தேடுதல்

ஐரோப்பிய ஒன்றிய ஆயர் பேரவைகள் ஒருங்கிணைப்பின் இலச்சனை ஐரோப்பிய ஒன்றிய ஆயர் பேரவைகள் ஒருங்கிணைப்பின் இலச்சனை 

கொள்ளைநோய்க்குப்பின் ஐரோப்பா – ஆயர்களின் செய்தி

ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்காலம், வெறும் பொருளாதாரம் மற்றும் நிதிநிலை ஆகியவற்றை மட்டும் சார்ந்தது அல்ல, மாறாக, ஒரு புதிய மனநிலையையும், ஆன்மீக வழியில் மனமாற்றத்தையும் சார்ந்தது – ஐரோப்பிய ஆயர்கள்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இவ்வுலகை பெருமளவு சிதைத்துள்ள கோவிட்-19 கொள்ளைநோயிலிருந்து விடுபட்டு, நாம் கட்டியெழுப்பும் சமுதாயத்தில், ஐரோப்பிய கண்டத்தின் அடிப்படையாக நிலவிய ஒருங்கிணைப்பு, சுதந்திரம், மனித மாண்பு, குடியாட்சி, சமத்துவம் என்ற விழுமியங்களை, ஐரோப்பிய அரசுகள் மீண்டும் நிலைநிறுத்துமாறு, விண்ணப்பிக்கிறோம் என்று, ஐரோப்பிய ஆயர்கள், ஐரோப்பிய ஒன்றியத்தின் பல்வேறு அரசுகளுக்கும், நிறுவனங்களுக்கும், செய்தியொன்றை அனுப்பியுள்ளனர்.

"நம்பிக்கையையும், ஒருங்கிணைப்பையும் மீண்டும் பெற" என்ற தலைப்பில் ஐரோப்பிய ஆயர் பேரவைகளின் தலைவர்கள் அனைவரும் இணைந்து, நவம்பர் 18, இப்புதனன்று வெளியிட்டுள்ள இச்செய்தியில், உலகளாவிய உடன்பிறந்த உணர்வை கட்டியெழுப்ப முயல்வோம் என்ற அழைப்பை விடுத்துள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றிய ஆயர் பேரவைகள் ஒருங்கிணைப்பின் தலைவர், கர்தினால் Jean-Claude Hollerich, இத்தாலிய ஆயர் பேரவை தலைவர், கர்தினால் Gualtiero Bassetti, பெல்ஜியம் ஆயர் பேரவையின் தலைவர், கர்தினால் Jozef De Kesel, ஸ்பெயின் பேரவைத் தலைவர், கர்தினால் Juan José Omella Omella ஆகியோர் உட்பட, 25 நாடுகளிலுள்ள ஆயர் பேரவைகளின் தலைவர்கள் இணைந்து இச்செய்தியை வெளியிட்டுள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்காலம், வெறும் பொருளாதாரம் மற்றும் நிதிநிலை ஆகியவற்றை மட்டும் சார்ந்தது அல்ல, மாறாக, ஒரு புதிய மனநிலையையும், ஆன்மீக வழியில் மனமாற்றத்தையும் சார்ந்தது என்பதை, ஆயர்கள், தங்கள் செய்தியில் வலியுறுத்தியுள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளின் ஒருங்கிணைப்பு என்ற அம்சத்தில், புலம்பெயர்ந்தோர் கட்டாயம் ஒரு முக்கிய இடத்தைப் பெறவேண்டும் என்பதை சுட்டிக்காட்டியுள்ள ஆயர்கள், தற்போதைய கொள்ளைநோய் காலத்தில், மிகவும் ஆபத்தான முறையில், நலவாழ்வு பிரச்சனைகளை சந்தித்துவரும் புலம்பெயர்ந்தோருடன் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்துவது, நம் அவசரத் தேவை என்று கூறியுள்ளனர்.

தான் என்ற நிலையைக் கடந்து, அடுத்தவரை நோக்கி, குறிப்பாக, தேவையிலும், ஆபத்திலும் வாழும் மக்களை நோக்கிச் செல்வதே, நம் மத நம்பிக்கை நமக்கு விடுக்கும் அழைப்பு என்பதை, ஐரோப்பிய ஆயர் பேரவைகளின் தலைவர்கள், இச்செய்தியில் பதிவு செய்துள்ளனர்.

18 November 2020, 14:15