தேடுதல்

அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவை அலுவலகம் அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவை அலுவலகம்  (Farragutful)

McCarrick அறிக்கையைக் குறித்து அமெரிக்க ஆயர் பேரவை

அமெரிக்க ஐக்கிய நாட்டு இறைமக்கள் மீது திருத்தந்தை கொண்டுள்ள மேய்ப்பருக்குரிய பரிவு, McCarrick அறிக்கையின் வழியே வெளியாகியுள்ளது - அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின் தலைவர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

Theodore McCarrick அவர்களைப்பற்றிய விவரங்களும், அவரைக்குறித்து எடுக்கப்பட்டுள்ள முடிவுகளும் அடங்கியுள்ள அறிக்கையை, அமெரிக்க ஆயர்கள் சார்பாக நான் வரவேற்கிறேன் என்று அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின் தலைவர், பேராயர் ஹோஸே கோமஸ் அவர்கள் கூறியுள்ளார்.

நவம்பர் 10 இச்செவ்வாயன்று வெளியான இவ்வறிக்கையைக் குறித்து தன் கருத்துக்களை பதிவு செய்துள்ள Los Angeles பேராயர் கோமஸ் அவர்கள், அமெரிக்க ஐக்கிய நாட்டு இறைமக்கள் மீது திருத்தந்தை கொண்டுள்ள மேய்ப்பருக்குரிய பரிவு, இந்த அறிக்கையின் வழியே வெளியாகியுள்ளது என்று கூறினார்.

திருஅவை வரலாற்றில் மிக வேதனையான ஒரு பகுதியாக அமைந்துள்ள இவ்வறிக்கை, இந்தக் குற்றத்தை நாம் வேரோடு களைவதற்கு, மீண்டும் ஒருமுறை அழைப்பு விடுக்கிறது என்று கூறிய பேராயர் கோமஸ் அவர்கள், McCarrick அவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு தன் ஆழ்ந்த வருத்தத்தையும் வெளியிட்டார்.

சிறாரின் பாதுகாப்பிற்கென உருவாக்கப்பட்டுள்ள திருப்பீட அவையின் தலைவராகப் பணியாற்றும் கர்தினால் Seán Patrick O'Malley அவர்கள், இவ்வறிக்கையைப் பற்றி தன் கருத்துக்களை வெளிப்படுத்தியபோது, திருஅவையின் அனைத்து துறைகளிலும், நிலைகளிலும் வெளிப்படையான வழிமுறைகள் கடைபிடிக்கப்படவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள விருப்பத்திற்கு, McCarrick அவர்களைப்பற்றிய அறிக்கை, மற்றுமோர் எடுத்துக்காட்டு என்று கூறினார்.

இந்த அறிக்கையின் விளைவாக இறைமக்களிடையே இன்னும் கூடுதலான நம்பிக்கை வளரும் என்று தான் நம்புவதாகவும், பாலியல் தொடர்பான தீமையை வேரோடு நீக்க அனைவரும் இணைந்து உழைக்கவேண்டும் என்றும் கர்தினால் O'Malley அவர்கள் கூறினார்.

11 November 2020, 14:55