தேடுதல்

பங்களாதேஷ் கர்தினால் டி ரொசாரியோ பங்களாதேஷ் கர்தினால் டி ரொசாரியோ 

இறைவனை வரவேற்க நாம் தயாரா, என்பது, முதல் கேள்வியாக...

கர்தினால் டி ரொசாரியோ : பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்குரிய சிறந்த வழி, கிறிஸ்தவ மதிப்பீடுகளையும், படிப்பினைகளையும் ஏற்று பின்பற்றுவதாகும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

கொள்ளைநோய் நெருக்கடியால் சூழப்பட்டிருக்கும் நம் நிலைகள்,  இயேசு பிறந்த மாடடைக்குடிலினை வெளிப்படுத்துபவைகளாக உள்ளன, என தன் திருவருகைக்காலச் செய்தியில் கூறியுள்ளார், கர்தினால் பேட்ரிக் டி ரொசாரியோ.

வசதிகளற்ற ஒரு மாடடைக்குடிலில் இயேசு கிறிஸ்து குழந்தையாகப் பிறந்ததுபோல், தற்போது, துன்ப நிலைகளை அனுபவித்துவரும் நம் நடுவே, இறைவன் வந்து பிறப்பார், அதற்கு நம் இதயக்கதவுகள் திறந்து வைக்கப்படவேண்டும் என கேட்டுள்ளார், பங்களாதேஷ் கர்தினால் டி ரொசாரியோ.

ஒரு மாடடைக் குடில் போல், இறைமகனின் பிறப்பிற்கு தகுதியற்ற ஓர் இடமாக, நம் வாழ்வும் நம்மைச் சுற்றியுள்ள துன்ப நிலைகளும் இருக்கின்றபோதிலும், நமக்கு மீட்பை வழங்கும் நோக்கத்துடன் நம் வாழ்வில் வந்து பிறக்க இயேசு ஆவல் கொள்கிறார், என தன் செய்தியில் கூறும் கர்தினால் டி ரொசாரியோ அவர்கள், இறைவனை நம் வாழ்வில் வரவேற்க நாம் தயாராக இருக்கின்றோமா என்ற கேள்வியை நமக்குள்ளேயே கேட்க வேண்டிய நேரமிது, என மேலும் கூறியுள்ளார்.

குடும்பங்களில், தனிமனித வாழ்வில், மற்றும், சமுதாயங்களில் உருவாகும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்குரிய சிறந்த வழி, கிறிஸ்தவ மதிப்பீடுகளையும், படிப்பினைகளையும் ஏற்று பின்பற்றுவதாகும் எனவும் கூறிய கர்தினால் டி ரொசாரியோ அவர்கள், தவறு செய்த சகோதரனை திருத்துவதற்கு இயேசு எடுத்துரைத்த போதனையை மேற்கோள் காட்டியுள்ளார்.

இறைவனுக்குரிய பாதைகளை செம்மைப்படுத்தும் நம் தயாரிப்புப் பணியில், நம் பாதைகளை முதலில் சரி செய்யவேண்டியதன் அவசியத்தையும் தன் திருவருகைக்காலச் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார், பங்களாதேஷ் கர்தினால் டி ரொசாரியோ. (AsiaNews)

19 December 2020, 13:54