தேடுதல்

Vatican News
புதைவடிவ எரிபொருள்கள் பயன்படுத்தப்படுவதைக் குறைக்கும் மத அமைப்புகள் புதைவடிவ எரிபொருள்கள் பயன்படுத்தப்படுவதைக் குறைக்கும் மத அமைப்புகள் 

மதம் சார்ந்த 47 அமைப்புகள் புதைவடிவ எரிபொருள்களை..

சமுதாய மற்றும், சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் நிறுவனங்களில் முதலீடுகள் செய்வதை, கத்தோலிக்கர் தவிர்க்கவேண்டும் என்று, வத்திக்கான் ஏற்கனவே கேட்டுக்கொண்டிருந்தது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

காலநிலை மாற்றத்தின் எதிர்விளைவுகளைக் குறைக்கும் நோக்கத்தில், 21 நாடுகளைச் சேர்ந்த, மதம் சார்ந்த 47 அமைப்புகள், புதைவடிவ எரிபொருள்கள் பயன்படுத்தப்படுவதைக் குறைப்பதற்கு, நவம்பர் 16, இத்திங்களன்று தீர்மானித்திருப்பதை, வத்திக்கான் வரவேற்றுள்ளது.

மனித, சமுதாய மற்றும், இயற்கைச் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் நிறுவனங்களில் முதலீடுகள் செய்வதை, கத்தோலிக்கர் தவிர்க்கவேண்டும் என்று,  சூழலியல் பற்றி வத்திக்கான் வெளியிட்ட வழிகாட்டுதல்கள் பின்பற்றப்பட்டிருப்பது குறித்து பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

கருக்கலைப்பு மற்றும், ஆயுத வர்த்தகம் வழியாக சமுதாய சூழலியலுக்கும், புதைவடிவ எரிபொருள்களைப் பயன்படுத்துவதன் வழியாக, இயற்கை சுற்றுச்சூழலுக்கும் ஏற்படுத்தப்படும் பாதிப்புக்கள் குறித்து, வத்திக்கான் தன் வெளியீட்டில் குறிப்பிட்டிருந்தது.

உலகளாவிய கத்தோலிக்க காலநிலை இயக்கத்தின் சுட்டெண்ணின்படி, 42 கத்தோலிக்க நிறுவனங்கள், ஐந்து கிறிஸ்தவ மற்றும் யூத அமைப்புகள், காலநிலை மாற்றத்தின் பாதிப்புக்களைக் குறைப்பதற்கு உதவும் வகையில், புதைவடிவ எரிபொருள் தொழிற்சாலைகளோடு இதுவரை கொண்டிருந்த உறவுகளைத் துண்டித்துள்ளன. 

புதைவடிவ எரிபொருளில் முதலீடு செய்யும் ஒவ்வொரு டாலரும், துன்பத்திற்கு அளிக்கும் ஓட்டாகும் என்று, உலகளாவிய கத்தோலிக்க காலநிலை இயக்கத்தின் இயக்குனர் Tomás Insua அவர்கள் கூறியுள்ளார்.

ஐரோப்பிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் (COMECE) பொதுச்செயலர் அருள்பணி Manuel Barrios Prieto அவர்கள் கூறுகையில், புதைவடிவ எரிபொருளைக் குறைப்பதற்கு முயற்சிக்கும் இயக்கத்தோடு ஐரோப்பிய ஆயர்களும் இணைவதாகக் கூறியுள்ளார். (Agencies)

17 November 2020, 15:06