தேடுதல்

பங்களாதேஷ் பிரதமர் Sheikh Hasina வுடன் ஆயர்கள் பங்களாதேஷ் பிரதமர் Sheikh Hasina வுடன் ஆயர்கள் 

பங்களாதேஷில் கோவிட்-19 நிதிக்கு ஆயர்கள் உதவி

பங்களாதேஷ் அரசு, Rohingya புலம்பெயர்ந்த மக்களுக்கு ஆற்றிவரும் உதவிகளுக்கு அந்நாட்டு ஆயர்கள், பிரதமருக்கு நன்றி தெரிவித்தனர்.

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

பங்களாதேஷ் நாட்டின் கத்தோலிக்க ஆயர்கள், அந்நாட்டு பிரதமர் Sheikh Hasina அவர்களைச் சந்தித்து, அந்நாட்டில் சிறுபான்மை இனத்தைச் சார்ந்தவர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளைக் களைவதற்கு உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டனர்.

பங்களாதேஷ் கர்தினால் பாட்ரிக் டி ரொசாரியோ, திருப்பீட தூதர் பேராயர் ஜார்ஜ் கொச்சேரி ஆகியோர் உள்ளிட்ட, ஆயர்கள் பிரதிநிதிகள் குழு ஒன்று, டாக்கா நகரிலுள்ள     Ganabhaban அதிகாரப்பூர்வ அலுவலகத்தில் பிரதமரை, 35 நிமிடங்கள் சந்தித்து, அந்நாட்டில் கிறிஸ்தவர்களின் நிலைப்பாட்டை எடுத்துரைத்தது.

அந்நாட்டில் கிறிஸ்தவர்கள், அடக்குமுறைகளோடு வாழவேண்டிய நிலையில் உள்ளனர் என்று கூறிய ஆயர்கள், பங்களாதேஷ் அரசு, Rohingya புலம்பெயர்ந்த மக்களுக்கு ஆற்றிவரும் உதவிகளுக்கு நன்றி தெரிவித்தனர், அதேவேளை, அந்த மக்களுக்கு, தங்களின் காரித்தாஸ் அமைப்பு தொடர்ந்து உதவி வருவதையும் ஆயர்கள் குறிப்பிட்டனர்.

பங்களாதேஷில், கோவிட்-19 நோயாளிகள் பராமரிப்புக்கென்று உருவாக்கப்பட்டுள்ள பிரதமரின் நிதிக்கு, ஏறத்தாழ அறுபதாயிரம் டாலர்களை வழங்கியதோடு, தேவையில் இருக்கும் எந்த ஒரு சூழலிலும், பிரதமருக்கு உதவுவதற்கு கிறிஸ்தவர்கள் எப்போதும் தயாராக உள்ளனர் என்பதையும், பிரதமர் Hasina அவர்களிடம், ஆயர்கள் கூறினார்.

நவம்பர் 6ம் தேதி முதல் 10ம் தேதி வரை, பங்களாதேஷின் தந்தையான Sheikh Mujibur Rahman அவர்கள் கல்லறை இருக்கும் இடம் உட்பட, அந்நாட்டின் வரலாற்றில் முக்கியத்துவம் பெற்ற இடங்களைப் பார்வையிட்டபின், ஆயர்கள் குழு பிரதமரைச் சந்தித்துள்ளது. 

பிரதமர் Sheikh Hasina அவர்கள், Mujibur Rahman (1920-1975) அவர்களின் மகள் ஆவார். (AsiaNews)

14 November 2020, 14:58