டிசம்பர் 2019) 

ஒன்றிப்பு, மற்றும், அமைதியில் பாகிஸ்தான் கிறிஸ்மஸ் கொண்டாட்டம்

பகைமையைப் புறம்தள்ளி, அன்பை எடுத்துரைப்பதில், அனைவரும் ஒன்றிணைந்து அமைதி, மற்றும், உடன்பிறந்த நிலை நோக்கி நடைபோடுவது, பெரும் மாற்றத்தைக் கொணரும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

கிறிஸ்மஸ்  காலத்தை, ஒன்றிப்பு, மற்றும் அமைதியின் செய்தியுடன் சிறப்பிப்போம் என, பாகிஸ்தானில், கிறிஸ்தவ, மற்றும், பல்சமயக் குழுக்கள் இணைந்து அழைப்பு விடுத்துள்ளன.

கராச்சி பேராயர், கர்தினால் ஜோசப் கூட்ஸ் தலைமையில், அந்நகரின் புனித பேட்ரிக் பேராலயத்தில், பல்சமயக் குழுக்களுடன் நடைபெற்ற கொண்டாட்டத்தில், நாம் ஒன்றுகூடுவது, கொண்டாடுவதற்கு மட்டுமல்ல, மாறாக, மற்றவர்களின் துன்ப நேரங்களில் உடனிருப்பதற்கும்தான் என்று கூறினார், கர்தினால் கூட்ஸ்.

வன்முறைகளை வெறுத்து, அமைதியின் செய்தியைப் பரப்ப விரும்பிய பல்வேறு தலைவர்கள் வாழ்ந்த கராச்சி நகரில் நாம் ஒன்று கூடியிருப்பதே, அமைதி, மற்றும், இணக்கவாழ்வின் செய்தியை, சமுதாயத்தின் அனைத்து அடிமட்ட நிலைகளிலும் பரப்பவேண்டும் என்ற நோக்கத்துடன்தான் என மேலும் எடுத்துரைத்தார், கர்தினால் கூட்ஸ்.

இதே கூட்டத்தில் கலந்துகொண்ட இஸ்லாமிய நல்வாழ்வு அமைப்பின் பொதுச்செயலர் Illama Ahsan Sadiqui அவர்கள் பேசுகையில், பகைமையை புறம்தள்ளி, அன்பை எடுத்துரைப்பதில், அனைவரும் ஒன்றிணைந்து, அமைதி, மற்றும், உடன்பிறந்தநிலை நோக்கி நடைபோடுவது, சிறிய அளவில் தொடங்கினாலும், அது பெரும் மாற்றத்தைக் கொணரும் என்றார்.

இந்து சமுதாயத்தின் சார்பில் இக்கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட Mangla Sharma அவர்கள், பல்வேறு மதங்களிடையே இணைக்க வாழ்வையும், கருத்துப் பரிமாற்றங்களையும் தொடர்ந்து ஊக்குவித்துவரும் கிறிஸ்தவ சமுதாயத்தைப் பாராட்டுவதாகத் தெரிவித்ததுடன், சிறுபான்மை சமுதாயங்களுக்கு சரிநிகர் உரிமைகளைப் பெற்றுத்தரும் இத்தகைய முயற்சிகள் தொடரவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இம்மாதம் 20ம் தேதி கராச்சியில் இடம்பெற உள்ள கிறிஸ்மஸ் அமைதி ஊர்வலத்தில், இஸ்லாமியர், இந்துக்கள், சீக்கியர், பார்சி உட்பட அனைத்து சமுதாயத்தினரும் கலந்துகொள்ளவேண்டும் என்ற அழைப்பையும் விடுத்தார், இக்கூட்டத்தில் கலந்துகொண்ட கிறிஸ்தவப் போதகர் Suleman Manzoor. ( UCAN)

15 December 2020, 15:10