தேடுதல்

மொசாம்பிக் நாட்டில் தீவிரவாத தாக்குதல்களையடுத்து இராணுவத்தினரின் கண்காணிப்பு பணி மொசாம்பிக் நாட்டில் தீவிரவாத தாக்குதல்களையடுத்து இராணுவத்தினரின் கண்காணிப்பு பணி  (AFP or licensors)

ACN அமைப்பு, அவசர நிதி உதவியாக, ஒரு இலட்சம் யூரோக்கள்

மொசாம்பிக் நாட்டில் கடந்த சில நாள்களாக நடைபெற்றுவரும் 600க்கும் மேற்பட்ட தாக்குதல்களால், 2000த்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் 3,10,000 பேர் தங்கள் இல்லங்களை விட்டு வெளியேறியுள்ளனர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ISIS எனப்படும் இஸ்லாமிய தீவிரவாதக் குழுவினரால், மொசாம்பிக் நாட்டில் 50க்கும் மேற்பட்டோர் தலைவெட்டப்பட்டு கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டிற்கு, தேவையில் உள்ள திருஅவைக்கு உதவி என்ற பெயரில் செயல்படும் ACN என்ற பிறரன்பு அமைப்பு, அவசர நிதி உதவியாக ஒரு இலட்சம் யூரோக்கள் அனுப்பியுள்ளது என்று ICN கிறிஸ்தவ செய்தி கூறுகிறது.

மொசாம்பிக் நாட்டில் உள்ள Cabo Delgado என்ற பகுதியில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பல்வேறு தாக்குதல்களின் ஒரு பகுதியாக, ஒரு கால்பந்தாட்ட அரங்கத்தில் தீவிரவாதக் குழுவினர் 50க்கும் மேற்பட்டோரை கொன்றுள்ள நிகழ்வு குறித்து அந்நாட்டு காவல் துறை உறுதி செய்துள்ளது.

கடந்த சில நாள்களாக நடைபெற்றுவரும் 600க்கும் மேற்பட்ட தாக்குதல்களால், 2000த்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், மேலும் 3,10,000 பேர் தங்கள் இல்லங்களை விட்டு வெளியேறியுள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

இல்லங்களை இழந்தோருக்கு அவசர உதவியாக, போர்வைகள், உடைகள், உணவு மற்றும் இந்தக் கொள்ளைநோயிலிருந்து காப்பதற்கு தடுப்புக்கவசங்கள் மற்றும் மருந்து ஆகியவற்றை ACN அமைப்பு வழங்கியுள்ளதென்று ICN செய்தி கூறுகிறது.

மத்திய ஆப்பிரிக்காவிலிருந்து மொசாம்பிக் நாட்டிற்குள் புகுந்த தீவிரவாதக் குழுவினர், Muidumbe என்ற ஊரிலுள்ள கால்பந்தாட்ட அரங்கத்தை தங்கள் கொலைக்களமாக மாற்றி, 15 குழந்தைகள் உட்பட, 50க்கும் அதிகமான இளையோரின் தலையை வெட்டி கொன்றுள்ளனர் என்று ICN செய்தி கூறுகிறது.

இந்தத் தாக்குதல்களில், கோவில்கள், அருள்சகோதரிகளின் இல்லங்கள் ஆகியவை தீக்கிரையாக்கப்பட்டுள்ளன என்றும், இரு அருள் சகோதரிகள் கடத்தப்பட்டுள்ளனர் என்றும் அருள் சகோதரி Blanca Nubia Zapata அவர்கள் ACN அமைப்பிடம் கூறினார்.

11 November 2020, 15:01