தேடுதல்

Vatican News
குவாதலூப்பே அன்னை மரியா பசிலிக்காவுக்கு வெளியே பக்தர்கள் குவாதலூப்பே அன்னை மரியா பசிலிக்காவுக்கு வெளியே பக்தர்கள்  

பக்தர்களின் பங்கேற்பின்றி குவாதலூப்பே மரியாவின் விழா

இந்த கொள்ளைநோய் காலத்தில் குவாதலூப்பே அன்னை மரியா நம் இல்லங்களைத் தேடி வருவார் என்ற எண்ணத்துடன் இந்த விழாவைக் கொண்டாடுவோம் - மெக்சிகோ ஆயர் பேரவையின் தலைவர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

மெக்சிகோ நாட்டின் குவாதலூப்பே அன்னை மரியா திருத்தலத்தில், ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 12ம் தேதி சிறப்பிக்கப்படும் அன்னையின் திருநாள், இவ்வாண்டு, பக்தர்களின் பங்கேற்பின்றி நடைபெறும் என்று அந்நாட்டு ஆயர் பேரவை அறிவித்துள்ளது.

நவம்பர் 24, இச்செவ்வாயன்று, இந்தத் தகவலை செய்தியாளர்கள் கூட்டத்தில் வெளியிட்ட மெக்சிகோ கர்தினால் Carlos Aguiar Retes அவர்களும், மெக்சிகோ நகர மேயர் Claudia Sheinbaum அவர்களும், கோவிட்-19 கொள்ளைநோயை மனதில் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவை மக்கள் ஏற்று, தங்கள் இல்லத்தில் இருந்தவண்ணம் அன்னையின் விழாவைக் கொண்டாட கேட்டுக்கொண்டனர்.

உலகப் புகழ்பெற்ற குவாதலூப்பே அன்னை மரியா திருத்தலத்தில் கொண்டாடப்படும் இவ்விழா, ஒவ்வொரு பங்கிலும் கொண்டாடப்படும் என்றும், இத்திருத்தலத்தில் நடைபெறும் விழா நிகழ்வுகள், ஊடகங்கள் வழியே நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேவையில் இருக்கும் அனைவரையும் அன்னை மரியா தேடிவருவார் என்பதை அறிந்துள்ள நாம், குறிப்பாக, இந்த கொள்ளைநோய் காலத்தில், அவர், நம் இல்லங்களைத் தேடி வருவார் என்ற எண்ணத்துடன், இந்த விழாவைக் கொண்டாடுவோம் என்று, மெக்சிகோ ஆயர் பேரவையின் தலைவர், பேராயர் Rogelio Cabrera López அவர்கள், செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறினார்.

குவாதலூப்பே அன்னை மரியாவின் பசிலிக்கா நிறுவப்பட்டபின், இதுவரை, இவ்விழா 1926ம் ஆண்டுக்கும், 1929ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், மெக்சிகோ தலத்திருஅவைக்கு எதிராக ஏற்பட்ட பெரும் இன்னல்கள் காலத்தில் நிறுத்தப்பட்டது என்றும், அதைத் தொடர்ந்து தற்போது, இக்கொள்ளைநோயின் காரணமாக, இவ்விழா மக்களின் பங்கேற்பின்றி நடைபெறும் என்றும் UCA செய்தி கூறுகிறது. (UCAN)

26 November 2020, 14:20