தேடுதல்

இயேசுவின் பிறப்பு அறிவிப்பு இயேசுவின் பிறப்பு அறிவிப்பு 

மரியா, நம்பிக்கையின் அன்னை - அருள்பணி அமல்ராஜ் ம.ஊ.ச.

1917ம் ஆண்டில், முதல் உலகப் போர் ஏற்படுத்திய துன்பங்களை, உலகினர் அனுபவித்துவந்தவேளை, திருத்தந்தை 15ம் பெனடிக்ட் அவர்கள், மரியா, அமைதியின் அரசி என்ற மன்றாட்டை இணைத்தார்

மேரி தெரேசா: வத்திக்கான்

கத்தோலிக்கத் திருஅவை, இத்தாலி நாட்டின் லொரேத்தோ அன்னை மரியா திருத்தலத்தில் ஆரம்பிக்கப்பட்ட, லொரேத்தோ அன்னை மரியா மன்றாட்டு மாலை வழியாக, புனித கன்னி மரியாவிடம், பல்வேறு மன்றாட்டுக்களை சமர்ப்பித்து வருகிறது. இந்த மன்றாட்டு மாலையில், திருத்தந்தையர், பல்வேறு வரலாற்று நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து, பல்வேறு காலக்கட்டங்களில் சில மன்றாட்டுக்களை இணைத்து வந்துள்ளனர். எடுத்துக்காட்டாக, 1917ம் ஆண்டில், முதல் உலகப் போர் ஏற்படுத்திய துன்பங்களை, உலகினர் அனுபவித்துவந்தவேளை, திருத்தந்தை 15ம் பெனடிக்ட் அவர்கள், மரியா, அமைதியின் அரசி என்ற மன்றாட்டை இணைத்தார். 1950ம்ஆண்டு நவம்பர் முதல் தேதி புனித கன்னி மரியாவின் விண்ணேற்பு கோட்பாட்டு பேருண்மையை அறிவித்த திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள், விண்ணேற்படைந்த அரசியே என்ற மன்றாட்டையும், திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள், மரியா திருஅவையின் அன்னை, குடும்பங்களின் அரசி ஆகிய மன்றாட்டுக்களையும் இணைத்தனர். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2020ம் ஆண்டு ஜூன் மாதம் இருபதாம் தேதி,  மரியா இரக்கத்தின் அன்னை, நம்பிக்கையின் அன்னை மற்றும் புலம்பெயர்ந்தோர் ஆறுதலின் அன்னை ஆகிய மூன்று புகழ்ச்சிகளை லொரேத்தோ அன்னை மரியா மன்றாட்டு மாலையில் இணைத்துள்ளார். இன்று மரியின் ஊழியர் சபையின் அருள்பணி அமல்ராஜ் அவர்கள், மரியா, எவ்வாறு நம்பிக்கையின் அன்னையாக விளங்குகிறார் என்று விளக்குகிறார்.

மரியா, நம்பிக்கையின் அன்னை - அருள்பணி ஆ.அமல்ராஜ் ம.ஊ.ச.

மரியா, நம்பிக்கையின் அன்னை ((Maria, Mater Spei))

அருட்தந்தை ஆ.அமல்ராஜ் ம.ஊ.ச.

உலகெங்கும் பரவிவாழும் வத்திக்கான் வானொலியின் தமிழ்ச் சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம். நமது திருத்தந்தை லொரேத்தோ மரியன்னை மன்றாட்டு மாலையில் புதிதாகச் சேர்த்த மரியா இரக்கத்தின் அன்னை, நம்பிக்கையின் அன்னை மற்றும் அகதிகளின் ஆறுதல் போன்ற மூன்று புதிய வாழ்த்தொலிகளிலிருந்து கடந்து வாரம் மரியா இரக்கத்தின் அன்னை என்பதைப் பற்றிச் சிந்தித்தோம். அதன் தொடர்ச்சியாக இன்று இரண்டாவது வாழ்த்தொலியான மரியாள் நம்பிக்கையின் அன்னை என்ற தலைப்பில் சிந்திப்போம்.

1. ஏன் மரியாள் நம்பிக்கையின் அன்னை என்று அழைக்கப்படுகின்றாள்?

இந்தக் கேள்விக்கான விடையை நாம் விவிலியத்தில் தேடுகின்றபொழுது மரியாளுடைய வாழ்வில் நிகழ்ந்த முக்கியமான இரண்டு நிகழ்வுகள், நமது மனக்கண்முன் வரக்கூடும். ஒன்று வானதூதருடைய இயேசு கிறிஸ்துவின் பிறப்பு பற்றிய அறிவிப்பு நிகழ்வு மற்றொன்று சிலுவையின் அடியில் நிற்கும் வியாகுல அன்னையினுடைய காட்சி. ஒன்று அதிர்ச்சியும் ஆனந்தமும் நிறைந்த நிகழ்வு. மற்றொன்று மனதை உருக்கும் துக்கமும் துயரமும் நிறைந்த நிகழ்வு. ஒன்று மெசியாவினுடைய மனுவுருவாதல் நிகழ்வு மற்றொன்று அந்த இறைமகனுடைய துயரமான முடிவு. ஒன்று நம்பிக்கையின் தொடக்கம் இன்னொன்று அந்த நம்பிக்கை சிதைக்கப்பட்டு மீட்பின் பயணமானது முடிந்துவிட்டதோ என எண்ணத் தோன்றும் ஒரு விபரீதமான முடிவு. ஒன்று ஒளியின் வருகையை அறிவிக்கும் நிகழ்வு. இன்னொன்று இருளின் ஆட்சிக்கான சான்று. இந்த இரு நிகழ்விலும் மரியாள் அவசரப்படவில்லை. அதிர்ந்து போகவில்லை. அங்கலாய்க்கவில்லை மற்றும் நிலைகுலைந்து போகவில்லை. ஏனென்றால் அவள் இறைவனின் வார்த்தையை முழுமையாக ஏற்றுக்கொண்டு அதனை நம்பி தன்னுடைய மகனுடனான அந்த மீட்பின் பயணத்தைத் தொடங்கினாள். இந்த இரு நிகழ்விலுமே மரியாளை இயக்கியது, அவள் இறைவன் மீது வைத்திருந்த ஆழமான நம்பிக்கை. மனித வாழ்வானது கடினமான மற்றும் கொந்தளிப்பான சூழல்கள் பல சவால்கள் நிறைந்த கடற்பயணத்தைப் போன்றதாகும். இத்தகைய சவாலானதொரு பயணத்தில் நமக்குத் துணையாக நம்பிக்கை தந்து நமது இலக்கை அடைய உதவும் கலங்கரை விளக்கமாகரூபவ் துருவ நட்சத்திரமாக மற்றும் புதியதொரு விடியலின் வாழ்வின் வருகையை அறிவிக்கும் விடியற்கால நட்சத்திரமாக நமக்கு அன்னை மரியாள் இருக்கின்றாள். இதையே இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் Lumen Gentium எனப்படும் திருச்சபை பற்றிய ஏடானது  ஏற்கனவே விண்ணுலகில் ஆன்மாவோடும் உடலோடும் மாட்சிமைப்படுத்தப் பெற்றிருக்கும் இயேசுவின் தாய் வருங்காலத்தில் நிறைவு பெறப்போகும் திருச்சபையின் உருவமும் தொடக்கமுமாய் இருக்கின்றார்; இது போலவே இவ்வுலகில் ஆண்டவரது நாள் வரும்வரை (2பேது.3-10) பயணம் செய்யும் இறைமக்கள் முன்பு உறுதியான எதிர்நோக்கும் ஆறுதலுக்கும் அடையாளமாக ஒளிர்கின்றார் (Lumen Gentium, n. 68) என்று அன்னை மரியாளைப் பற்றிக் கூறுகின்றது.

இக்கருத்தையொட்டியே முன்னாள் திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் அவர்கள் (Spe Salvi, n. 49). அதாவது மீட்பளிக்கும் நம்பிக்கை என்னும் தனது திருமடலில், வாழ்க்கை என்பது பெரும்பாலும் இருளும் புயலும் நிறைந்த வரலாற்றுக் கடலில் மேற்கொள்ளப்படும் ஒரு பயணத்தைப் போன்றது. இப்பயணத்தில் நம் வாழ்வின் உண்மையான நட்சத்திரங்கள் நமக்குமுன் நல்லதொரு வாழ்க்கையை வாழ்ந்து சென்றவர்கள் ஆவார்கள். அவர்கள் நம்பிக்கையின் சுடர்கள். நிச்சயமாக இயேசு கிறிஸ்துவே உண்மையான ஒளி மற்றும் வரலாற்றின் அனைத்து இருள் மற்றும் நிழல்களுக்கும் மேலாக பிரகாசமாக எழுந்து ஒளிவீசும் சூரியன். அந்த இயேசுவை நாம் அடைய அவருக்கு மிக அருகில் இருந்து அவருடைய ஒளியால் பிரகாசித்து நம்மையும் அந்த ஒளியை நோக்கி நடத்திச் செல்ல நமக்கு அருகிலுள்ள விளக்குகள் தேவை. அப்படிப் பார்க்கையில் மரியாவைவிட வேறு யார் நமக்கு நம்பிக்கையின் நட்சத்திரமாக இருக்க முடியும்? அவளுடைய ஆகட்டும் என்ற ஒற்றை வார்த்தையின் வழியாக இவ்வுலகின் கதவைக் கடவுளுக்குத் திறந்தாள். இவ்வாறு புதிய உடன்படிக்கையின் பேழை ஆனாள். இதில்தான் கடவுள் மனுவுருவானார். அதன்வழியாக அவர் நம்மில் ஒருவராகி அவருடைய கூடாரத்தை நம்மிடையே அமைத்தார் (யோவா 1ரூபவ்14)” என்று அன்னை மரியாள் எவ்வாறு நமக்கு நம்பிக்கையின் தாயாக இருக்கின்றார் என்பதை மிக அற்புதமாக விளக்குகின்றார்

2. அன்னை மரியாளுடைய வாழ்வில் நம்பிக்கை

சுருங்கக்கூறின் அன்னை மரியாளுடைய நம்பிக்கையானது கிறிஸ்துவில் வேரூன்றியதொன்றாக இருக்கின்றது.  இக்கருத்தானது மரியாளுடைய வாழ்வின் அனைத்து நிலைகளிலும் வெளிப்படுத்தப்படுகின்றது. முதலாவதாக, இயேசு கிறிஸ்துவினுடைய பிறப்பின் அறிவிப்பு நிகழ்வை விளக்கும் புனித இரேனிமுஸ் போன்ற பல திருச்சபைத் தந்தையர்கள், வாளின் கீழ்ப்படியாமையால் விளைந்த முடிச்சு மரியாவின் கீழ்ப்படிதலால் அவிழ்க்கப்பட்டது. நம்பிக்கையின்மையால் கன்னி ஏவாள் கட்டியதை நம்பிக்கையால் கன்னி மரியா அவிழ்த்துவிட்டார் என்று கூறுகின்றார்கள்.

இரண்டாவதாக இயேசுவின் பிறப்பு. இதைப் பற்றிக் குறிப்பிடுகையில், கடவுளுடைய மனுவுருவாதல் நிகழ்வுடன் புதிய காலங்கள் தொடங்குகின்றன. இப்புது யுகத்தில் மிகச்சிறப்பான விதத்தில் நம்பிக்கையின் மார்க்கமான கிறிஸ்தவத்தை அதாவது கிறிஸ்துவைப் பெற்றெடுக்கின்றாள் என்று ரெமானோ க்வர்தீனி என்கின்ற இத்தாலிய இறையியலாளர் கூறுகின்றார்.  இதையே இரத்தினச் சுருக்கமாக மரியாள் நம்பிக்கையின் தாயாவாள், ஏனென்றால், அவள் உடல் ரீதியாக கிறிஸ்துவின் தாய் என்றும் கிறிஸ்தவ நம்பிக்கை என்பது மரியன்னை நம்பிக்கை என்றும் இறையியலாளர்கள் கூறுகின்றார்கள்.

மூன்றாவதாக, தன் மகனின் சிலுவையின் அடியில் சிறப்பான விதத்தில் மரியாள் நம்பிக்கையின் அன்னையாக மிளிர்கின்றாள். இதை மிகச் சிறப்பாக 13ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இத்தாலிய நாட்டு தோடி நகரத்து யாக்கோபு எழுதிய Stabat Mater என்கின்ற பாடலில் அதன் ஆசிரியர் விளக்குகின்றார். பெற்ற மகனை இழந்த ஒரு தாயினுடைய சோகத்தையும் துயரத்தையும் விவரிக்கும் மிகவும் நீண்ட நெடிய இதயத்தை கசக்கிப் பிழியும் வார்த்தைகளைக் கொண்ட இப்பாடலின் இறுதியில் வரும் வார்த்தைகள் எவ்வாறு அந்த மரியாள் அந்தத் துயரமான நிகழ்விலும்கூட நம் அனைவருக்கும் நம்பிக்கையின் அன்னையாக விளங்குகின்றார் என்பதை இவ்வாறு விவரிக்கின்றன:

தீர்வை நாள் வரும்போது

ஆறாத்தீ நான் ஆழா

அருகில் நிறபாய் அம்மா

இயேசு நீர் அழைக்கும் வேளை

நேசத்தாய் மன்றாட்டால்

பாதம் வரத் தயை செய்வீர்

மண்ணில் உடல் மடிந்தால்

விண்ணில் ஆன்மா வந்து சேர

மரியே மகனை வேண்டாய்

இப்பாடல் வெளிப்படுத்தும் நம்பிக்கையையே நமது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் தெள்ளத் தெளிவாக மரியாள்  நம்பிக்கையின் தாய் என்ற தலைப்பில் வழங்கிய தன்னுடைய மறைக்கல்விச் சிந்தனையில் இவ்வாறு கூறுகின்றார்:

தாய்மார்கள் துரோகம் செய்ய மாட்டார்கள். இறந்துகொண்டிருக்கும் தன் மகனுடைய சிலுவையின் அடியில் நிற்கும்  அந்த தருணத்தில் கொடுரமான சிலுவைத் தன்டனையால் இறக்கும் ஒரு குற்றமற்ற மனிதனின் அல்லது தன்னுடைய மகன் தனது கண்முன் இறந்துகொண்டிருப்பதைக் காணும் ஒரு தாயினுடைய வேதனையானது எப்படி இருந்திருக்கும் என்பதை எவராலும்  விவரிக்க முடியாது. அதை விவரிக்கும் நற்செய்தியாளர் யோவான் மிக மிக அற்புதமாக, சிலுவை அருகில் இயேசுவின் தாயும், தாயின் சகோதரியும் குளோப்பாவின் மனைவியுமான மரியாவும், மகதலா மரியாவும் நின்று கொண்டிருந்தனர் (Nahth 19> 25) என்று மட்டும் குறிப்பிடுகின்றார். (Pope Francis, Series of Catechesis on Christian hope during the General audience, 10 May 2017). சிலுவையின் அடியில் நிற்கும் அவள் விசுவாசமுள்ள மற்றும் நம்பிக்கையுள்ளதொரு தாயிடமுள்ள தெளிவுடன் தன் மகனுடைய மரணத்தை ஒரு அடிமைத்தன மரணம் என்று கருதாமல் இயேசுவுக்கும் அவருடைய மக்களுக்குமிடையேயான மண ஒப்பந்த நிறைவின் அதாவது இரத்தத்தினால் முத்திரைகுத்தப்பட்ட உடன்படிக்கையின் நிறைவின் கொண்டாட்டமாகக் கருதினார். இந்தக் கொண்டாட்டமே இயேசுவின் உயிர்ப்பிலும் தூய ஆவியின் வருகையிலும் தொடர்கின்றது. இதையே நமது முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், மரியாள் நம்பிக்கையை வெளிப்படுத்தும் மகழ்ச்சியால் நிறைந்ததொரு பெண். ஏனென்றால் இயேசுவினுடைய உயிர்ப்பானது எல்லாவற்றிற்கும் மேலாக மரியாளுடைய வாழ்வு முழுவதும் நிறைந்திருந்தது. அதுவே சீடர்களுடைய மிகச்சிறந்ததொரு தாயாக அவளை உருவாக்கியது என்று கூறுகின்றார். இதைத் தமது Spe Salvi என்னும் திருமடலில், உயிர்த்தெழுதலின் சந்தோசமானது உம் உள்ளத்தைத் தொட்டு புதுமையானதொரு வழியில் உண்மைச் சீடர்களோடு இணைத்தது. விசுவாசத்தின் மூலம் இயேசுவின் குடும்பமாக அக்குழுமத்தை மாறச் செய்தது. இவ்வகையில் நீர் நம்பிக்கைகொண்டோர் குழுமத்தில் அவர்களோடு இருந்தீர். கிறிஸ்துவின் விண்ணேற்பிற்குப்பின் தூய ஆவியின் வருகைக்காக அவர்களோடு இணைந்து முழுமனதோடு செபித்தீர்கள (திப.1,14). அச்செபத்தின் விளைவாக பெந்தகோஸ்தே நாளில் அதைப் பெற்றீர்கள். இவ்வாறு மனிதர்கள் கற்பணைசெய்துபார்க்க முடியாத அளவுக்கு இயேசுவின் அரசானது முற்றிலும் வித்தியாசமானதாக இருந்தது என்று மிக அழகாக விவரிக்கின்றார். மரியாள் இன்றும் இயேசுவின் சீடர்களான நம் அனைவருக்கும் நம்பிக்கையின் தாயாக இருந்து வழிநடத்துகின்றாள். இந்த நம்பிக்கையே இன்றும் சிலுவையில் அறையப்பட்டுக்கொண்டிருக்கும் எண்ணற்ற நம் சகோதர சகோதரிகளின் சிலுவைகளின் அடியில் அவர்களுக்குத் துணை நிற்க நம்மையும் தூண்டுகின்றது.

3. தொடக்ககால கிறிஸ்தவ மக்களின் நம்பிக்கை வாழ்வில் அன்னை மரியாள்

இந்த விவிலிய ஆதாரங்களைத் தழுவியே திருச்சபையின் தொடக்க காலம் முதலே கிறிஸ்தவர்கள் மரியாளை நம்பிக்கையின் தாயாகவே பார்த்து அதைப் பற்றிப் பாடிப் புகழ்ந்து வாழ்வின் துன்ப துயரங்களிலிருந்தும் மரணவேளையிலும் மரணத்திற்குப் பின் இறந்தவர்களுடைய மீட்பிற்காகவும் அவளிடம் வேண்டி வந்துள்ளதைக் காணலாம். இது

பன்நெடுங்காலமாகப் பாடப்பட்டுவரும் மரியன்னைக்கான புகழ் பாடல்களிலும் செபங்களிலும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக மரியாளுக்கென்று முதன் முதல் இயற்றப்பட்ட பாடலான Sub tuum praesidium என்கின்ற பாடலில்..

கடவுளின் அன்னையே கன்னி மரியே

அடைக்கலம் நீரென அணுகி வந்தோம்;

கடைக்கண் பார்த்து எம்தேவையில் எல்லாம்

எடுத்தெறியாமல் எம்வேண்டல் ஏற்பீர்

இடுக்கண் இடர்கள் அனைத்திலும் இருந்து

இடைவிடாது எம்மைக் காத்திடுவீரே

பெண்களுக்குள் நீர் பேறுபெற்றீரே!

விண்ணக மாட்சியில் விளங்கும் தாயே. ஆமென்.

என்று பாடி அவர்களுடைய துன்பத்திலிருந்தும் துயரத்திலிருந்தும் காத்திடுத்ம் தாயாக நினைத்து அவளைக் கொண்டாடுகிறார்கள். அதேபோலவே மிகவும் பிரபலமான Salve Regina  என்னும் பாடலில்  vita, dulcedo, et spes nostra salve  

கிருபை தயாபத்துக்கு மாதாவாயிருக்கிற எங்கள் இராக்கினியே வாழ்க!

எங்கள் ஜீவியமே, எங்கள் தஞ்சமே எங்கள் மதுரமே வாழ்க!

பரதேசிகளாயிருக்கிற நாங்கள் ஏவையின் மக்கள் உம்மைப் பார்த்து கூப்பிடுகிறோம்

என்ற வார்த்தைகள் மரியா மீதும் அவளுடைய பரிந்துரையின் மீதும் கிறிஸ்தவர்கள் வைத்திருந்த நம்பிக்கையையும் விசுவாசத்தையும் எடுத்துக்காட்டுகின்றன.

Alma Redemptoris Mater என்னும் மற்றொரு பாடலில் உள்ள  

மண்ணக மீட்பரின் மாண்புயர் அன்னையே

விண்ணகம் செல்லத் திறந்த வாயிலே

தண் கடல் மீதொளிர் விண்மின் நீரே

வீழ்ச்சி நின்றெழ முயன்றிடும் மக்களை

ஆட்சி செய்து அவர்க்குதவிடுவீர்

என்ற வார்த்தைகள் அன்னை மரியாள் எவ்வாறு வாழ்க்கை என்னும் கடலில் மனித வாழ்வு என்னும் படகனாது திசைதெறியாது கலங்கித் தவிக்கும் வேளையில் மரியா விண்மீனாய் மிளிர்ந்து கரைசேர்க்க வேண்டும் என்று நம்பிக்கையோடு அவளிடம் செபிப்பதை வெளிப்படுத்துகின்றது.

இந்த கிறிஸ்தவ பாரம்பரியத்தைப் பினபற்றி அனுதினமும் நம்முடைய செபத்தில் மரியே நம்பிக்கையின் தாயே என்று சொல்லி நம்முடைய துன்ப நேரத்தில் அவளுடைய துணையை கேட்டு வேண்டுவோம். இறைவன் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் நிறைவாக ஆசீர்வதித்து எல்லாத் தீமைகளிலிருந்தும் கொடுமையான இந்த கொள்ளை நோயிலிருந்தும் விடுவித்து தம் இறக்கைகளுக்கு அடியில் வைத்து பாதுகாத்து வழிநடத்துவாராக.

12 November 2020, 14:45