தேடுதல்

நாமான் புறப்பட்டுச் சென்று கடவுளின் அடியவரது வாக்கிற்கிணங்க யோர்தானில் ஏழுமுறை மூழ்கியெழ, அவர் நலமடைந்தார். 2 அரசர்கள் 5:14 நாமான் புறப்பட்டுச் சென்று கடவுளின் அடியவரது வாக்கிற்கிணங்க யோர்தானில் ஏழுமுறை மூழ்கியெழ, அவர் நலமடைந்தார். 2 அரசர்கள் 5:14 

விவிலியத்தேடல்: பத்து தொழுநோயாளர் நலமடைதல் 6

படைத்தலைவன் நாமான் குணமடைந்த நிகழ்வுக்கும், பத்து தொழுநோயாளர் குணடைந்த நிகழ்வுக்கும் ஒரு சில ஒப்புமைகள் இருப்பதால், நாமான் நலமடைந்த நிகழ்வை சிறிது ஆழமாகச் சிந்திப்போம்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

லூக்கா நற்செய்தி – பத்து தொழுநோயாளர் நலமடைதல் 6

விவிலியத்தின் பல இடங்களில் தொழுநோயாளரைப் பற்றிய நிகழ்வுகள் கூறப்பட்டுள்ளன. இவற்றில், நாம் தற்போது சிந்தித்துவரும் பத்து தொழுநோயாளர் நலமடைதல் என்ற இப்புதுமை உட்பட, பல நிகழ்வுகளில், நோயுற்றோரின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை. புதிய ஏற்பாட்டில், ஒரே ஒரு முறை, தொழுநோயாளரின் பெயர் 'சீமோன்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. "இயேசு பெத்தானியாவில் தொழுநோயாளர் சீமோன் இல்லத்தில் இருந்தார்" (மத்தேயு 26: 6-13, மாற்கு 14:3-9) என்ற குறிப்பை, நற்செய்தியாளர்கள் மத்தேயுவும், மாற்கும் பதிவு செய்துள்ளனர். அந்த இல்லத்தில், இயேசுவும், மற்றவர்களும், பந்தியில் அமர்ந்திருந்தனர் என்பதை அறியும்போது, அந்த இல்லத்தலைவர் 'சீமோன்' அவர்கள், தொழுநோயிலிருந்து குணமடைந்திருக்கவேண்டும் என்பது, தெளிவாகிறது. இல்லையெனில், அவரை யாரும் நெருங்கியிருக்க முடியாது, அவரும் தன் இல்லத்தில் வாழ்ந்திருக்க முடியாது. அவர் குணமான பின்னரும், அவருக்கு தொழுநோயாளர் சீமோன் என்ற பெயர் தங்கிவிட்டது என்பது வியப்பைத் தருகிறது. ஒருவேளை, அவரது தொழுநோயை இயேசு குணமாக்கியிருக்கலாம் என்பதும், அந்தப் புதுமையின் நினைவாக, சீமோன் அவர்கள், அந்தப் பெயரை விரும்பி ஏற்றிருக்கலாம் என்பதும், விவிலிய விரிவுரையாளர்கள் சிலரின் கணிப்பு.

பழைய ஏற்பாட்டில், தொழுநோயாளரைப் பற்றிய நிகழ்வுகள் பல இடங்களில் கூறப்பட்டுள்ளன. இந்நிகழ்வுகளில், ஆறு தருணங்களில் மட்டும் தொழுநோயாளரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த ஆறு பேரில், மோசே (விடுதலைப் பயணம் 4:6-7), மிரியாம் (எண்ணிக்கை 12:10), கேகசி (2 அரசர்கள் 5:20) யோவாபு (2 சாமுவேல் 3:29) உசியா (2 குறிப்பேடு 26:19-23) ஆகிய ஐந்து பேருக்கு உண்டான தொழுநோய், ஆண்டவர் தந்த தண்டனை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆறாவதாக கூறப்பட்டுள்ள தொழுநோயாளர், நாமான். "சிரியா மன்னனின் படைத்தலைவனான நாமான் தம் தலைவனிடம் சிறப்பும் நன்மதிப்பும் பெற்றிருந்தார்... அவர் வலிமை மிக்க வீரர்; ஆனால் தொழுநோயாளி" (2 அரசர்கள் 5:1) என்ற சொற்களுடன் நாமான் அறிமுகம் செய்துவைக்கப்படுகிறார். இவர் தொழுநோயுற்றதற்கு காரணம் எதுவும் கூறப்படவில்லை.

அத்துடன், தொழுநோயாளி நாமான், பழைய ஏற்பாட்டிலும், புதிய ஏற்பாட்டிலும் குறிப்பிடப்பட்டுள்ளார். நாசரேத்து தொழுகைக்கூடத்தில் தன் பணிவாழ்வைப் பற்றிய அறிக்கையை வெளியிட்ட இயேசு, அவ்வேளையில், தொழுநோயாளி நாமானைப் பற்றியும் கூறினார். இஸ்ரயேல் மக்களுள் எவருக்கும் கிடைக்காத ஒரு புதுமை, வேற்றினத்தவரான நாமானுக்கு மட்டுமே கிடைத்தது என்பதை, இயேசு, தன் ஊர் மக்களுக்கு நினைவுறுத்தினார்: "இறைவாக்கினர் எலிசாவின் காலத்தில் இஸ்ரயேலரிடையே தொழு நோயாளர்கள் பலர் இருந்தனர்; ஆயினும் அவர்களுள் எவருக்கும் நோய் நீங்கவில்லை. சிரியாவைச் சார்ந்த நாமானுக்கே நோய் நீங்கியது” என்றார். (லூக்கா 4:27)

படைத்தலைவன் நாமான் குணமடைந்த நிகழ்வுக்கும், நாம் தற்போது சந்தித்துவரும் பத்து தொழுநோயாளர் குணடைந்த நிகழ்வுக்கும் ஒரு சில ஒப்புமைகள் இருப்பதால், தொழுநோயாளர் நாமான் நலமடைந்த நிகழ்வை சிறிது ஆழமாகச் சிந்திப்போம். "நாமான் புறப்பட்டுச் சென்று கடவுளின் அடியவரது வாக்கிற்கிணங்க யோர்தானில் ஏழுமுறை மூழ்கியெழ, அவர் நலமடைந்தார்" (2 அரசர்கள் 5:14) என்று இந்நிகழ்வில் கூறப்பட்டுள்ளது. ஆனால், இது, அவ்வளவு எளிதாக நிகழ்ந்துவிடவில்லை. படைத்தலைவன் நாமான், யோர்தான் நதிக்குச் செல்வதற்குமுன் நிகழ்ந்ததை, இவ்வாறு வாசிக்கிறோம்:

2 அரசர்கள் 5:9-14

நாமான் தம் குதிரைகளுடனும் தேருடனும் எலிசா வீட்டு வாயில்முன் வந்து நின்றார். எலிசா, “நீ போய் யோர்தானில் ஏழுமுறை மூழ்கினால், உன் உடல் நலம் பெறும்” என்று ஆளனுப்பிச் சொல்லச் சொன்னார்.

எனவே, நாமான் சினமுற்று வெளியேறினார். அப்பொழுது அவர், “அவர் என்னிடம் வந்து, என் அருகில் நின்று, தம் கடவுளாகிய ஆண்டவரின் பெயரைக் கூவியழைத்து, தொழுநோய் கண்ட இடத்தின்மேல் தம் கையை அசைத்துக் குணப்படுத்துவார் என்று நான் எண்ணியிருந்தேன். அபானா, பர்பார் என்ற தமஸ்கு நதிகள் இஸ்ரயேலில் உள்ள ஆறுகள் அனைத்தையும்விட மேலானவை அல்லவா? அவற்றில் மூழ்கி நான் நலமடைய முடியாதா?” என்று கூறி ஆத்திரமாய்த் திரும்பிச் செல்லலானார். அப்பொழுது அவருடைய வேலைக்காரர்கள் அவரை அணுகி, அவரிடம், “எம் தந்தையே! இறைவாக்கினர் இதைவிட அரிதான ஒன்றை உமக்குக் கூறிஇருந்தால், நீர் அதைச் செய்திருப்பீர் அல்லவா? மாறாக, ‘மூழ்கி எழும்; நலமடைவீர்’ என்று அவர் கூறும்போது அதை நீர் செய்வதற்கென்ன?” என்றனர். எனவே நாமான் புறப்பட்டுச் சென்று கடவுளின் அடியவரது வாக்கிற்கிணங்க யோர்தானில் ஏழுமுறை மூழ்கியெழ, அவர் நலமடைந்தார்.

படைத்தலைவன் நாமான், உடலளவில் நலமடைவதற்குமுன், அவரது ஆணவம், கோபம் என்ற பல நோய்களிலிருந்து அவர் நலம்பெற வேண்டியிருந்தது. தன் பணபலத்தைப் பயன்படுத்தி, தன் உடல்நலனை வாங்கிவிட முடியும் என்ற கற்பனையோடு சிரியா நாட்டிலிருந்து, இஸ்ரயேல் நாட்டிற்கு சென்ற நாமான், முற்றிலும் மாறவேண்டியிருந்தது. ஏறத்தாழ, அவர் மறுபடியும் பிறக்க வேண்டியிருந்தது என்றே சொல்லலாம். இதைத்தான், இப்புதுமையின் இறுதி வரி அழகாகச் சித்திரிக்கிறது. யோர்தானில் ஏழுமுறை மூழ்கியெழுந்த நாமானின் "உடல் சிறுபிள்ளையின் உடலைப்போல் மாறினது" (2 அர. 5:14) என்று வாசிக்கிறோம். அவர் யோர்தானுக்குச் செல்லும் முன்னரே, ஒரு குழந்தையைப்போல் தன் உள்ளத்தைப் பக்குவப்படுத்திக் கொண்டதால், ஒரு சிறு பிள்ளையைப் போன்ற உடலையும் அவரால் பெறமுடிந்தது. நாமானிடம் உருவான மாற்றங்கள் அழகானவை!

ஆணவத்தோடு, படைத்தலைவனாக, தன் வீட்டுக்கு முன் வந்து நின்ற நாமானைச் சந்திக்க மறுத்த இறைவாக்கினர் எலிசா, குழந்தை மனதோடு, சிறு பிள்ளையின் உடலோடு யோர்தானிலிருந்து திரும்பிவந்த நாமானைச் சந்திக்கிறார்.

நாம் சிந்தித்துவரும் புதுமையிலும், தன்னைச் சந்திக்க வந்திருந்த பத்து தொழுநோயாளர்களிடமும், “நீங்கள் போய் உங்களைக் குருக்களிடம் காண்பியுங்கள்” (லூக். 17:14) என்று இயேசு சொன்னார். அந்த பத்துபேரும், இயேசு தங்களை நெருங்கி, தங்கள் மேல் கரங்களை வைத்து குணமாக்குவார் என்று எதிர்பார்த்திருக்கலாம். அவர்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக, இயேசு தூரத்திலிருந்து கூறிய இச்சொற்கள், சிறிது ஏமாற்றத்தை உருவாக்கியிருக்கலாம். இருப்பினும், அவர்கள் புறப்பட்டுச் சென்றனர் என்பதை நற்செய்தியாளர் லூக்கா கூறியுள்ளார்.

அவர்கள் புறப்பட்டுச் சென்ற வேளையில், அவர்கள் உடலில் மட்டுமல்லாமல், உள்ளத்திலும் சில மாற்றங்கள் நிகழ்ந்தன. தொழுநோய் என்ற துன்பம், யூதர், சமாரியர் என்ற பாகுபாடுகளை மறந்து, இந்த பத்து நோயாளிகளை சேர்த்து வைத்தது என்பதை கடந்த தேடல்களில் சிந்தித்தோம். அதுவரை அவர்களை பிணைத்திருந்த துன்பம் விலகி, அவர்கள் நலமடைந்ததும், அவர்களிடையே மீண்டும் பாகுபாடுகள் நுழைந்தன என்பதை, நற்செய்தியாளர் லூக்கா இவ்வாறு பதிவு செய்துள்ளார்:

லூக்கா 17:14-16

அவர்கள் புறப்பட்டுப் போகும்போது அவர்கள் நோய் நீங்கிற்று. அவர்களுள் ஒருவர் தம் பிணி தீர்ந்திருப்பதைக் கண்டு உரத்த குரலில் கடவுளைப் போற்றிப் புகழ்ந்துகொண்டே இயேசுவிடம் திரும்பி வந்தார்; அவருடைய காலில் முகங்குப்புற விழுந்து அவருக்கு நன்றி செலுத்தினார். அவரோ ஒரு சமாரியர்.

நோயாளி என்ற ஒரே குலத்தில் இருந்த அவர்கள், நோய் நீங்கியதும் யூதர் என்றும், சமாரியர் என்றும் பிரிந்தனர். அவர்கள் மத்தியில் ஒரு சமாரியர் இருந்ததை அவர்கள் மீண்டும் உணர்ந்தனர். அந்தச் சமாரியரை மேலும், கீழும் பார்த்தனர். "நீங்கள் போய், உங்களைக் குருக்களிடம் காண்பியுங்கள்" என்று இயேசு சொன்னதை நினைத்துப் பார்த்தனர். குருக்களிடம் தாங்கள் போகும்போது, இந்தச் சமாரியனோடு போனால், மீண்டும் பிரச்சனைகள் வருமே. இது நாள் வரை அவர்களை விலக்கிவைத்த தொழுநோய் என்ற தீட்டோடு, ஒரு சமாரியனோடு அவர்கள் சேர்ந்திருந்தது மற்றொரு தீட்டாக மாறுமே என்ற எண்ணங்கள் அவர்கள் மனதில் எழுந்தன.

தொழுநோயுற்றபோது தன்னுடன் துன்பத்தில் இணைந்தவர்கள் மனதில் இப்போது வேற்றுமை எண்ணங்கள் வளர்ந்திருந்ததை அவர்களின் வெப்பப் பார்வையிலேயே அந்த சமாரியர் உணர்ந்திருக்கவேண்டும். அவராகவே அவர்களை விட்டு விலகுகிறார். அனால், அவருக்குள் ஒரு சின்ன கலக்கம். தன்னை இவ்வளவு அன்போடு குணமாக்கியவர், "குருக்களிடம் காட்டுங்கள்" என்று கட்டளையிட்டாரே. என்ன செய்யலாம்? என்ற கலக்கம் அது. அவரது மனதில் ஒரு தெளிவு பிறக்கிறது. தன்னை குணமாக்கியவரே தலைசிறந்த குரு. அவரிடமே சரண் அடைவோம் என்ற தெளிவோடு அந்தச் சமாரியர் இயேசுவிடம் திரும்பி வருகிறார். திரும்பிவந்த சமாரியரைக் கண்டதும் இயேசு எழுப்பிய கேள்வியிலும், திரும்பிவந்த சமாரியர் வழியாகவும், நாம் கற்றுக்கொள்ளக் கூடிய வாழ்க்கைப் பாடங்களை நாம் அடுத்தத் தேடலில் சிந்திப்போம்.

10 November 2020, 12:40