தேடுதல்

GONI புயல் GONI புயல்  (ANSA)

இயற்கைப் பேரிடர்களுக்கு, சூழலியல் குறித்த அரசின் மெத்தனமே

மரங்கள் தொடர்ந்து வெட்டப்படுவது குறித்து அரசு அதிகாரிகள் அக்கறையற்று இருப்பதையே, இயற்கைப் பேரிடர்கள் நினைவுபடுத்துகின்றன – பிலிப்பீன்ஸ் ஆயர் Baylon

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

பிலிப்பீன்ஸ் நாட்டின் தென் பகுதியிலுள்ள Luzon மாநிலத்தை கடுமையாய் தாக்கியுள்ள Goni புயலால் இடம்பெற்றுள்ள, உயிர்க்கொல்லி மண்சரிவுகளுக்கு, கல்வெட்டும் தொழிற்சாலைகளைக் குறை கூறியுள்ளார், அந்நாட்டு ஆயர் ஒருவர்.

நவம்பர் 01, இஞ்ஞாயிறன்று தாக்கிய இந்த கடும் புயலால், Albay மாநிலத்தில் குறைந்தது முன்னூறு வீடுகள் மண்ணுக்குள் புதைந்துவிட்டன என்று கூறிய Legaspi ஆயர் Joel Baylon அவர்கள், இந்த அழிவுகளுக்கு, Mayon எரிமலைப் பகுதியில் இடம்பெறும் கல்வெட்டும் தொழிற்சாலைகளே பெரும்பாலும் காரணம் என்று கூறியுள்ளார்.

Mayon எரிமலைப் பகுதியில் 11 கல்வெட்டும் தொழிற்சாலைகள் உள்ளன என்றும், இவை குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ளவேண்டும் என்றும், ஆயர் Baylon அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

புயலின் வேகத்தை, எதிர்கொள்வதற்கு நம்மிடம் சக்தியும் வளங்களும்  கிடையாது, ஆயினும், இயற்கைப் பேரிடர்களைக் குறைப்பதற்கு நம்மால் இயன்ற சிறிய செயல்களை, குறிப்பாக, மரங்களை அழிக்காமலும், கல்வெட்டாமலும் இருக்கலாம் என்று, ஆயர் Baylon அவர்கள் கூறியுள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவா உமக்கே புகழ் என்ற தனது திருமடலில் சுற்றுச்சூழலை பராமரிக்கவேண்டும் என்று விடுத்துள்ள அழைப்பை அதிகாரிகள் கவனத்தில் ஏற்கவேண்டும் என்று கேட்டுக்கொண்ட ஆயர் Baylon அவர்கள், மரங்கள் தொடர்ந்து வெட்டப்படுவது குறித்து அரசு அதிகாரிகள் அக்கறையற்று இருப்பதையே இந்த இயற்கைப் பேரிடர்கள் நினைவுபடுத்துகின்றன என்று கூறியுள்ளார். (UCAN)

03 November 2020, 14:56