தேடுதல்

Vatican News
மாரனைட் வழிபாட்டுமுறையின் முதுபெரும் தந்தை, கர்தினால் Beshara Raï மாரனைட் வழிபாட்டுமுறையின் முதுபெரும் தந்தை, கர்தினால் Beshara Raï 

லெபனானில் நிலையான அரசு அமைக்கப்பட அழைப்பு

கர்தினால் Raï : ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி லெபனானில் இடம்பெற்ற இரு வெடி விபத்துக்கள் குறித்த விசாரணைகள் எவ்வித முன்னேற்றத்தையும் இன்னும் அடையவில்லை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

இன்று உலக சமுதாயம், லெபனான் நாட்டை ஒரு நாடாக நோக்காமல், உதவித் தேவைப்படும் மக்களைக் கொண்ட ஓர் இடமாக மட்டுமே நோக்கி, அணுகிவருவதைக் குறித்து, தன் கவலையை  வெளியிட்டுள்ளார், அந்நாட்டு கர்தினால் Beshara Raï.

மாரனைட் வழிபாட்டுமுறையின் முதுபெரும் தந்தை, கர்தினால் Beshara Raï அவர்கள், இஞ்ஞாயிறு திருப்பலியில் ஆற்றிய மறையுரையில், லெபனான் அரசு குறித்து குறிப்பிட மறுக்கும் நாடுகள், லெபனான் பற்றி குறிப்பிடும்போது, லெபனான் மக்கள் என்று மட்டும் குறிப்பிடுவது ஏன் என்ற கேள்வியையும் எழுப்பினார்.

இம்மாதம் 2ம் தேதி, பிரான்ஸ் நாட்டின் தலைமையின் கீழ் பல நாடுகள் கலந்து கொண்ட கூட்டத்தில், லெபனான் அரசு குறித்து எவ்வித உரையாடலும் இடம்பெறவில்லை எனவும், ஆனால், லெபனான் மக்கள் சார்பாகப் பேசப்பட்டது எனவும் கூறினார் கர்தினால் Raï.

ஒரு காலத்தில், புகழும், வளமையும் கொண்டிருந்த லெபனான் நாடு எங்கே சென்றுவிட்டது என்ற கேள்வியையும் எழுப்பினார் கர்தினால் Raï.

ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி லெபனானில் இடம்பெற்ற இரு வெடி  விபத்துக்கள் குறித்த விசாரணைகள் எவ்வித முன்னேற்றத்தையும் இன்னும் அடையவில்லை என்ற கவலையையும் விடுத்த கர்தினால் Raï அவர்கள், அண்மைக்காலங்களில் பாதுகாப்புத்துறையை சேர்ந்த பல அதிகாரிகள் மர்மமாக உயிரிழந்து வருவது குறித்த கேள்வியையும் எழுப்பினார்.

அனைத்துப் பிரச்சனைகளுக்கும் முடிவுகாணும் விதமாக, நாட்டில் நிலையான ஓர் அரசு அமைக்கப்பட வேண்டும் என்ற விண்ணப்பத்தையும் முன்வைத்தார் கர்தினால் Raï. (AsiaNews)

07 December 2020, 15:06