தேடுதல்

கல்தேய வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை, கர்தினால் சாக்கோ கல்தேய வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை, கர்தினால் சாக்கோ 

முதுபெரும் தந்தை கர்தினால் சாக்கோ - கிறிஸ்மஸ் செய்தி

ஈராக் நாட்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மேற்கொள்ளவிருக்கும் திருத்தூதுப் பயணம், கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் உடன்பிறந்தோராய் வாழ்வதற்கு வழங்கப்பட்டுள்ள மற்றுமொரு வாய்ப்பு

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஈராக் நாட்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2021ம் ஆண்டு மார்ச் மாதம் மேற்கொள்ளவிருக்கும் திருத்தூதுப் பயணம், கிறிஸ்தவர்கள், மற்றும் முஸ்லீம்கள் அனைவரும் உடன்பிறந்தோராய் வாழ்வதற்கு வழங்கப்பட்டுள்ள மற்றுமொரு வாய்ப்பு என்று, கல்தேய வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை, கர்தினால் லூயிஸ் இரபேல் சாக்கோ அவர்கள் தன் கிறிஸ்மஸ் செய்தியில் கூறியுள்ளார்.

உடன்பிறந்த உணர்வை நம்முள் வளர்க்க உதவியாக இருக்கும் திருத்தந்தையின் பயணத்திற்கு ஒரு சிறந்த தயாரிப்பாக, இந்த கிறிஸ்மஸ் காலத்தில், நமக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளையும் தாண்டி, பிறரன்பு முயற்சிகளில் ஈடுபட, கர்தினால் சாக்கோ அவர்கள், இச்செய்தியில் அழைப்பு விடுத்துள்ளார்.

ஈராக் நாட்டில் ஏற்கனவே நிலவிவரும் பல்வேறு பிரச்சனைகளுக்கு மேலாக, கோவிட்-19 பெருந்தொற்று உருவாக்கியுள்ள பிரச்சனைகளைத் தீர்க்க, கிறிஸ்தவர்களும், இஸ்லாமியரும் ஒன்றாக இணைந்து வரவேண்டும் என்றும், இவ்வாறு இணைவதற்கு, ஒருவர் மற்றவர் மீது கொண்டுள்ள மதிப்பு இன்னும் உண்மையானதாக, உயர்ந்ததாக இருக்கவேண்டும் என்றும், கர்தினால் சாக்கோ அவர்களின் செய்தி கூறுகிறது.

திருத்தந்தையின் திருத்தூதுப் பயணத்தை முன்னிட்டு, இவ்வாண்டு முதல் முறையாக ஈராக் நாட்டில் கிறிஸ்து பிறப்புப் பெருவிழா, அனைவருக்கும் பொதுவான ஒரு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டிருப்பதை தன் செய்தியில் சிறப்பாகச் சுட்டிக்காட்டியுள்ள முதுபெரும் தந்தை கர்தினால் சாக்கோ அவர்கள், கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களுக்கிடையே இன்னும் ஆழமான உறவுகள் ஏற்பட, இந்த பொது விடுமுறை நாள் ஒரு முதல் முயற்சி என்று கூறியுள்ளார்.

இவ்வாண்டு, கிறிஸ்மஸ் திருநாள், வெளிப்புற அடையாளங்கள் பலவற்றை இழந்த திருநாளாக இருந்தாலும், இத்திருநாள், உண்மையிலேயே நம் உள்ளங்களைச் சார்ந்த ஒரு திருநாள் என்பதை, இந்த தடை உத்தரவுகள் நமக்குச் சுட்டிக்காட்டுகின்றன என்று, கர்தினால் சாக்கோ அவர்கள், இச்செய்தியில் கூறியுள்ளார்.

இவ்வாண்டு சிறப்பிக்கப்படும் கிறிஸ்மஸ் நாளையொட்டி, கல்தேய தலத்திருஅவை, 1,50,000 டாலர்கள் நிதி உதவியை, கிறிஸ்தவர், இஸ்லாமியர் என்ற பாகுபாடுகள் ஏதுமின்றி, தேவையில் உள்ள அனைவருக்கும் வழங்குகிறது என்ற குறிப்புடன், கர்தினால் சாக்கோ அவர்கள், தன் கிறிஸ்மஸ் செய்தியை நிறைவு செய்துள்ளார். (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 December 2020, 14:39