தேடுதல்

Vatican News
திருத்தந்தையுடன் ஈராக் அரசுத்தலைவர் Barham Salih, மற்றும், அவர் மனைவி திருத்தந்தையுடன் ஈராக் அரசுத்தலைவர் Barham Salih, மற்றும், அவர் மனைவி   (ANSA)

ஈராக் கிறிஸ்தவர்கள் முன்னோக்கிச் செல்வதற்கு ஓர் ஊக்க சக்தி

ஆயர் Yaldo : திருத்தந்தையின் திருத்தூதுப்பயணம் குறித்த அறிவிப்பு, ஒருமைப்பாடு, அமைதி, மற்றும், உடன்பிறந்த உணர்வின் செய்தியைத் தருவதாக உள்ளது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

பல ஆண்டுகளாக திருத்தந்தை ஒருவரின் திருத்தூதுப்பயணத்திற்காக காத்திருக்கும் ஈராக் நாட்டிற்கு, வரும் ஆண்டு மார்ச் மாதம் இடம்பெறவிருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் திருத்தூதுப் பயணம், பெரு மகிழ்ச்சியைத் தரும் ஒன்றாக அமையும் என மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளார், தலைநகர் பாக்தாத்தின் துணை ஆயர்.

2000மாம் ஆண்டு ஈராக்கில் இடம்பெறுவதாக இருந்த திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுல் அவர்களின் திருத்தூதுப் பயணம் இடம்பெறமுடியாமல் இருந்ததிலிருந்து, திருத்தந்தையின் வருகைக்காக, ஈராக் நாட்டின் கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் ஆவலுடன் காத்திருப்பதாகக் கூறினார், ஆயர் Basel Yaldo,

2021ம் ஆண்டு மார்ச் மாதம் 5ம் தேதி முதல் 8ம் தேதி வரை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஈராக்கில் திருத்துப்பயணம் மேற்கொள்வார் என திருப்பீடத் தகவல் தொடர்புத் துறை அறிவித்ததைத் தொடர்ந்து, பத்திரிகையாளர்களைச் சந்தித்த பாக்தாத் துணை ஆயர் Yaldo அவர்கள்,  திருத்தந்தையின் பயணம் குறித்த அறிவிப்பு, ஈராக்கின் நிலையான தன்மையை உறுதி செய்வதாக உள்ளது என்றார்.

ஈராக் நாட்டிற்கான திருத்தந்தையின் திருத்தூதுப் பயண ஏற்பாடுகளில் ஒருங்கிணைப்பாளராகச் செயல்படும் ஆயர் Yaldo உரைக்கையில், யூதர்கள், இஸ்லாமியர்கள் மற்றும், கிறிஸ்தவர்களின் மிகப்பெரும் இறைவாக்கினராக நோக்கப்படும் ஆபிரகாமோடு தொடர்புடைய ஊர் நகரத்தையும் உள்ளடக்கிய இத்திருத்தூதுப்பயணத்திற்காக, ஈராக் பிரதமர் Mustafa al-Kadhimi, அரசுத்தலைவர் Barham Salih, ஆகியோருக்கு தலத்திருஅவை நன்றியை வெளியிடுவதாகத் தெரிவித்தார்.

திருத்தந்தையின் திருத்தூதுப்பயணம் குறித்த அறிவிப்பு, கிறிஸ்தவர்களுக்கு மட்டுமல்ல, நாடு முழுவதற்கும் ஒருமைப்பாடு, அமைதி, மற்றும், உடன்பிறந்த உணர்வின் செய்தியைத் தருவதாக உள்ளது என்ற ஆயர் Yaldo அவர்கள், ஈராக் கிறிஸ்தவர்கள் ஒரு சிறு மந்தையே எனினும், அவர்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் எனவும் தெரிவித்தார்.

இஸ்லாமியத் தீவிரவாதத்தால் எண்ணற்ற மக்கள் கொல்லப்பட்ட மொசூல் பகுதிக்கு திருத்தந்தை பயணம் மேற்கொண்டு, அங்கு உயிரழந்த மக்களுக்காகச் செபிக்க உள்ளது பற்றியும் குறிப்பிட்ட ஆயர், திருத்தந்தையின் திருத்தூதுப் பயணம், நாட்டின் வருங்காலத்திற்கும், ஈராக் கிறிஸ்தவர்கள் முன்னோக்கிச் செல்வதற்கும் ஓர் ஊக்கச் சக்தியாக அமையும் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டார்.(AsiaNews)

08 December 2020, 15:31