தேடுதல்

Vatican News
தங்கச் சுரங்கப் பணியில் பிலிப்பீன்ஸ் பாலர் தொழிலாளி ஒருவர் தங்கச் சுரங்கப் பணியில் பிலிப்பீன்ஸ் பாலர் தொழிலாளி ஒருவர் 

குழந்தைகளை பாதுகாக்கும் முயற்சிகள் அதிகரிக்கப்பட....

அரசு அதிகாரத்தில் இருப்போரும், தொழில் நிறுவனங்களின் பங்குகளை வைத்திருப்போரும், குழந்தைகளின் பாதுகாப்பு, மற்றும், நலவாழ்வை உறுதி செய்வதில் ஒன்றிணைந்து உழைக்கவேண்டும்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

மிகவும் பாதிப்புக்குள்ளாகும் மக்களை, குறிப்பாக குழந்தைகளை பாதுகாக்கும் முயற்சிகளை அதிகரிக்கவேண்டியது அவசியம் என அழைப்புவிடுத்துள்ளார் பிலிபைன்ஸ் நாட்டு ஆயர் Rex Andrew Alarcon.

இன்றைய பிலிப்பீன்ஸ் குழந்தைகளின் நிலை மிகவும் துன்பகரமானதாக உள்ளது என உரைத்த, பிலிப்பீன்ஸ் ஆயர் பேரவையின் இளையோர் பணி அவையின் தலைவர் ஆயர் Alarcon அவர்கள், அரசு அதிகாரத்தில் இருப்போரும், தொழில் நிறுவனங்களின் பங்குகளை வைத்திருப்போரும், குழந்தைகளின் பாதுகாப்பு, மற்றும், நலவாழ்வை உறுதி செய்வதில் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

குழந்தைகள் மேலும் மேலும் சுரண்டப்படாமல் இருப்பதற்கு தேவையான அனைத்தையும் வழங்கவேண்டியது, சமுதாயத்தில் உள்ள அனைவரின், குறிப்பாக, அரசு அதிகாரிகள், மற்றும், நிறுவன பங்குதாரர்களின் முக்கிய கடமை என்றார் ஆயர்.

பிலிப்பீன்ஸ் நாட்டின் சட்டப்படி, 14 வயதிற்குக் குறைவானோர், பணியாளர்களாக அமர்த்தப்படக்கூடாது எனினும், அந்நாட்டு தொழிலாளர்களுள், 21 இலட்சம் பேர் குழந்தைத் தொழிலாளர்கள் எனவும், இவர்களுள் பெரும்பான்மையானோர், ஆபத்து நிறைந்த தொழிற்சாலைகளிலும், சுரங்கத்தொழிலிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடுகளில், தொழிலாளர்களாக பணியாற்றும் ஏறக்குறைய 14 இலட்சம் பிலிப்பீன்ஸ் மக்களுள் 4 விழுக்காட்டினர், அதாவது, ஏறக்குறைய 50 ஆயிரம்பேர் சிறு வயதினர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

14 December 2020, 15:12