தேடுதல்

மியான்மார் கர்தினால் சார்லஸ் மாங் போ மியான்மார் கர்தினால் சார்லஸ் மாங் போ 

திருக்குடும்பம் சந்தித்த பிரச்சனைகள், இன்றைய குடும்பங்களிலும்..

கர்தினால் போ : இயேசு சபை அருள்பணியாளர் Stan Lourdusamy போன்று, அநியாயமாக சிறைவைக்கப்பட்டுள்ள அனைவரின் கண்ணீரையும் இறைவன் அறிவார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

குடும்பங்கள் ஒன்றிணைந்து வாழ சிறப்புச் செபங்களை சமர்ப்பிப்பதாகவும், அனைத்து சவால்களையும் எதிர்கொள்ளும் சக்தியை குடும்பங்கள் பெறும்படியாக ஆவல் கொள்வதாகவும், திருக்குடும்ப திருவிழா திருப்பலியில் மறையுரையாற்றினார் மியான்மார் கர்தினால் சார்லஸ் போ.

கிறிஸ்து பிறப்பு விழவைத் தொடர்ந்து திருக்குடும்ப திருவிழா வருவது, குடும்பத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக உள்ளது என உரைத்த கர்தினால் போ அவர்கள், ஆதாம் மற்றும் ஏவாள் உருவாக்கிய முதல் குடும்பத்திற்கும், இயேசு,மரியா, யோசேப்பு உருவாக்கிய இரண்டாவது குடும்பத்திற்கும் இடையே உள்ள வேறுபாடுகளை சுட்டிக்காட்டினார்.

முதல் குடும்பம் இறைவனிடமிருந்து ஓடி, ஒளிந்துகொள்ள முயன்றது, ஆனால், இரண்டாவது குடும்பமோ, இறைவனை நோக்கி ஓடியது என்று கூறிய கர்தினால் போ அவர்கள், முதல் மனிதன் தன் மனைவியின்மீது குற்றம் சுமத்தி தப்பிக்க முயன்றான், ஆனால், யோசேப்போ, திருமணத்திற்கு முன்னரே மரியா கருவுற்றிருந்தபோதும், அவரை குற்றம் சுமத்தாமல், பொறுமையுடன் இறைத்திட்டத்தை நிறைவேற்றினார், என்றார்.

விசுவாசப் பயணத்தின் மையமாக இருக்கும் திருக்குடும்பத்தின் எடுத்துக்காட்டு, நம் ஒவ்வொருவருக்கும் உதவுவதாக உள்ளது என்றும், நம் கடவுள், குடும்பங்களில் வாழ்கிறார், அவர் அன்பால் நிறைந்த ஒருவராக உள்ளார் எனவும், நம் கண்ணீரையும், உடைந்த நிலைகளையும் இறைவன் அறிந்துள்ளார், இன்றைய குடும்பங்கள் சந்திக்கும் ஏழ்மை, ஏக்கங்கள், முரண்பாடுகள், நிச்சயமற்ற நிலைகள் போன்றவைகளிலிருந்து விடுதலையை, நம் குடும்பங்களுக்குள்ளேயே கண்டுகொள்ள வைக்கிறார் எனவும் கூறினார், கர்தினால் போ.

ஏழைகளுள் ஒருவராக ஏழ்மையில் தன் மகனை பிறக்க வைத்த இறைவன், நம் வேதனைகளை அறிந்தவராக நம்முடனேயே நடந்துவருகிறார் என்றுரைத்த யாங்கூன்  பேராயர், கர்தினால் போ அவர்கள், அன்று திருக்குடும்பம் சந்தித்த அதே பிரச்சனைகளை, இன்றுள்ள குடும்பங்களும் சந்தித்துவருகின்றன என கூறினார்.

மேலும், அநீதியாக இந்தியாவில் சிறைவைக்கப்பட்டிருக்கும் இயேசு சபை அருள்பணியாளர் Stan Lourdusamy அவர்கள் குறித்தும் தன் மறையுரையில் குறிப்பிட்ட கர்தினால் போ அவர்கள், இவரைப் போன்று அநியாயமாக சிறைவைக்கப்பட்டுள்ள அனைவரின் கண்ணீரையும் இறைவன் அறிவார் எனவும் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 December 2020, 15:13