தேடுதல்

Vatican News
திருத்தந்தை செலஸ்டினால் சீரமைக்கப்பட்ட புனித சபீனா கோவில் திருத்தந்தை செலஸ்டினால் சீரமைக்கப்பட்ட புனித சபீனா கோவில்   (Vatican Media)

திருத்தந்தையர் வரலாறு - உறுதியான நிலைப்பாடு

துவக்ககால திருஅவை வரலாற்றில் 64வது திருத்தந்தையாக இருந்த முதலாம் கிரகரி அவர்களின் புகழுக்கு அடுத்ததாக, திருத்தந்தை பெரிய லியோ அவர்களின் புகழைக் குறிப்பிடலாம்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

மிலான் நகரின் பேராயராக இருந்த புனித அம்புரோசுடன், திருத்தொண்டரான செலஸ்டின் என்பவர் சிலகாலம் வாழ்ந்து வந்தார். அந்த காலத்தில்தான் திருஅவைக்குள் பெரும்போராட்டமே நடந்துகொண்டிருந்தது. அதாவது, ஒரு திருத்தந்தைக்கு எதிராக, மற்றொரு திருத்தந்தை, பேரரசரின் தலையீடு, புதிய பேரரசருடன் பகைமை, திருத்தந்தை, உரோம் நகரிலிருந்து வெளியேற்றப்படல் என, ஒரு குழப்பநிலை இடம்பெற்றுக் கொண்டிருந்தக் காலம் அது. திருஅவையின் பெரும் புனிதர்கள் அம்புரோஸும், அகுஸ்தினும் மிலான் நகரிலிருந்து இவற்றையெல்லாம் கவனித்துக்கொண்டிருக்க, புனித அம்புரோஸின் கீழ் சிறிது காலம் பணியாற்றிக் கொண்டிருந்தார் செலஸ்டின் என்ற திருத்தொண்டர். 422ம் ஆண்டு திருத்தந்தை போனிபாஸ் இறந்தபோது, புதிய திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்டார் செலஸ்டின். 9ஆண்டுகள் பத்து மாதம் 16 நாட்கள் இவரின் தலைமைப்பணி தொடர்ந்தது. ஏற்கனவே, திருத்தந்தை போனிபாஸுக்கு எதிராக பல்வேறு நிலைப்பாடுகள் திருஅவைக்குள் நிலவிவந்தாலும், திருத்தொண்டர் செலஸ்டின், உரோமை ஆயராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு எவ்வித எதிர்ப்பும் இருக்கவில்லை. எத்தனை பிரச்சனைகள் வந்தாலும், அத்தனையையும், சாந்தமுடனும், உறுதியுடனும், எதிர்கொண்டார், இத்திருத்தந்தை. இவரின் பணிகளுள் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியது என்னவெனில், புனித பேட்ரிக்கை அயர்லாந்துக்கு மறைப்பணியாற்ற அனுப்பியதாகும். ஆனால், புனித பேட்ரிக் அயர்லாந்து சென்றடையும் முன்னரே, திருத்தந்தை செலஸ்டின், 432ம் ஆண்டு ஜூலை மாதம் 26ம் தேதியே இறந்துவிட்டார். எனினும், இத்திருத்தந்தையின் திட்டத்தாலேயே அயர்லாந்து முழுவதும் புனித பேட்ரிக் வழியாக, கிறிஸ்தவ மறையைத் தழுவியது. உரோம்நகரின் Trastevere எனுமிடத்திலுள்ள புனித மரியன்னை கோவில், புனித சபீனா கோவில் ஆகியவைகளை சீர்செய்ததும், புனித பிரிசில்லா கல்லறைத்தோட்டத்தை வண்ண ஓவியங்களால் அழகுபடுத்தியதும் திருத்தந்தை புனித முதலாம் செலஸ்டின் அவர்களே.

திருத்தந்தை புனித முதலாம் செலஸ்டின் அவர்களின் மறைவுக்குப்பின் 432ம் ஆண்டு ஜூலை மாதம் 31ம் தேதி திருத்தந்தையாக பொறுப்பேற்றுக்கொண்டவர் திருத்தந்தை புனித 3ம் சிக்ஸ்துஸ். இவர் திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்னரே உரோமைய அருள்பணியாளர்களிடையே பிரபலமானவராகவும், புனித அகுஸ்தினாருடன் நெருங்கிய தொடர்புடையவராகவும் இருந்தார். திருஅவையின் போதனைகளுக்கு எதிராக எழுப்பப்பட்ட பல்வேறு தப்பறைகளை சாதுர்யமாக முறியடித்தார் திருத்தந்தை 3ம் சிக்ஸ்துஸ். இன்று புனித மேரி மேஜர் என்றழைக்கப்படும், அன்றைய லிபெரியஸ் பசிலிக்காவை புதுப்பித்ததோடு, புனித இலாரன்ஸ் பசிலிக்காவையும் விரிவாக்கினார் இவர். புனித பேதுரு பசிலிக்கா பெருங்கோவில், மற்றும், இலாத்தரன் பசிலிக்கா பெருங்கோவிலுக்கென பேரரசர் மூன்றாம் வேலன்டினியனிடமிருந்து நிறைய கொடைகளையும் பெற்றார் திருத்தந்தை புனித 3ம் சிக்ஸ்துஸ். ஏறக்குறைய எட்டு ஆண்டுகள் திருஅவையை வழிநடத்தியபின் 440ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்19ம் தேதி இறைபதம் சேர்ந்தார் இவர்.

440ம் ஆண்டு திருஅவையின் 45வது திருத்தந்தையாக பொறுப்பேற்றார் புனித பெரிய லியோ (சிங்கராயர்). துவக்ககால திருஅவை வரலாற்றில் 64வது திருத்தந்தையாக இருந்த முதலாம் கிரகரி அவர்களின் புகழுக்கு அடுத்ததாக, திருத்தந்தை புனித பெரிய லியோ அவர்களின் புகழைக் குறிப்பிடலாம். முந்தையத் திருத்தந்தை இறந்தபோதும், புதிய திருத்தந்தைக்கான தேர்தல் நடந்தபோதும், புனித பெரிய லியோ அவர்கள், உரோம் நகரிலேயே இல்லை. பிரான்ஸ், பெல்ஜியம், மேற்கு ஜெர்மனி, வட இத்தாலி ஆகியவைகளை இணைத்த Gaul என்ற பகுதியில் இருந்தார். பேரரரசர் மூன்றாம் வேலன்டினியன் கேட்டுக்கொண்டதன்பேரில், Gaul பகுதி இராணுவத் தலைவர்களுக்கும், நீதிபதிகளுக்கும் இடையே அமைதியை உருவாக்கும் பணியில் ஈடுபட அங்கு சென்றிருந்தார் புனித முதலாம் லியோ. இவர் தேர்ந்தெடுக்கப்பட்டு உரோம் நகர் திரும்பியபின், செப்டம்பர் 29ல், அதாவது, முந்தைய திருத்தந்தை இறந்த 40 நாட்களுக்குப் பின்னரே, உரோமை ஆயராக திருநிலைப்படுத்தப்பட்டார். மேற்கத்திய பேரரசுகள் சிறிது சிறிதாக உடைந்தும், திருஅவை சட்டங்களில் கீழை வழிபாட்டுமுறை திருஅவைகள் முரண்பாடுகளை கண்டுகொண்டும் இருந்த காலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட திருத்தந்தை பெரிய லியோ அவர்கள், உரோமையld திருஅவையை மட்டுமல்ல, அகில உலகத் திருஅவையையும் திறம்பட வழிநடத்தியவர். 21 ஆண்டுகள் இடம்பெற்ற இவரின் திருத்தந்தைப் பணியில், திருஅவைக்குள் ஒன்றிப்பைக் கட்டிக்காப்பதே இவரின் தலையாய நோக்கமாக இருந்தது.

திருஅவையின் படிப்பினைகளுக்கு எதிராக, தவறான படிப்பினைகளை பின்பற்றியவர்களை மனந்திருப்பி, மீண்டும் திருஅவைக்குள் இணைத்துக்கொண்டார், திருத்தந்தை பெரிய லியோ. மனந்திரும்ப மறுத்தவர்கள், பேரரசரின் ஆணையின்பேரில், நீதிமன்றத்தால் உரோம் நகரிலிருந்தே வெளியேற கட்டளையிடப்பட்டனர். திருஅவையின் படிப்பினைகளுக்கு எதிரான கருத்துக்களை பரப்பிவந்த மனிக்கீயன்ஸ் (Manichaens)  என்ற அடிப்படைவாதக் குழுவுக்கு எதிராக, திருத்தந்தையின் தூண்டுதலின் பேரில், பேரரசர் 3ம் வலந்தினியன் ஏழு தண்டனைகளை பிறப்பித்தார். திருஅவை படிப்பினைகளை பாதுகாத்தால் மட்டும் போதாது, திருஅவை அதிகாரிகளும் ஒழுக்கநெறி வாழ்வை மேற்கொள்ளவேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தார் இத்திருத்தந்தை. இதனை ஒரு கட்டளையாகவே உலகின் அனைத்துப்பகுதி திருஅவைகளுக்கம் அனுப்பினார்

திருத்தந்தை பெரிய லியோ. இவர் எழுதி வெளியிட்ட ஏடுகள், இவரை ஒரு பெரும் அறிவாளியாக, ஞானம் நிறைந்தவராக, ஊக்கமூட்டும்  உறுதியுடையவராக வெளிப்படுத்தி நிற்கின்றன. மேற்குலக, மற்றும், கீழைவழிபாட்டுமுறை திருஅவைகளில் அதிக கவனம் செலுத்தி வந்தாலும், உரோமைத் திருஅவையை இவர் அநாதையாக விட்டுவிடவில்லை.  Huns என்ற நாடோடி இனத்தின் தலைவர் Attila என்பவரால் 452ல் வடஇத்தாலி சூறையாடப்பட்டபோது, அவரின் படைகள் உரோம்நகரை நெருங்காவண்ணம் தன் அமைதி முயற்சிகளைப் பயன்படுத்தி வெற்றி கண்டார், திருத்தந்தை பெரிய லியோ. பேரரசர் கேட்டுக்கொண்டதற்கிணங்க, திருத்தந்தை, வடஇத்தாலிக்கு பயணம் செய்து, Attilaவை சந்தித்து, அவரை, இத்தாலியைவிட்டு வெளியேற வைத்தார். மேலும், இன்னுமொரு உதவியையும் பேரரசருக்காகவும், உரோமை மக்களுக்காகவும் ஆற்றினார் திருத்தந்தை பெரிய லியோ. Vandals என்ற ஜெர்மானிய இனத்தின் தலைவரான Genseric, உரோம் நகரைக் கைப்பற்றி, இருவாரமாக அட்டூழியம் புரிந்ததைத் தொடர்ந்து, மக்களுக்கு எவ்வித ஆபத்தும் விளைவிக்கக்கூடாது என Gensericடமிருந்து உறுதிமொழியைப் பெற்றார் திருத்தந்தை பெரிய லியோ. இது அனைத்து தரப்பினரிடமும் அவர் கொண்டிருந்த செல்வாக்கை வெளிப்படுத்துகிறது. 450ம் ஆண்டு பேரரசர் மூன்றாம் வாலன்டினியன் தன் மனைவி Licinia Eudoxia, தாய் Galla Placidia ஆகியோருடன் உரோம் நகர் வந்து, புனித பேதுரு பசிலிக்கா பெருங்கோவிலில் திருத்தந்தை பெரிய லியோ அவர்கள் நிறைவேற்றிய திருப்பலியில் நன்றியுடன் கலந்துகொண்டது பிறிதொரு சான்று. புனித பவுல் பசிலிக்கா பெருங்கோவிலின் மேற்கூரை, மின்னலால் சேதமாக்கப்பட்டபோது, அதனை சீரமைத்தவர் இத்திருத்தந்தையே.

திருத்தந்தை புனித பெரிய லியோவின் ஆன்மீக அக்கறையும் புகழ்பெற்றது. இவரின் மறையுரைகளுள் 96 இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இவர் தலத்திருஅவைகளுக்கு எழுதிய கடிதங்களுள் 143 இன்றும் போற்றிப்  பாதுகாக்கப்படுகின்றன. 461ம் ஆண்டு நவம்பர் 10ம் தேதி இறந்த இவருக்கு, புனித பேதுரு பசிலிக்காவுக்குள் திருப்பலி மேடை கட்டப்பட்டு கௌரவிக்கப்பட்டுவருகிறது. 1754ம் ஆண்டு, புனித முதலாம் லியோவை, திருஅவையின் மறை வல்லுனராக அறிவித்தார், திருத்தந்தை 14ம் பெனடிக்ட்.

அன்புள்ளங்களே, திருத்தந்தையர் Hilarius, மற்றும், Simplicius அவர்களைக் குறித்து, வரும் வாரத்தில் நோக்குவோம்.

25 November 2020, 15:27