தேடுதல்

Vatican News
கர்தினால் மால்கம் இரஞ்சித் கர்தினால் மால்கம் இரஞ்சித் 

கோவிட் கொள்ளைநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடுக

கர்தினால் இரஞ்சித் : இக்கொள்ளைநோய் காலத்தில், பொருளாதார நெருக்கடிகளால் துன்பங்களை அனுபவித்துவரும் மக்களோடு கிறிஸ்து பிறப்பு விழாவை சிறப்பியுங்கள்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

கோவிட்-19 கொள்ளைநோயால் பாதிக்கப்பட்டுள்ள இக்காலக்கட்டத்தில், இந்த ஆண்டு கிறிஸ்து பிறப்பு விழாவை, நெருங்கிய உறவினர்களுடன் மட்டும் சிறப்பிக்கும்படியாகவும், கொள்ளைநோயால் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ முன்வரவேண்டும் எனவும் அழைப்பு ஒன்றை விடுத்துள்ளார், கர்தினால் மால்கம் இரஞ்சித். 

இந்த கிறிஸ்துமஸ் காலத்தில், வெளிக் கொண்டாட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல், ஆன்மீக நடவடிக்கைகளிலும், கோவிட் கொள்ளைநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிறரன்பு பணிகளை ஆற்றுவதிலும் கவனம் செலுத்துமாறு இலங்கை கத்தோலிக்கர்களுக்கு அழைப்புவிடுத்த கொழும்பு பேராயர் கர்தினால் இரஞ்சித் அவர்கள், கிறிஸ்து பிறப்பின் உண்மை அர்த்தத்தை களங்கப்படுத்தும் கலைநிகழ்ச்சிகளை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பவேண்டாம் எனவும் விண்ணப்பித்துள்ளார்.

கிறிஸ்மஸ் திருப்பலிகளில் மக்கள் பெருமெண்ணிக்கையில் கலந்துக்கொள்ள முடியாத நிலை இருப்பதுபற்றியும் குறிப்பிட்ட கர்தினால் அவர்கள், கிறிஸ்மஸுக்கு முந்தைய நாள் மாலை, உள்ளூர் நேரம் ஆறு மணியிலிருந்து, ஒவ்வொரு மணிநேரத்திற்கு ஒரு திருப்பலி என, 50 பேரின் பங்கேற்புடன் திருப்பலிகள் இடம்பெறும் எனவும் அறிவித்தார்.

கோவிட்-19 கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்றி, 50 பேருக்கு மேல் திருப்பலிகளில் அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும், இந்த கிறிஸ்மஸ் காலத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதை, விசுவாசிகள் தவிர்க்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார் கர்தினால்.

இந்த கோவிட்-19 கொள்ளைநோய் காலத்தில் வேலை வாய்ப்புகளை இழந்தும், பொருளாதார நெருக்கடிகளால் துன்பங்களை அனுபவித்தும் வரும் மக்களோடு கிறிஸ்து பிறப்பு விழாவை சிறப்பித்து அவர்களுக்கு உதவுவது, பொருளுள்ள ஒரு செயலாக இருக்கும் என மேலும் கூறியுள்ளார் கொழும்பு பேராயர், கர்தினால் இரஞ்சித். (Asia News)

19 December 2020, 14:09