தேடுதல்

திருத்தந்தை புனித முதலாம் ஜூலியஸ் கட்டிமுடித்த,  Trastevereன் புனித மரியா பேராலயம் திருத்தந்தை புனித முதலாம் ஜூலியஸ் கட்டிமுடித்த, Trastevereன் புனித மரியா பேராலயம் 

திருத்தந்தையர் வரலாறு - நீதிக்கான போராட்டமும் வெற்றியும்

பேரரசரின் சலுகைகளும், பரிசுகளும் தேவையில்லை. இறைவனின் நீதி நிலை நாட்டப்படவேண்டும் என்பதே எனக்கு முக்கியம், என்றவர் திருத்தந்தை லிபேரியுஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

336ம் ஆண்டு ஏறத்தாழ பத்து மாதங்களே பதவி வகித்த திருத்தந்தை மார்க் இறந்தபின், தொடர்ந்து நான்கு மாதங்கள் திருப்பீடத்தின் தலைமைப்பதவி காலியாகவே இருந்தது. நான்கு மாதங்கள்வரை புதிய திருத்தந்தை ஏன் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதற்கு வரலாற்றில் எவ்வித காரணங்களும் சொல்லப்படவில்லை. 337ம் ஆண்டு பெப்ரவரி 6ம் தேதி புனித முதலாம் ஜூலியஸ், திருஅவையின் 35வது திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பதவியேற்ற மூன்று மாதங்களில், பேரரசர் கான்ஸ்டன்டைன் மரணமடைந்து, அவர் மகன் இரண்டாம் கான்ஸ்டன்டைன் பேரரசரானார். ஏற்கனவே அலெக்சாந்திரியாவிலிருந்து, எதிர்ப்பாளர்களால் வெளியேற்றப்பட்டிருந்த ஆயர் அத்தனாசியுஸ், தன் சொந்த மறைமாவட்டம் திரும்பலாம் என, இப்பேரரசர் வழிவகை செய்தார். ஆனால், இவ்வாயரின் எதிர்ப்பாளர்களோ, Pistus என்பவரை அலெக்சாந்திரியாவின் ஆயராக நியமித்ததால், திருஅவைக்குள் குழப்பம் நிலவியது. இதற்கு தீர்வுகான திருத்தந்தை ஜூலியஸ் ஆயர் மாநாட்டைக் கூட்டினார். ஆனால், ஆயர் Eusebius என்பவரின் கீழ் இயங்கிய எதிர்ப்பு ஆயர்கள் இம்மாநாட்டை புறக்கணித்தனர். இருப்பினும் இப்பிரச்சனையை ஏனைய ஆயர்களுடன் தீவிரமாக ஆராய்ந்த திருத்தந்தை ஜூலியஸ், ஆயர் அத்தனாசியுஸே அலெக்சாந்திரியாவின் ஆயர் என அறிவித்தார். ஆனாலும், எதிராளிகள் இதனை ஏற்பதாக இல்லை. இதற்கிடையில் பேரரசர் இரண்டாம் ConstantineI, அவருடைய சகோதரர் Constans தோற்கடித்து பெரும் பகுதிக்கும் தானே ஆட்சியாளரானார். இன்னொரு சகோதரரான constantius கீழைப் பகுதிகளின் பேரரசராக இருந்ததால், இருவரும் சேர்ந்து அலெக்சாந்திரியா பகுதி ஆயர்களுடன் பேசி, ஆயர் மாநாட்டிற்கு ஏற்பாடு செய்ய முயன்றனர். அதுவும் தோல்வியிலேயே முடிந்தது. இந்நேரத்தில், ஆயர் Pistus அவர்கள் நீக்கப்பட்டு, அந்த இடத்தில் ஆயராக செயல்பட்ட George என்பவர் இறந்த பின்னரே, திருத்தந்தையின் ஆதரவுபெற்ற ஆயர் அத்தனாசியுஸ், அலெக்சாந்திரியாவில் மீண்டும் ஆயராகப் பெறுப்பேற்க முடிந்தது. நம் திருத்தந்தை ஜூலியஸின் காலத்தில், உரோமையில் இன்றும் பிரபலமாக இருக்கும் இரு பேராலயங்கள், அதாவது, Trastevereapன் புனித மரியா பேராலயமும். பன்னிரண்டு திருத்தூதர்கள் பேராலயமும கட்டப்பட்டன. 352ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12ந்தேதி திருத்தந்தை ஜூலியஸ் இறந்தபோது, முதலில் அவர் உடல் Calepodius அடிநிலக் கல்லறைத் தோட்டத்தில் புதைக்கப்பட்டு, பின்னர், அவர் கட்டிய புனித மரியா பேராலயத்திற்கு மாற்றப்பட்டது.

திருத்தந்தை ஜூலியஸின் மறைவுக்குப்பின் ஒரு மாதத்தில், அதாவது மே மாதம் 17 அல்லது 22ந்தேதி திருத்தந்தையாக திருநிலைப்படுத்தப்பட்டார் லிபேரியுஸ். 22ந்தேதி அவர் திருநிலைப்படுத்தப்பட்டதாக திருஅவை வரலாற்று ஏடு கூறுகிறது. ஆனால், அக்காலத்தில் ஞாயிறன்றே இந்த திருவழிபாட்டுச் சடங்குகள் நடத்தப்பட்டதாலும், 17ந் தேதிதான் ஞாயிறு என்பதாலும், மே17ம் தேதி இவர் திருநிலைப்படுத்தப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. இந்த திருத்தந்தையின் பணி காலத்திலும் ஆயர் புனித அத்தனாசியுஸ் குறித்த பிரச்சனைகள் பெரிய  அளவில் தலைதூக்கின. இதனால் பேரரசர்  Constantiusக்கும், திருத்தந்தைக்கும் இடையே மோதல்  பிறந்தது. புனித அத்தனாசியுஸ்க்கு எதிரான பேரரசரின் திணிப்பு செல்லாது என்றார் திருத்தந்தை. மிலான் நகரிலிருந்து பேரரசர் அனுப்பிய பரிசுப் பொருட்களையும் ஏற்க மறுத்தார். இதனால் கோபமடைந்த பேரரசர், உரோமை அதிகாரிக்கு செய்தி அனுப்பி, திருத்தந்தையை இரகசியமாகவோ, பலவந்தமாகவோ அரச நீதிமன்றத்திற்கு கொணரப்பட கட்டளையிட்டார். திருத்தந்தையும் மிலான் நகர பேரரசரின் முன் இழுத்து வரப்பட்டார். அவர் பயப்படவில்லை. நெஞ்சுறுதியுடன் நின்றார். நாடு கடத்தப்படவும் தான் தயாராக இருப்பதாக அவர் கூறினார். பேரரசருக்கும் திருத்தந்தைக’கும் இடையே நடந்த வாக்குவாதம், அங்கிருந்தவர்களால் வரிவிடாமல் எழுதி பாதுகாக்கபபட்டுள்ளது. அன்றைய மனோகரா திரைப்படத்தின் வசனங்களை ஒத்ததாக அது இருப்பதாகக்கூட கூறலாம்.

அத்தனாசியுஸுக்கு ஆதரவாக, இவ்வுலகத்திற்கு எதிராக எழுந்து நிற்கும் நீ யார்? என கேட்கிறார் பேரரசர்.

நம் திருத்தந்தை, பழைய ஏற்பாட்டு நிகழ்வுகளை நினைவூட்ட விரும்பி, ஏற்கனவே பேரரசுக்கு எதிராக மூவர் எழுந்து நின்றனர்” என்கிறார்.

உடனே, மன்னரின் காலடியில் இருந்த ஒருவர், திருத்தந்தையை நோக்கி “என்ன மன்னனை நெபுகத்னேசருக்கு ஒப்பிடுகிறாயா? என கேள்வி எழுப்புகிறார்.

திருத்தந்தையோ அவரை நோக்கி, நான் கூறவில்லை. நீங்கள்தாம் அப்பாவிகளை நோக்கி தீர்ப்படுகிறீர்கள்” என்கிறார்.

பேரரசர் திருத்தந்தையை நோக்கி, “நான் சொல்கிறபடி ஆணையில் கையெழுத்திட்டால் உம்மை உரோம் நகருக்கு திருப்பி அனுப்புகிறேன்.” என கூற,

திருத்தந்தையோ, “நான் ஏற்கனவே உரோமிலிருந்து விடைபெற்று வந்துவிட்டேன். உரோமில் தங்கியிருப்பதைவிட, திருஅவையின் சட்டங்கள் பாதுகாக்கப்படவேண்டியது மேலானவை” என பதிலளித்தார்.

இவ்வாறு உரையாடல் வெகு சுவையாகத் தொடர்ந்தது. மன்னர், மூன்று நாட்கள் கொடுத்து சிந்திக்கும்படி திருத்தநதையிடம் கூறினார். நிறைய பரிசுப்பொருட்களை அவர் தங்கியிருந்த இடத்திற்கு அனுப்பி வைத்தார். நீதியைத் தவிர வேறு எதற்கும் பணியமாட்டேன் என மறுத்துவிட்டார் திருத்தந்தை லிபேரியுஸ். மன்னரும் விட்டுக்கொடுக்கவில்லை. இன்னொருவரை திருத்தந்தையாகத் தேர்வு செய்யும்படி பணித்தார். மன்னரின் ஆதரவாளர்கள் சேர்ந்து Felix என்பவரை திருத்தந்தையாகத் தேர்வு செய்தனர். ஆனால் மன்னர் நினைத்தபடி எதுவும் நடக்கவில்லை. பெரும்பான்மை ஆயர்கள் Felix என்பவரை திருத்தந்தையாக ஏற்கவில்லை. விசுவாசிகள் அனைவரும் ஒன்றுசேர்ந்து, “எங்களின் திருத்தந்தை லிபேரியுஸே” என அறிவித்தனர். 357ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தேதி மிலானிலிருந்து உரோம் நகரை சந்திக்க வந்த பேரரசர் Constantius, மக்களின் மனநிலையை நேரடியாகப் பார்த்தார். திருத்தந்தை லிபேரியுஸ் மீது மக்கள் வைத்திருந்த மதிப்பைக் கண்டார். திருஅவைக்குள் தன் பிடியை அதிகரிக்க விரும்பிய மன்னருக்கு அதற்கு நேர் எதிரான விளைவுகளே கிடைத்தன. மன்னர், இறைவனின் திட்டங்களுக்கு எதிராகச் செல்ல முடியவில்லை. இரண்டு திருத்தந்தைகளும் ஆட்சி புரியட்டும் என்ற பேரரசரின் பரிந்துரையையும் உரோம் மக்கள் தூக்கி எறிந்து, Felixஐ வெளியேற்றினர். இரண்டு ஆண்டுகள் உரோமைக்கு வெளியே இருந்த திருத்தந்தை லிபேரியுஸ், 357ம் ஆண்டு இறுதியில் உரோம் நகர் திரும்பி மீண்டும் பொறுப்பேற்றார். அதன்பின் ஒன்பது ஆண்டுகள், அதாவது 366 வரை பதவி வகித்து இறைபதம் சேர்ந்தார் திருத்தந்தை லிபேரியுஸ்.

திருச்சபைக்காக, அநீதிகளை எதிர்த்துப் போராடி, பல துன்பங்களை அனுபவித்து பின்னர் வெற்றியும் கண்ட ஒரு திருத்தந்தையின் வரலாற்றைக் கேட்டீர்கள். வரும் வாரம் திருத்தந்தை தமாசுஸ் அவர்களுடன் நம் பயணத்தை தொடர்வோம்.

04 November 2020, 15:21