தேடுதல்

பானமா இளையோர் நிகழ்வில் சிலுவைப்பாதை பானமா இளையோர் நிகழ்வில் சிலுவைப்பாதை  (ANSA)

போர்த்துக்கல் இளையோரிடம், இளையோர் நாள் சிலுவை

நவம்பர் 22, வருகிற ஞாயிறன்று, புனித பேதுரு பெருங்கோவிலில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நடத்தும் திருப்பலியின் இறுதியில், உலக இளையோர் நாள் சிலுவை, போர்த்துக்கல் நாட்டு இளையோரிடம் ஒப்படைக்கப்படும்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

நவம்பர் 22, வருகிற ஞாயிறன்று, புனித பேதுரு பெருங்கோவிலில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நடத்தும் திருப்பலியின் இறுதியில், உலக இளையோர் நாள் நிகழ்வுகளின் அடையாளமாக விளங்கும் சிலுவை, போர்த்துக்கல் நாட்டு இளையோரிடம் ஒப்படைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2019ம் ஆண்டு பானமா நாட்டில் உலக இளையோர் நாள் நிகழ்ந்ததையொட்டி அங்கு கொண்டுசெல்லப்பட்ட சிலுவையையும், 'உரோம் மக்களின் பாதுகாவலர்' என்று பொருள்படும், Salus Populi Romani என்ற பெயர் கொண்ட அன்னை மரியாவின் திரு உருவத்தையும், பானமா இளையோர், போர்த்துக்கல் இளையோரிடம் ஒப்படைப்பது, 2023ம் ஆண்டு போர்த்துக்கல் நாட்டின் லிஸ்பன் நகரில் நடைபெறவிருக்கும் உலக இளையோர் நாள் நிகழ்வுகளின் துவக்கமாக அமையும்.

கொள்ளைநோய் தடைவிதிகள் காரணமாக, பானமா, மற்றும் போர்த்துக்கல் நாடுகளிலிருந்து வெகு குறைவான எண்ணிக்கையில் வருகை தரும் இளையோரின் பங்கேற்புடன், நவம்பர் 22, ஞாயிறன்று, அனைத்துக்கும் அரசரான கிறிஸ்துவின் திருநாளன்று திருத்தந்தை சிறப்பிக்கும் திருப்பலி, வத்திக்கான் ஊடகங்கள் வழியே நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இளையோர் உலக நாள் நிகழ்வுகளை ஒருங்கிணைக்கும், பொதுநிலையினர், குடும்பம் வாழ்வு ஆகிய பணிகளில் ஈடுபட்டுள்ள திருப்பீட அவை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிறைவேற்றும் இத்திருப்பலியில், அனைவரும், குறிப்பாக, இளையோர், மெய்நிகர் வழியில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்துள்ளது.

1984ம் ஆண்டு முதல் நடைபெற்றுவரும் உலக இளையோர் நாள் நிகழ்வுகள், 2022ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் போர்த்துக்கல் நாட்டின் லிஸ்பன் நகரில் நடைபெறும் என்று, அறிவிக்கப்பட்டிருந்தாலும், கோவிட்-19 கொள்ளைநோய் காரணமாக, இந்நிகழ்வு, தற்போது, 2023ம் ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டள்ளது.

18 November 2020, 14:18