தேடுதல்

தாலந்தைப் பெற்றவர்கள் கணக்கு கொடுக்கும் காட்சி தாலந்தைப் பெற்றவர்கள் கணக்கு கொடுக்கும் காட்சி  

பொதுக்காலம் - 33ம் ஞாயிறு – ஞாயிறு சிந்தனை

நம் திறமைகளை புதைத்து விடாமல், பலருக்கும் பல மடங்காகப் பயன்தரும் வகையில் வாழ நாம் அழைக்கப்பட்டுள்ளோம். பயன்படுத்தாமல், புதைத்துவிடும் கொடைகளுக்கு நாம் கணக்கு கொடுக்கவேண்டும்.

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

பொதுக்காலம் - 33ம் ஞாயிறு – ஞாயிறு சிந்தனை

இருளை வெல்லும் ஒளியின் சக்தியைக் கொண்டாடும் தீப ஒளி திருநாளன்று, இந்தியாவையும், இந்த உலகையும் சூழ்ந்துள்ள கொள்ளைநோய் என்ற இருள் அகல வேண்டுவோம். அதைவிட குறிப்பாக, இந்தியாவை தற்போது ஆட்டிப்படைத்துவரும் சர்வாதிகாரம், பொய்மை, அநீதி ஆகிய இருளின் சக்திகள் நீங்கி, நலமிக்க மக்கள் ஆட்சி, உண்மை, நீதி, சமத்துவம் ஆகிய தீபங்களை ஏற்றுவதற்கு, நம் ஒவ்வொருவருக்கும் தேவையான மன உறுதியை இறைவன் வழங்கவேண்டுமென்று இந்த ஞாயிறு சிந்தனையின் துவக்கத்தில் மன்றாடுவோம்.

20 ஆண்டுகளுக்கு முன், அமெரிக்காவில் வெளியான ஒரு குட்டி விளம்பரத்தில் பின்வரும்வரிகள் காணப்பட்டன: "நீங்கள் தனிமையில் இருந்தாலோ, அல்லது உங்களுக்கு ஏதேனும் பிரச்சனைகள் என்றாலோ, தொலைபேசியில் என்னைக் கூப்பிடுங்கள். நான் ஒரு சக்கர நாற்காலியில் வாழ்கிறேன். அதனால், நான் எங்கும் வெளியில் செல்வதில்லை. நாம், எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் தொலைபேசியில் பேசலாம். கூப்பிடுங்கள்" என்ற அந்த விளம்பர வரிகளை வெளியிட்டவர், நான்சி என்ற இளவயது பெண். இந்த விளம்பரம், பலரின் கவனத்தை ஈர்த்தது. ஒவ்வொரு நாளும், குறைந்தது, ஆறு அல்லது ஏழு பேர், நான்சியை தொலைபேசியில் அழைத்து, தங்கள் பிரச்சனைகளைப் பகிர்ந்துகொண்டனர்.

நான்சி செய்து வந்த அற்புத பணியைக் குறித்து கேள்விப்பட்ட இவாஞ்செலிக்கல் சபை போதகரும், எழுத்தாளருமான, Tony Campolo அவர்கள், நான்சியைத் தேடிச்சென்றார். அவர் நான்சியிடம், "உங்களைச் சக்கர நாற்காலியில் முடக்கிப் போட்டது எது?" என்று கேட்டார். நான்சி சொன்ன பதில், அவரை அதிர்ச்சியடையச் செய்தது. "நான் தற்கொலை முயற்சி செய்தேன். அதனால், இப்போது, சக்கர நாற்காலியில் வாழ்கிறேன்" என்று ஆரம்பித்த நான்சி, தொடர்ந்து தன்னைப்பற்றி கூறினார்: "சிறுவயது முதல் நான் தனிமையில் துன்புற்றேன். எனக்கென்று நண்பர்கள் இல்லை. நான் செய்து வந்த வேலை எனக்குப் பிடிக்கவில்லை. ஒரு நாள் தற்கொலை செய்து கொள்ளும் முடிவுடன், நான் வாழ்ந்துவந்த அடுக்குமாடி கட்டடத்திலிருந்து கீழே குதித்தேன். என் உயிர் போகவில்லை, ஆனால், அந்த விபத்தால் என் இடுப்புக்குக் கீழ் உணர்விழந்து போனேன். நான் மருத்துவ மனையில் இருந்தபோது, இயேசு எனக்குத் தோன்றி, 'நான்சி, இதுவரை நீ முழு உடலோடும், முடமான மனதோடும் வாழ்ந்து வந்தாய். இனிமேல் நீ முடமான உடலோடு வாழப்போகிறாய். ஆனால், உன் மனம் இனி முழுமையடைந்துள்ளது' என்று சொல்லிச் சென்றதை நான் உணர்ந்தேன்" என்று அவர் கூறினார்.

தன்னைப்போல் தனிமையில் வாடும் பலருக்கு, தான் எவ்வகையில் உதவிகள் செய்ய முடியும் என்பதைச் சிந்தித்த நான்சி, இந்த விளம்பரத்தை வெளியிட்டார். வழக்கமாக சக்கர நாற்காலியில் இருப்பவர்கள், தன்னைக் கவனித்துக்கொள்ள ஆட்கள் தேவை என்று விளம்பரங்கள் கொடுக்க வாய்ப்புண்டு. ஆனால், நான்சியைப் பொருத்தவரை, உதவிகள் பெறுவதைவிட, தருவதையே அவர் தன் குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்து வருகிறார். சக்கர நாற்காலியில் இருந்தபடியே சரித்திரம் படைத்துள்ள, சாதனைகள் புரிந்துள்ள பலரைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அவர்களுக்கு சக்கர நாற்காலி ஒரு சிறையோ, அல்லது குறையோ அல்ல. மாறாக, மற்றவரின் குறை தீர்க்கும் ஒரு கருவியாக, அவர்கள், தங்கள் சக்கர நாற்காலி வாழ்வை வடிவமைத்துக்கொண்டனர்.

குறைகள், நிறைகள் இரண்டும் ஒவ்வொரு மனிதருக்கும் தரப்பட்டுள்ள கொடைகள். குறைகள், கொடைகளா? என்ற கேள்வி எழலாம். ஆம், குறைகளும் கொடைகள்தாம். குறைகளையும் நிறைகளாக மாற்றும் சக்தி நம் ஒவ்வொருவரிடமும் உள்ளது.

நம்மிடமுள்ள நிறைகளை, திறமைகளை எண்ணிப்பார்க்காமல், குறையைப் பெரிதுபடுத்தி, நம்மிடம் உள்ள மற்ற கொடைகளையும் பயன்படுத்தாமல் புதைத்து விடுகிறோமா என்ற கேள்வியை நம் மனதில் எழுப்புகிறது, இன்றைய நற்செய்தியில் கூறப்பட்டுள்ள  'தாலந்து உவமை'. நமக்குத் தரப்பட்டுள்ள கொடைகள் அனைத்திற்கும் நாம் கணக்கு கொடுக்க வேண்டியிருக்கும் என்பதையும் இவ்வுவமை நமக்கு இடித்துரைக்கிறது.

வழிபாட்டு ஆண்டின் இறுதியில் இருக்கும், நாம் கணக்கு வழக்குகளை முடித்து, கடவுளிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதை, இன்றைய நற்செய்தியின் ‘தாலந்து உவமை’ நமக்குத் நினைவுறுத்துகிறது.

‘கணக்கு-வழக்கு’ என்பது, நாம் பயன்படுத்தும் ஒரு பொதுவான சொற்றொடர். நமது வரவு-செலவு கணக்கு சரியாக இருந்தால், அங்கு வழக்கு தேவையில்லை. எப்போது கணக்கு சரிவர அமையாமல் இருக்கிறதோ, அங்கு கணக்கைவிட வழக்கு அதிகமாகிவிடும். இருவர் தங்கள் கணக்கை சரிவர ஒப்படைத்து, வழக்கு ஏதுமின்றி செல்வதையும், இறுதியில் வருபவர், கணக்கைச் சரிவர ஒப்படைக்காததால், வழக்கில் சிக்கிக்கொள்வதையும் இன்றைய நற்செய்தியில் காண்கிறோம்.

தாலந்து உவமை, மத்தேயு நற்செய்தியிலும், (25:14-30) லூக்கா நற்செய்தியிலும் (19:11-27) சொல்லப்பட்டுள்ளது. 'தாலந்துகள்' அல்லது 'திறமைகள்' என்ற சொல்லை, இருவேறு கண்ணோட்டங்களில் காண்பதற்கு, இவ்விரு நற்செய்தி பகுதிகளும் உதவியாக உள்ளன. மத்தேயு நற்செய்தியில், மூவரிடம் தாலந்துகள் தரப்படுகின்றன. ஒருவருக்கு ஐந்து, மற்றொருவருக்கு இரண்டு, மூன்றாம் ஆளுக்கு ஒன்று என்று 'அவரவர் திறமைகளுக்கு ஏற்ப' (மத்.25:15) பிரித்துத் தரப்படுகின்றன. லூக்கா நற்செய்தியில், பத்து பணியாளர்களிடம், பத்து 'மினா' நாணயங்கள் வழங்கப்படுகின்றன. (லூக்.19:13)

பத்து பணியாளர்களுக்கும் சமமான வாய்ப்புக்கள் வழங்கப்படுவதை லூக்கா நற்செய்தியில் கேட்கும்போது, மனதுக்குத் திருப்தியாக உள்ளது. ஆனால், இது நடைமுறை வாழ்வில் நாம் காணும் எதார்த்தம் அல்ல என்றும் நம் மனம் சொல்கிறது. வாழ்வில் நாம் அடிக்கடி சந்திக்கும் எதார்த்தத்தை, மத்தேயு நற்செய்தி சொல்வதுபோல் தெரிகிறது. ஒரே குடும்பத்தில் பிறந்து வளர்ந்தாலும், அவர்கள் மத்தியில் பல்வேறு திறமைகள், வெவ்வேறு அளவில் உள்ளன.

அத்துடன், மத்தேயு நற்செய்தியில் பயன்படுத்தப்பட்டுள்ள 'தாலந்து' என்ற நாணயத்தைக் குறிக்க, 'Talent' என்ற ஆங்கிலச் சொல் பயன்படுத்தப்படுகிறது. இச்சொல், இந்த உவமையைத் தாண்டி, பொதுவான முறையில் பயன்படுத்தப்படுவதை நாம் அறிவோம். நாணயம் என்ற பொருளைத் தாண்டி, 'Talent' என்ற சொல், ஒருவரது திறமையைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

'Talent' அல்லது, 'திறமை' என்ற சொல்லை, வெறும் அறிவுத்திறமை, கலைத்திறமை, விளையாட்டுத்திறமை என்ற ஒரு குறுகிய கோணத்தில் பார்க்காமல், ‘திறமை’ என்பதை பரந்துபட்ட கண்ணோட்டத்துடன் பார்த்தால், நம் அனைவருக்குமே பலவகைத் திறமைகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன என்பதைப் புரிந்துகொள்வோம். லூக்கா நற்செய்தியில் வழங்கப்பட்டுள்ள உவமை, இந்த உண்மையைத்தான் வலியுறுத்துகிறது. ஒவ்வொருவரும், ஒவ்வொருச் சூழலில், ஒவ்வொரு வகையில் திறமை பெற்றவர்கள் என்பதை எடுத்துச்சொல்ல நாம் அடிக்கடி பயன்படுத்தும் ஒரு கதை, படகோட்டியும், இலக்கிய மேதையும் ஆற்றில் பயணம் மேற்கொள்ளும் கதை.

இலக்கியங்களைக் கரைத்துக் குடித்திருந்த அந்த மேதை, எந்த ஓர் இலக்கியத்தையும் படிக்காத படகோட்டி, தன் வாழ்வில் பாதியை இழந்துவிட்டாரே என்று பரிதாபப்பட்டார். ஆற்றின் நடுவே, படகு, சுழலில் சிக்கிய வேளையில், நீச்சல் தெரியாமல் தத்தளித்த மேதையைக் கண்டு, படகோட்டி, அவர், தன் வாழ்வு முழுவதையும் இழக்கப் போகிறாரே என்று பரிதாபப்பட்டார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் திறமை பெற்றுள்ளோம் என்பதை வலியுறுத்தும் அழகான கதை இது.

திறமைகள் பலவகை. திறமைகள் என்ற பெயரில், ஊடகங்கள் காட்டும் போட்டிகளாலும், விளையாட்டுத்துறை உருவாக்கியுள்ள அனைத்துப் போட்டிகளாலும், வெளிப்படையாக, பலரையும் பிரமிக்க வைக்கும் வண்ணம் காட்டப்படும் திறமைகளையே நாம் பெரும்பாலும் 'திறமைகள்' என்று முத்திரை குத்தி, அதன் விளைவாக, நம்மில் பலர் துன்புறுகிறோம். இந்தத் திறமைகள் நம்மிடம் இல்லையே என்ற ஏக்கத்தில்; நம்மிடம் உள்ளவை திறமைகள்தானா என்ற தயக்கத்தில்; மற்றவர்களுக்கு இந்தத் திறமைகள் அதிகம் உள்ளனவே என்ற பொறாமையில்; நம்மிடம் உள்ளத் திறமைகளை, நமக்கென்று இறைவன் சிறப்பாக வழங்கியுள்ள கொடைகளை நாம் சரிவர பயன்படுத்தாமல் புதைத்துவிடுகிறோம். இன்றைய நற்செய்தியை வாசிக்கும்போது, புதைக்கப்பட்ட ‘தாலந்தை’ப் பற்றியே அதிகமான எண்ணங்கள் எழுகின்றன.

தாலந்தைப் பெற்றவர்கள் கணக்கு கொடுக்க வரும்போது, அவர்கள் சொல்லும் கூற்றுகள், நம் சிந்தனையைத் தூண்டுகின்றன. 5 தாலந்துகளையும், 2 தாலந்துகளையும் பெற்றவர்கள், தங்களுக்குத் தரப்பட்ட கொடைகளைப் பற்றியும், அவற்றை தாங்கள் எவ்வாறு பயன்படுத்தினர் என்பதைப் பற்றியும் பேசுகின்றனர். ஒரு தாலந்தைப் பெற்றவரோ, தனக்கு அளிக்கப்பட்ட கொடையைப்பற்றி பேசவில்லை. மாறாக, அந்தக் கொடையைத் தந்தவரைப்பற்றி குறை கூறுகிறார்:

“ஐயா, நீர் கடின உள்ளத்தினர்; நீர் விதைக்காத இடத்திலும் போய் அறுவடை செய்பவர்; நீர் தூவாத இடத்திலும் விளைச்சலைச் சேகரிப்பவர் என்பதை அறிவேன். உமக்கு அஞ்சியதால் நான் போய் உம்முடைய தாலந்தை நிலத்தில் புதைத்து வைத்தேன். இதோ, பாரும், உம்முடையது.” (மத்தேயு நற்செய்தி 25: 24-25) என்ற சொற்களைக் கேட்கும்போது, வாழ்வில், நாம் பெற்றுள்ள பல கொடைகளை மறந்துவிட்டு, அல்லது, மறுத்துவிட்டு, கடவுளை, எத்தனை முறை குறை கூறியிருக்கிறோம் என்பதை எண்ணிப்பார்க்கலாம்.

நாம் ஒவ்வொருவரும், தனிப்பட்டத் திறமை உடையவர்கள். நமது குறைகளையும் திறமைகளாக மாற்றும் வழிகள் உண்டு. நம் திறமைகளையும், கொடைகளையும் புதைத்து விடாமல், பலருக்கும் பல மடங்காகப் பயன்தரும் வகையில் வாழவே நாம் அழைக்கப்பட்டுள்ளோம். பயன்படுத்தாமல், புதைத்துவிடும் நம் கொடைகளுக்கு நாம் வாழ்வின் இறுதியில் கணக்கு கொடுக்கவேண்டும். 'தாலந்து உவமை' வழியே, உன்னதமான இவ்வுண்மைகளை நமக்குச் சொல்லித்தரும் இயேசுவுக்கு நாம் நன்றி சொல்வோம். இவ்வுண்மைகளை வாழ்வாக்க முயல்வோம்.

இறுதியாக, இஞ்ஞாயிறன்று நாம் சிறப்பிக்கும் வறியோரின் உலக நாள் பற்றிய ஒரு சில எண்ணங்களுடன் நம் சிந்தனைகளை நிறைவுசெய்வோம். கத்தோலிக்கத் திருஅவையில் நான்காவது முறையாகச் சிறப்பிக்கப்படும் இந்த உலகநாளுக்கென திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செய்தியொன்றை வெளியிட்டிருந்தார். "ஏழைக்கு உன் கரத்தை நீட்டு" (சீராக் 7:32) என்ற தலைப்பில், திருத்தந்தை வழங்கியுள்ள இச்செய்தியின் ஒரு சில வரிகளுடன் நம் சிந்தனைகளை இன்று நிறைவு செய்வோம்:

"கரங்களை நீட்டுவது, நம் ஒவ்வொருவரோடும் கூடப்பிறந்த ஒரு திறமை. அதுவே வாழ்வுக்கு பொருள் தருகிறது. ஒவ்வொருநாள் வாழ்விலும், எத்தனையோ நீட்டப்பட்ட கரங்களை நாம் காண்கிறோம். ஆனால், அக்கறையற்ற மனநிலை என்ற சூறாவளி நம்மை விழுங்கிவிடும் வகையில் நம் வாழ்வு மிகத் துரிதமாகச் செல்வது, வேதனையான உண்மை. மிகப்பெரிய அளவில் ஏதாவது ஒன்று, நம் வாழ்வைப் புரட்டிப்போடும் வேளையில், நாம் 'பக்கத்துவீட்டு புனிதர்களின்' நன்மைத்தனத்தைப் பார்க்கிறோம்.

"நீட்டப்பட்ட கரம், அன்பின் அடையாளம். கடந்த மாதங்களில், வேதனை, மரணம் விரக்தி ஆகியவற்றைக் கொணர்ந்த ஒரு கிருமிக்கு, இவ்வுலகம் இரையானபோது, எத்தனையோ கரங்கள் நீட்டப்பட்டதை நாம் கண்டோம்! நோயுற்றோரைப் பேண, மருத்துவர்களும், நேரம் கருதாமல் உழைத்த தாதியரும் நீட்டிய கரங்கள். மக்கள் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள், தங்கள் உயிரையும் பணயம் வைத்து மருந்து கொடுத்தவர்களின் கரங்கள். மக்களுக்கு ஆசீரும் ஆறுதலும் வழங்க நீண்ட அருள்பணியாளரின் கரங்கள். வீதிகளில் வாழ்வோருக்கும், வீடுகள் இருந்தாலும், அவற்றில் உணவின்றி அடைபட்டிருந்தோருக்கும், உணவு வழங்கிய தன்னார்வத் தொண்டர்களின் கரங்கள்.... இவ்வாறு, அடுத்தவரை நோக்கி நீண்ட கரங்கள் ஆயிரமாயிரம். நோய் தொற்று என்ற அச்சத்தை எதிர்த்து, பிறரை நோக்கி நீண்ட இக்கரங்கள், ஆறுதலையும், ஆதரவையும் கொணர்ந்தன."

இந்தக் கொள்ளைநோய் காலத்தில், அடுத்தவரை நோக்கி, குறிப்பாக, வறியோரை நோக்கி நீளும் இந்த பரிவுக் கரங்களுக்காக நாம் இறைவனுக்கு நன்றி சொல்வோம். அதே வேளையில், இந்தக் கொள்ளைநோயை, தங்களுக்குச் சாதகமாக்கிக்கொண்டு, அநீதிகள் என்ற இருளைப் பரப்பிவரும் உலகத்தலைவர்கள், குறிப்பாக, இந்தியத் தலைவர்கள், தங்கள் உள்ளத்தைச் சூழ்ந்திருக்கும் இருளிலிருந்து வெளியேறி, மக்களுக்கு ஒளிமிக்க வாழ்வை உருவாக்கவேண்டும் என்று மன்றாடுவோம்.

14 November 2020, 14:58